அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்
ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.
தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுஸைன் பின் வஹ்வஹ்; நூல்: அபூ தாவூத் 2747
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் உர்வா பின் ஸயீத் என்பார் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமாகும்.
மேலும் நோய் விசாரிக்கச் சென்றால் நல்லதையே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம்.
ஒரு நோயாளி வீட்டுக்குச் சென்று சீக்கிரம் இவர் போய் விடுவார். போனதும் சொல்லி அனுப்புங்கள் என்பன போன்ற அநாகரிகமான பேச்சை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனவே இதன் கருத்தும் தவறாகவுள்ளது.
உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை வீட்டில் வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவரது உடலை உடனே கப்ருக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: தப்ரானி 13438
இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அப்துல்லாஹ் பாபலத்தி என்பவரும் அய்யூப் பின் நஹீக் என்பவரும் இடம் பெறுகின்றனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
ஜனாஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி வைத்தவர்களாவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புகாரி 1315
இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் இவர்கள் கூறுகின்ற கருத்தை இது தரவில்லை. உடலைத் தோளில் தூக்கி விட்டால் வேகமாக நடந்து செல்ல வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது. உங்கள் தோள்களிலிருந்து என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம். வீட்டில் உடலை வைத்திருப்பதற்கும், இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
எனவே உடலை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் இல்லை.
அதிகமான பேர் தொழுகையில் பங்கேற்பது இறந்தவருக்குப் பயன் தரும் என்ற ஹதீஸ்களை வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
அதிகமான மக்கள் சேருவதற்காகத் தாமதம் செய்யலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே அடக்கம் செய்து விட வேண்டும் என்று கட்டளையிடாத காரணத்தால் தான் அவர்கள் மூன்றாம் நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடும்.
ஆயினும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் மூன்று நாட்களுக்கு மேல் உடலை வைத்திருக்கக் கூடாது. ஒரு வீட்டில் உடல் இருக்கும் வரை சோகம் நீடிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது..