கருத்தடை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா❓

கருத்தடை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா

தற்காலிக கருத்தடை செய்துகொள்ள அனுமதியுள்ளது!

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) செய்து கொள்ளலாமா என்று கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!

ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை! என்று நபி (அலை) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஸயீத் (ரலி)
நூல்கள்: (புகாரி 2229, 2542, 4138, 5210, 6603, 7409. முஸ்லிம் 2834, 2835, 2836)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னிடம் ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும், தண்ணீர் சுமப்பவளாகவும் இருக்கிறாள். நான் அவளிடம் சென்று வருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை என்று கூறினார்.

அதற்கு, நீ விரும்பினால் புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள். ஆயினும் அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்து சேரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2843.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, நாங்கள் அஸ்ல்‘ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம்.

அறிவிப்பவர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) நூல்கள்: (புகாரி 5207, 5208. முஸ்லிம் 2845)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அஸ்ல் செய்துகொண்டிருந்தோம். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தகவல் எட்டியபோது, அவ்வாறு செய்யவேண்டாம் என எங்களுக்கு அவர்கள் தடைவிதிக்கவில்லை

அறிவிப்பவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2846

மேல்கண்ட நபிமொழிகள் தற்காலிக கருத்தடை செய்துகொள்ள ஆதாரமாக உள்ளன.

ஆணுறை போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாகக்,கருத்தடை செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.

கருத்தடைக்கு காப்பர் டி உபயோகிப்பது பெண்களுக்கு பக்க விளைவை ஏற்படுத்துமெனில் கருப்பையில் காப்பர் டி உபயோகிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

[அல்குர்ஆன் 2:195]

குறிப்பு:

அஸ்ல் : கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறை தான் அஸ்ல் எனப்படுகிறது


ஏகத்துவம்