குளிப்பாட்ட இயலாத நிலையில்…‎

இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் ‎குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.‎

குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், ‎துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து ‎கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட ‎இயலாத நிலை ஏற்படுவதுண்டு.‎

குண்டு வெடிப்பு, வாகன விபத்து போன்றவை நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை என்றாலும் தீயில் எரிந்து ‎போகவும், துண்டு துண்டாக சிதைக்கப்படவும் வாய்ப்புகள் ‎இருந்தன.‎

ஆனாலும் எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎காலத்தில் இது போன்ற நிலையில் மரணமடைந்ததாகக் காண ‎முடியவில்லை.‎

போர்க்களத்தில் மட்டும் சிலரது உடல்கள் சிதைக்கப்பட்டன. ‎ஷஹீத்கள் என்ற முறையில் அவர்களின் உடலைக் ‎குளிப்பாட்டக் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளது.‎

சாதாரணமாக இது போன்ற நிலை நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் காலத்தில் யாருக்கும் ஏற்படாததால் இத்தகையோரின் ‎உடல்களைக் குளிப்பாட்டுவது பற்றி நேரடியாக எந்த ஆதாரமும் ‎கிடைக்கவில்லை.‎

நேரடி ஆதாரம் கிடைக்காவிட்டாலும் வேறு ஆதாரங்களின் ‎துணையுடன் இது பற்றி நாம் முடிவுக்கு வர முடியும்.‎

உயிருடன் இருக்கும் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் ‎இருந்தால் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யுமாறு ‎மார்க்கம் கூறுகிறது.‎

சிதைந்து போன உடல்களைக் குளிப்பாட்டுவது அதை விடக் ‎கடுமையானது. எனவே குளிப்பாட்டுவதற்குப் பதிலாக தயம்மும் ‎செய்யலாம். அதற்கும் இயலாத நிலை ஏற்பட்டால் ஒன்றும் ‎செய்யாமல் அடக்கம் செய்வது குற்றமாகாது. குளிப்பாட்ட ‎இயலாது என்ற நிலையில் தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.‎

நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை ‎செய்யுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறியுள்ளார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎; நூல்: புகாரி 7288‎

எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேலே நாம் சிரமப்படுத்த ‎மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.‎

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் ‎சிரமப்படுத்த மாட்டான்.‎ திருக்குர்ஆன் 2:286‎

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.‎ திருக்குர்ஆன் 6:152‎

எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் ‎சிரமப்படுத்துவதில்லை.‎ திருக்குர்ஆன் 7:42‎

எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.‎ திருக்குர்ஆன் 23:62‎

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் ‎செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு ‎அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் ‎எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் ‎சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ‎ஏற்படுத்துவான்.‎ திருக்குர்ஆன் 65:7‎

எனவே நம்மால் இயலாத நிலையில் எந்தக் காரியத்தையும் ‎விட்டு விடுவது குற்றமாகாது.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed