தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓

தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓
https://eagathuvam.com/%e0%ae%a4%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b9%e0%af%80%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%a4%e0%af%80%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2/

தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது என்கின்றனர்⁉️

இது சரியா❓

குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வாஹித் (ஒருவன்) என்றும் வஹ்தஹு (அவன் தனித்தவன்) என்றும் பல இடங்களில் கூறுகின்றான்.

ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன் (9 : 31)

இந்த வசனத்தில் ஒரே என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வாஹித் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத் என்ற வார்த்தைகள்.

தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவன் எனக் கூறுதல் என்பது பொருள். தவ்ஹீத்வாதி என்றால் ஒரே இறைவனை நம்பக்கூடியவன் என்பது பொருள்.

லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற கலிமாவின் சுருக்கமாகவும் இஸ்லாம் என்ற வார்த்தையின் மாற்றுச் சொல்லாகவும் தவ்ஹீத் என்ற சொல் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற இஸ்லாமியக் கொள்கையை குறிக்க தவ்ஹீத் என்ற சொல்லிலிருந்து பிரிந்து வரும் யுவஹ்ஹிது என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிய போது அவர்களிடம், “நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, (அல்லாஹ் ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள்.

நூல்: புகாரி (7372)

யுவஹ்ஹிது என்ற சொல்லுக்குள்ளும், யுவஹ்ஹிதூ என்ற சொல்லுக்கு உள்ளேயும் தவ்ஹீத் எனும் சொல் அடங்கியுள்ளது என்பதை அறிவு படைத்த மக்கள் அறிந்து கொள்வார்கள்.

தவ்ஹீத்வாதி என்ற சொல்லும் கூட ஹதீஸ் நூல்களில் உள்ளது. வாதி என்பதற்கு அஹ்ல் என்ற சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க்வாதி அஹ்ல் அல் கிதாப் வேதமுடையோர் என்று பொருள். அஹ்ல் அத்தவ்ஹீத் என்றால் தவ்ஹீத்வாதி எனப் பொருள். அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நூல் திர்மிதி 2522, அஹ்மத் 14665

தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால் கூட அவர் கடைசியில் சொர்க்கம் செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்பதும் தவ்ஹீத் வாதி என்பதும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உள்ளடக்கிய சொல்லாகும்.


ஏகத்துவம்