இறந்தவரைக் குளிப்பாட்டுதல்
ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.
இறந்தவுடன் கசப் மாற்றுவது என்ற பெயரில் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
சில ஊர்களில் இதை விட அதிக எண்ணிக்கையிலும் குளிப்பாட்டுகின்றனர்.
இப்படிப் பல தடவை அல்லது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும் என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. பொதுவாகக் குளிப்பாட்டுமாறு தான் சொல்லப்பட்டுள்ளது.
எனவே அடக்கம் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒரு தடவை குளிப்பாட்டுவது தான் அவசியம்.
சுன்னத் என்றோ, கடமை என்றோ கருதாமல் உடலிலிருந்து துர்வாடை வரக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பாட்டினால் அது குற்றமாகாது.
மார்க்கத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற தவறான எண்ணத்தை ஊட்டும் வகையில் இருந்தால் அது தவறாகும்.
ஆடைகளைக் களைதல்
உடலைக் குளிப்பாட்டும் போது அவர் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டினால் அதில் தவறில்லை. அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டினால் அதுவும் தவறல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள் என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள். அந்த நாள் இப்போது திரும்பி வந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் குளிப்பாட்டி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்கள்: அபூ தாவூத் 3141
மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்று என்ற வாசகம் அணிந்திருந்த ஆடையைக் களைந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது.
இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே அதை மாற்றியமைத்திருப்பார்கள்.
எனவே சட்டை, பேன்ட், பனியன் போன்ற ஆடைகளைக் களைந்து அவரது மறைவிடம் தெரியாத வகையில் மேலே ஒரு துணியைப் போட்டுக் கொண்டு கழுவலாம்.
குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும்
உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.
உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.
ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி); நூல்: ஹாகிம் 1307
வலப்புறத்திலிருந்து கழுவ வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளுடைய உடலைக் குளிப்பாட்டிய பெண்களிடம் இவரது வலப்புறத்திலும், உளுச் செய்யும் உறுப்புகளில் இருந்தும் ஆரம்பியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி 167, 1255, 1256