வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

வணிகப் பேரத்தில் பொய் சத்தியம்

ஒரு மனிதர் அவருடைய பொருளில் இல்லாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விற்றார். இதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கி வைத்தான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் 3:77)

ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள்முதல் செய்யும்போது) கொடுக்காத (பணத்)தைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். முஸ்லிம்களைக் கவர்(ந்து அவர்களிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது “யார் தங்களுடைய உடன்படிக்கை மூலமும் சத்தியங்களின் மூலமும் அற்பக் கிரயத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ….’ என்னும் (3:77) இறைவசனம் இறங்கியது!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி), நூல்: புகாரி 377, 2088, 2675

வியாபாரத்தில் தன்னுடைய நேர்மையை வெளிப்படுத்தி விற்க வேண்டும். அல்லாஹ் மீது சத்தியத்தைச் செய்து வியாபாரத்தை அதிகப்படுத்த விரும்பினால் அதில் எந்த பரக்கத்தும் கிடையாது. அதில் எந்தத் தேவையும் நிறைவேறாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும். ஆனால், பரக்கத்(எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2087

குறையை மக்கள் பார்க்கும்படி வைத்தல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

ஒட்டகம், மாடு, ஆடு மற்றும் கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் விட்டு, கனத்த மடியுடன் காட்டி விற்பனை செய்வது கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அவற்றின் பாலைக் கறக்காமல் விட்டுவைத்திருந்து) மடி கனக்கச் செய்யாதீர்கள்! மடி கனக்கச் செய்த இத்தகைய பிராணிகளை வாங்கியவர் விரும்பினால் பால் கறந்து பார்த்து அதை வைத்துக் கொள்ளலாம்! விரும்பாவிட்டால் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்துடன் அதை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த இரண்டில் எதைச் செய்வதற்கும் அவருக்கு அனுமதி உண்டு.

மற்றோர் அறிவிப்பில் “(விரும்பாவிட்டால்) ஒரு ஸாஉ உணவுப் பொருளுடன் திருப்பிக் கொடுக்கும் இந்த உரிமை (பிராணியை வாங்கிய நாளிலிருந்து) மூன்று நாட்கள் வரையிலும் தான்என்றும் காணப்படுகிறது.

பேரீச்சம் பழத்தின் ஒரு “ஸாஉஎன்பதே அதிகமான அறிவிப்புக்களில் காணப்படுகின்றது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2148, 2150

மூன்று நாட்கள் என்பதைப்  பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்பதானால், ஒரு “ஸாஉஉணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக் கூட இருக்கலாம்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3054

தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தனது உடைமையல்லாத வற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் (பய்உல் ஃகரர்), பிறக்காத உயிரினத்தை விற்பதும் கூடாது.

ஒருவர் ஒரு பொருளை விற்கிறார் என்றால் அந்தப் பொருள் அவர் முன்பாக  இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் விலை பேசப்பட வேண்டும். மாறாக தன்னிடம் இல்லாமல் இருக்கும் போது அதற்கு விலை பேசக்கூடாது. உதாரணமாக ஒரு ஆடு இருக்கிறது. அந்த ஆட்டுக்குத் தான் விலை பேச வேண்டும். மாறாக அதனுடைய குட்டிக்கு விலை பேசக் கூடாது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். “இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் வியாபாரமே இது!

நூல்: ஆதாரம் புகாரி 2143

விற்கும் போது தெளிவுபடுத்துதல்

நாம் ஒரு தோட்டத்தை விற்கிறோம் என்றால் அதைக் கொடுக்கும் போதே தெளிவுபடுத்திக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, தோட்டத்தைக் கொடுக்கும் போது முழுவதுமாகக் கொடுத்து விட வேண்டும். அப்படி இல்லாமல் கொடுத்ததன் பின்னால் நல்லதை மட்டும் திருப்பி எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா‘, “முஸாபனா‘, “முஆவமா‘, “முகாபராஆகியவற்றையும், “ஒரு பகுதியைத் தவிரஎன்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள். “அராயாவில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் அபுஸ் ஸுபைர் (ரஹ்), சயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ” “முஆவமாஎன்பது, (மரத்திலுள்ள) பழங்களின் பல்லாண்டு விளைச்சலை விற்பதாகும்என்று கூறினார்.

நூல்: முஸ்லிம் 3114

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா‘, “முஸாபனா‘, “முகாபராஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். “கனிதல்‘ (“இஷ்காஹ்‘) என்பது, பழம் சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். “முஹாகலாஎன்பது, (அறுவடை செய்யப்படாத) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

முஸாபனாஎன்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். “முகாபராஎன்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 3112

முலாமஸா எனும் வியாபாரம்

முலாமஸா என்பது துணியை விரித்துப் பார்க்காமலேயே அதைத் தொட்டவுடன் வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன் விற்பனை செய்வதாகும். இதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அபூசயீத்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் “முனாபதாவியாபாரத்தைத் தடை செய்தார்கள். “முனாபதாஎன்பது, ஒருவர் தமது துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து(விட்டால் அதை அவர் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன்)அவரிடம் விற்பதாகும். மேலும் முலாமஸா எனும் வியாபாரத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல்: புகாரி 2144

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள்.

வியாபாரத்தில் “முலாமஸா’ மற்றும் “முனாபஃதா’ ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். “முலாமஸா’ என்றால், இரவிலோ பக-லோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக் கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும்.

முனாபதாஎன்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார(ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 5820

லிமாஸ் அல்லது முலாமஸா என்பதற்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் தாம் வாங்க விரும்பும் துணியைக் கையால் தொட்டுப் பார்த்துவிட்டாலே வியாபார ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்க்கும்போது குறையிருந்தாலும் வியாபாரத்தை ரத்துச் செய்ய முடியாத வணிக முறைக்கே “முலாமஸா’ என்று பெயர்.

நபாத் அல்லது முனாபஃதா என்பதற்கு எறிதல் என்று பொருள். வாங்க வந்தவர் மீது துணியைத் தூக்கி எறிந்துவிட்டாலே அதை அவர் வாங்கி விட்டதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்த்த பின் குறை தென்பட்டாலும் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத முறைக்கே “முனாபஃதா’ என்பர்.

இந்த இரு முறைகளாலும் நுகர்வோர் பாதிக்கப்பட இடமுண்டு என்பதால் இவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed