ஏமாற்று வியாபாரம்

ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததுஎன்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 7:85

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின் வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்என்றார். “என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

அல்குர்ஆன் 11:84, 85

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு.

அல்குர்ஆன் 17:35

மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

அல்குர்ஆன் 26:183

அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6:152

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.

அல்குர்ஆன் 83:1-6

சுண்டு வியாபரம்

கல்லெறி வியாபாரம் (பைஉல் ஹஸாத்) மற்றும் மோசடி வியாபாரம் (பைஉல் ஃகரர்) ஆகியவை செல்லாது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 3033

சுண்டு வியாபாரத்தை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். இன்றைய நமது காலத்தில் ரூபாயை வைத்துச் சுண்டி விடுவது போன்ற நடைமுறை உள்ளது. இம்மாதிரியான வியாபாரத்தை தடை செய்தார்கள்.

வாங்கும் போதும் கொடுக்கும் போதும் ஏமாற்றுவதாக இருந்தால் ஹராம் ஆகும், இன்னும் வியாபாரத்தில் அதிகமான ஏமாற்றம் இருக்கிறது. அதில் நாம் கண்டிப்பாகக் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

அப்துல் மஜீத் பின் வஹ்ப் என்பார் அறிவிக்கின்றார்கள்: அதாவு பின் ஹாலித் (ரலி) அவர்கள் என்னிடம் “நபியவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த ஒரு கடிதத்தை உனக்கு நான் படித்துக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர் ஒரு ஏட்டை வெளியில் எடுத்தார். அதில் (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது)

அதாஉ பின் காலித் என்பாரிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை, குற்றம்புரியும் தன்மையுமில்லைஎன்று எனக்கு எழுதித் தந்தார்கள்.

நூல்: திர்மிதி 1137

அதாவு பின் ஹாலித் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமையை வாங்கும் போது, “எனக்கு எழுதி கொடுங்கள்” என்று அதாவு பின் ஹாலித் (ரலி) கேட்கின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுதி கொடுக்கின்றார்கள் என்ற செய்தியை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

எனவே வியாபாரம் என்றால் இப்படி இருக்க வேண்டும். வியாபாரம் செய்யும் போது நாம் விற்கக் கூடியவராக இருந்தால் அதை எழுதிக் கேட்டால் உடனே எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக உள்ளது

குறைகளை வெளிப்படுத்த வேண்டும்

வியாபாரி ஒரு பொருளை விற்கும் போது அதில் என்ன குறைகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படுத்தாமல் விற்கக் கூடாது. இது வாங்குபவனுக்கும் விற்பவனுக்கும் சமமானது. எந்தக் குறைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தி விற்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

நூல்: புகாரி 2079

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்குச் சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிவுபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 2237

அடங்காத தாகமுள்ள ஒட்டகத்தையும் சிரங்கு பிடித்த ஒட்டகத்தையும் வாங்குதல்

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று “அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்!என்றார். நவ்வாஸ் “யாரிடம் விற்றீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “இன்ன பெரியாரிடம் விற்றேன்!என்றார்.

அதற்கு நவ்வாஸ், “உமக்கு கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர் (ரலி) அவர்கள்தாம்!என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றார். “எனது பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்று விட்டார்; அவர் உங்களை யாரென்று அறியவில்லைஎன்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அப்படியானால் அதை ஓட்டிச் செல்வீராக!என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும், இப்னு உமர் (ரலி) அவர்கள், “அதை விட்டுவிடுவீராக! தொற்று நோய் கிடையாதுஎன்ற நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் எனது ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது)என்றார்கள்.

நூல்: புகாரி 2099

ஒருவரிடம் குறையைத் தெளிவுபடுத்தி அதை அவர் பொருந்திக் கொண்டால் விற்பது கூடும் என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed