மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை

கண்களை மூடுதல்

ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் ‎காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட ‎வேண்டும்.‎

அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக் காணப்பட்டது. ‎உடனே அதை மூடினார்கள்.  உயிர் கைப்பற்றப்படும் போது ‎பார்வை அதைத் தொடர்கிறது  என்றும் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)‎; நூல்: முஸ்லிம் 1528‎

உடலுக்கு நறுமணம் பூசுதல்

இறந்தவரின் உடலிலிருந்து துர்நாற்றம் வந்தால் அதை ‎மறைப்பதற்காக நறுமணம் பூச வேண்டும்.‎

இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் மரணித்த போது ‎‎ இவருக்கு நறுமணம் பூச வேண்டாம்  என்று நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)‎;நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851)‎

பொதுவாக இறந்தவர் உடலுக்கு நறுமணம் பூசுவது ‎நடைமுறையில் இருந்ததால் தான் இஹ்ராம் அணிந்தவருக்கு ‎நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தடை செய்தார்கள்.‎

உடலை முழுமையாக மூடி வைத்தல்

ஒருவர் இறந்தவுடன் அவரது உடலை போர்வை ‎போன்றவற்றால் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது யமன் நாட்டில் ‎தயாரான கோடு போடப்பட்ட போர்வையால் மூடப்பட்டனர்.‎

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)‎; நூல்: புகாரி 5814‎

பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டலாம்

போர்வையால் மூடப்பட்டாலும் பார்க்க வரும் பார்வையாளர்கள் ‎விரும்பினால் அவர்களுக்காக முகத்தைத் திறந்து காட்டலாம்.‎

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அபூபக்ர் (ரலி) ‎அவர்கள் (மதீனாவின் புறநகர் பகுதியான) ஸுன்ஹ் என்ற ‎இடத்தில் தமது வீட்டில் இருந்தார்கள். கேள்விப்பட்டு குதிரையில் ‎விரைந்து வந்தார்கள். குதிரையிலிருந்து இறங்கி யாரிடமும் ‎பேசாமல் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். ஆயிஷா அவர்களின் ‎அறைக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலை ‎நாடிச் சென்றார்கள். கோடுகள் போடப்பட்ட யமன் நாட்டுப் ‎போர்வையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎போர்த்தப்பட்டிருந்தார்கள். உடனே அவர்களின் முகத்தை ‎விலக்கிப் பார்த்தனர்.

அவர்கள் மீது விழுந்து முத்தமிட்டு பின்னர் ‎அழலானார்கள். பின்னர்  அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ‎உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் உங்களுக்கு இரண்டு ‎மரணத்தை ஏறப்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ‎மரணத்தை அடைந்து விட்டீர்கள் என்று கூறினார்கள். வெளியே ‎வந்த போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் பேசிக் ‎கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்து உட்காருங்கள் என்று அபூ ‎பக்ர் (ரலி) கூறினார்கள். அவர் உட்கார மறுத்தார். மீண்டும் ‎உட்காரச் சொன்னார்கள். அப்போதும் மறுத்தார். உடனே அபூ பக்ர் ‎‎(ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து உரை ‎நிகழ்த்தினார்கள்.

மக்களெல்லாம் உமரை விட்டு அபூ பக்ர் (ரலி) ‎அருகில் திரண்டனர்.  உங்களில் யாராவது முஹம்மது (ஸல்) ‎அவர்களை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து ‎கொள்ளுங்கள்) முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து ‎விட்டார்கள். உங்களில் யாராவது அல்லாஹ்வை ‎வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) அவன் ‎தான் சாகாமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்  என்று ‎கூறிவிட்டு,  முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு ‎முன் பல தூதர்கள் சென்று விட்டனர்  என்ற வசனத்தை ஓதிக் ‎காட்டினார்கள். அபூ பக்ர் (ரலி) ஓதிக் காட்டும் வரை அப்படி ஒரு ‎வசனம் இருப்பதை மக்கள் அறியாது இருந்தனர். அதைக் கேட்ட ‎ஒவ்வொருவரும் அதை ஓதலானார்கள்.‎

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)‎, நூல்: புகாரி 1242, 3670, 4454‎

மூடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தை அபூ ‎பக்ர் (ரலி) அவர்கள் திறந்து பார்த்துள்ளனர்.‎

இறந்தவரின் உடலை மூடி வைப்பதற்கும், பார்வையாளர்களுக்கு ‎முகத்தைத் திறந்து காட்டுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களின் அங்கீகாரம் இதற்கு உள்ளது என்பதைப் பின்வரும் ‎ஹதீஸிலிருந்து அறியலாம்.‎

என் தந்தை கொல்லப்பட்ட போது நான் அழுது கொண்டே என் ‎தந்தையின் முகத்தைத் திறந்து பார்க்கலானேன். மக்கள் ‎என்னைத் தடுத்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎என்னைத் தடுக்கவில்லை

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)‎; நூல்: புகாரி 1244‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஜாபிர் ‎அவர்கள் தமது தந்தையின் முகத்தைத் திறந்து ‎பார்த்திருக்கிறார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தடுத்திருப்பார்கள்.‎

இறந்தவர் உடலில் முத்தமிடுதல்

இறந்தவர் உடலில் முத்தமிடலாம் என்றோ, முத்தமிடக்கூடாது ‎என்றோ நேரடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ‎எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.‎

மார்க்க சம்பந்தமில்லாத விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா என்று பார்க்க ‎வேண்டும். தடுத்திருக்காவிட்டால் அது அனுமதிக்கப்பட்டது ‎என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.‎

மார்க்கம் தொடர்பான வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை ‎தடுத்துள்ளார்களா என்று பார்க்கக் கூடாது. ‎அனுமதித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். அனுமதி ‎இருந்தால் அதைச் செய்ய வேண்டும். அனுமதிக்கு ஆதாரம் ‎இல்லாவிட்டால் அதைச் செய்யக் கூடாது.‎

இந்த அடிப்படையில் முத்தமிடுதல் என்பது வணக்கம் அல்ல. ‎நமது அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஆதாரம் கிடைக்காவிட்டால் ‎அனுமதி என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.‎

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அபூ ‎பக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் முகத்தில் ‎முத்தமிட்டுள்ளனர் (புகாரி 1242, 3670, 4454, 5712, 4457) என்பது இதை ‎வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது.‎

எனவே மரணித்தவர் மீது அன்பு வைத்துள்ளவர்கள் ‎முத்தமிட்டால் அதைத் தடுக்கக் கூடாது. அன்னிய ஆண்கள் ‎அன்னியப் பெண்களுக்கு முத்தமிட பொதுவான தடை உள்ளதால் ‎அவர்கள் தவிர மற்றவர்கள் இறந்தவர்கள் உடலை ‎முத்தமிட்டால் அது குற்றமாகாது.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed