தூய்மை பற்றி இஸ்லாம்

இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது .

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.

அல்குர்ஆன் 87:14

தூய்மை என்பது விரிந்த பொருள் கொண்ட வார்த்தையாகும். இது ஒருவன் தன் உடல் மற்றும் அவனுடைய பொருட்கள் மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பதையும், பெற்றோர் மற்றும் உறவினர்கள், அண்டை, அயலார் மற்றும் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் நேர்மையாக, நீதியாக, நம்பிக்கைக்குரியவராக, ஒழுக்கமிக்கவராக இருப்பதையும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதையும் நம்முடைய பொருட்களுக்கான ஜகாத்தை உரிய முறையில் வழங்குவதையும் மொத்தத்தில் அந்தரங்க மற்றும் வெளிப்படையான வாழ்க்கையில் தூய்மையாக இருப்பதையும் குறிக்கும் சொல்லாகும்.

உடல் தூய்மை

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இஸ்லாம் நமக்கு தூய்மையாக வாழ கற்றுக்கொடுக்கிறது .ஆன்மீகத்தின் பெயரால் நகங்களை வெட்டாமல் இருப்பதும் முடிகளை சீர்செய்யாமல் இருப்பதும் இஸ்லாத்திற்கு புறம்பான செயலாகும். பல் துலக்குதல், குளித்தல், உளுச்செய்தல், ஆடைகளை துவைத்தல், வீட்டை தூய்மைப்படுத்துதல் போன்ற தூய்மைக்கு முக்கியத்துவப்படுத்தும் விஷயத்திலும் சிலர் அசட்டையாக இருப்பதை நாம் காண்கின்றோம். பாத்திரங்களை கழுவ வேண்டும் என்பதற்காகவே ஹோட்டலில் உணவுப்பொருட்களை வாங்கும் அளவிற்கு சோம்பேறியாக உள்ளனர்.

காலையில் எழுந்தவுடன் கைகளை கழுவுதல் :

காலையில் எழுந்ததும் பல்துலக்காமல் கைகளை கழுவாமல் சாப்பிடும் வழக்கம் மக்களிடத்தில் காணப்படுகின்றது. இது சிறந்த நடைமுறையாகவும் கருதப்படுகின்றது. இதற்கு பெட் காஃபி என்று கூறிக் கொண்டு பலதுலக்காமல் அருந்துவதைப் பார்க்கிறோம். இது தூய்மையற்ற ஒரு நடைமுறையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 162

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்தி-ருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கின்றான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர),

நூல் : புகாரி 3295

பல் துலக்குதல் :

ஹுதைஃபா (ரலி-) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும்போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள்.

நூல் : புகாரி 889

ஷுரைஹ் அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ர-) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பல் துலக்குவது’ என்று பதிலளித்தார்கள்.

நூல் : முஸ்லிம் :423

கழிவறைக்குச்செல்லும் போது :

கழிவறைக்குச் செல்லும் போது என்ன ஒழுக்கங்களை பேண வேண்டும் என்ற முறைகளை இஸ்லாம் கற்றுகொடுக்கின்றது.

மர்ம உறுப்பை வலது கையால் தொடக்கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறவிஉறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி),

புகாரி :154

குளித்தல்

உடலில் உள்ள அசுத்தங்களை தூய்மை செய்யும் முறையில் மிக முக்கியமான ஒன்று தான் குளிப்பதாகும். அது சாதாரண குளிப்பாக இருந்தாலும், கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே !

குளிப்பை நிறைவேற்றிய பிறகே தொழுகை :

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் :5:6

குளிப்பு கடமையாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியது

குளிப்பு கடமையாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் விரும்பினால் உளுச் செய்வது சிறந்ததாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள்.

நூல் : முஸ்லிம் : 513

அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், “எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா?” என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்துவிட்டு (உறங்கலாம்.)” என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி :289

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ” உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங் குங்கள்” என்றார்கள்.

நூல் : புகாரி : 290

கடமையான குளிப்பின் போது :

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக் கொள்ளவில்லை.

நூல் : புகாரி : 259

கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை தேய்த்துக் கழுவுதல்:

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளியலைக்) குளிக்கும்போது (முதரில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.

நூல் : புகாரி : 260

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப் பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்” என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே நான், “இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்’ என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.

மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 552

வாரத்திற்கு ஒரு முறையாவது குளித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய கடமையாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி :898

வியர்வையுடன் இருப்பவர்கள் குளித்துத் தூய்மையாகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு துர்வாடையை ஏற்படுத்தும். இதனால் அவர்களை விட்டும் மக்கள் விலகிச்செல்லும் நிலை ஏற்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும் மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத் தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்துவருவதால் அவர்கள் மீதும் புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உடலி)லிருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்)- என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக்கூடாதா?” என்று கேட்டார்கள்.

நூல் : புகாரி 902

உளூ செய்தல்

இஸ்லாமிய கடமைகளில் முதன்மையாக உள்ள தொழுகைக்கு முன்னர் குறிப்பிட்ட உறுப்புகளை கழுவி தூய்மையாகிக் கொள்ள இஸ்லாம் கட்டளையிடுகிறது. வணக்கங்கள் மூலமும் இஸ்லாம் தூய்மை வலியுறுத்தியுள்ளது என்பதை விளங்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 5:6)

இச்சை நீர் ஏற்பட்டால்

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: இச்சைக் கசிவு நீர் (“மதீ’) அதிகமாக வெளியேறும் ஆடவனாக நான் இருந்தேன். நபி (ஸல்) அவர்களின் புதல்வி (ஃபாத்திமா என் மண பந்தத்தில்) இருந்ததால் இது பற்றிக் கேட்குமாறு (வேறு) ஒருவரை நான் பணித்தேன். அவர் (அது குறித்துக்) கேட்டபோது, “(அவ்வாறு இச்சைக் கசிவு நீர் வெளியேறினால்) உளூ செய்துகொள்வீராக! (குளிக்க வேண்டியதில்லை. ஆனால்,) பிறவி உறுப்பைக் கழுவிக்கொள்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி : 269

உறங்கும் முன் உளு செய்தல்

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்து கொள்.

நூல் : புகாரி ;247

மர்ம உறுப்பின் முடிகளை களைதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

முஸ்லிம் :436

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களை(ந்து கொள்வதற்காகச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றிக்கொள்வது ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் :430

40 நாட்களுக்கு மேல் தாமதம் கூடாது

மர்ம உறுப்பின் முடிகளை அகற்றுவதை 40 நாட்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாது

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக்கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.

நூல் : முஸ்லிம் ;431

வலது கையை பயன்படுத்துதல்

நாம் எந்தப் பொருளை சாப்பிடுவதாக குடிப்பதாக இருந்தாலும் வலது கையையே பயன்படுத்த வேண்டும், சிலர் வலது கையின் மூலம் ஏதாவது வேலை பார்த்துக்கொண்டிருந்தால் இடது கையை பயன்படுத்தி சாப்பிடுவதையும் குடிப்பதையும் வழக்கமாக்கியுள்ளனர். இதுவும் நாகரீகமற்றதாகும். இஸ்லாம் வலது புறத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கியுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : முஸ்லிம் 4108

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும், தலைவாரிக்கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.

நூல் : புகாரி 5854

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

நூல் : புகாரி 5376

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 5855

தலைவாருதல்

அதிகமான வேலை பழுவின் காரணமாக பலர் தலைமுடிகளை சீர்செய்வதில்லை. பெரும்பாலும் பெண்கள் குழந்தைகளை கவனத்தில் கொண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வரை பரட்டை தலையுடனே காணப்படுகின்றனர். அதன் பிறகும் மற்ற மற்ற வீட்டு வேலைகளின் காரணமாக தலைவிரிக்கோலமாகவே உள்ளனர். மேலும் தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை நாகரீகமாகும் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் பரட்டைத் தலையுடயவராக ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) இவர் தனது முடியைப் படிய வைக்கக்கூடிய ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : நஸயீ 5141

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக்கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

நூல் ; புகாரி 883

கணவன் முன் ஒரு பெண் நிற்கும் போது அலங்காரத்துடன் இருக்க வேண்டும். தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் மிக முக்கியமானது தலைவாருதலாகும்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) “உமக்கு என்ன அவசரம்?” என்று கேட்டார்கள். “நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணமுடித்துக்கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலை வாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்றார்கள். அதாவது “குழந்தையைத் தேடிக்கொள்” என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.

நூல் : புகாரி : 5245

ஆடையில் தூய்மை

நம்முடைய ஆடைகளை நாம் தூய்மையாக வைத்திருக்குமாறு இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகின்றது .

உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!

அல்குர்ஆன் 74 : 4,5

நபி (ஸல்)அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள் . அப்போது இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு பொருளை பெற்றுக்கொள்ளவில்லையா? என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி

நூல் : அபுதாவூத் : 3540

வெண்மை நிற ஆடை

ஆடையில் சிறந்தது வெண்மை நிற ஆடையாகும். ஏனெனில் வெள்ளை நிற ஆடையை பொறுத்த வரையில் எந்த அசுத்தம் பட்டாலும் அதை தெளிவாக காட்டிவிடும். அசுத்தத்தை தூய்மை செய்யாமல் மற்றொரு முறை அதை பயன்படுத்த முடியாது. மற்ற ஆடைகளை எத்தனை முறை எவ்வளவு அசுத்தங்களுடன் பயன்படுத்தினாலும் அது யாருக்கும் தெரியாது. எனவே தான் நபியவர்கள் வெண்மை நிற ஆடையே தூய்மையானது அதையே பயன்படுத்துமாறு உபதேசம் செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வெண்மையான ஆடைகளை அணியுங்கள் . ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும் .மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.

அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : திர்மிதி 915

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத்தூய்மையானதும் அழகுமிக்கதுமாகும்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல் : திர்மிதி 2734

அசுத்தமான ஆடையில் தொழக்கூடாது

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுதுகொள்ளலாம்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 307

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உணவு

நாம் உண்ணும் உணவு தூய்மையானவற்றையே தேர்வு செய்ய வேண்டும்.

“தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை(வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 5:4

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது .

அல்குர்ஆன் 5:6

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன்16 :115

பால் அருந்திய பிறகு வாய் கொப்பளித்தல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். பிறகு “இதில் கொழுப்பு இருக்கிறது’ (ஆகவே தான் வாய்கொப்பளித்தேன்) என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 211

நாய் பயன்படுத்திய பாத்திரத்தை தூய்மை செய்யவேண்டும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் :471

உணவுப்பாத்திரங்களைத் தூய்மையாகவும் இரவு நேரங்களில் மூடியும் வைக்கவேண்டும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : புகாரி 5623

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.

நூல்: புகாரி 5624

போதைப் பொருட்களை பயன்படுத்தகூடாது

உண்பதில் தூய்மையானதை தேர்வு செய்வதைப் போன்று உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மது, கஞ்சா, பான்பராக், அபின் போன்ற போதை தரக்கூடிய பொருட்களையும் தேர்வு செய்யக்கூடாது. பயன்படுத்தக்கூடாது.

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக! தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “உபரியானதை’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2: 219

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் (“விடைபெறும்’ ஹஜ்ஜுக்கு முன்பு யமன் நாட்டுக்கு) அனுப்பியபோது எங்கள் இருவரிடமும், “(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற் செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும்போது) ஒத்த கருத்துடன் நடந்துகொள்ளுங்கள் (பிளவு பட்டுவிடாதீர்கள்)” என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது

(அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 6124

ஹோட்டலை பழக்கப்படுத்தாதீர்

மக்கள் சுவையான உணவுகளை விரும்பி ஹோட்டல்களுக்கு செல்கின்றனர்.

பெரும்பாலான ஹோட்டல்களிலும் சில வீடுகளிலும் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய அஜினமோட்டோ போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதையும் தவிர்க்க வேண்டும்.

இடங்களை தூய்மையாக வைத்தல் :

நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலர் தாம் பயன்படுத்தக்கூடிய பாலிதின் கவர்களையும் வாழைப் பழத் தோல்களையும் கண்ட இடங்களில் எறிந்துவிடுகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் சாலையோரங்கள் மருத்துவமனைகள் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. மேலும் மக்கள் நடமாடக்கூடிய ஒய்வெடுக்கக்கூடிய இடங்களில் பல ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

1. பொது இடங்களில் எல்லோரும் பார்க்கும் வகையில் சிறுநீர் கழிப்பது.

2. பொது கட்டணகழிப்பிடங்களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு அசுத்தப்படுத்துவது.

3. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தெரு ஓரங்களில் தங்கள் குழந்தைகளை மலம் ஜலம் கழிக்க வைப்பது.

4. தங்கள் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை கார்ப்பரேஷன் வண்டியில் கொட்டாமல் தெரு ஒரங்களில் ஒதுக்கிவைப்பது.

பொது இடங்களில் எவ்வாறு நாகரீகமாக நடக்க வேண்டும் என்ற முறையை இஸ்லாம் மக்களுக்கு உபதேசிக்கின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள் அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்

நூல் : முஸ்லிம் : 448

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரு சவக்குழிகளைக் கடந்து சென்றார்கள். அப்போது “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை; இவ்விருவரில் ஒருவரோ, சிறுநீரிரிருந்து (தம் உடலையும் உடையையும்) மறைக் காமலிருந்தார்; மற்றவரோ, கோள் சொல்லிரித் திரிந்துகொண்டிருந்தார்” என்று கூறினார்கள். பிறகு ஒரு பச்சை பேரீச்ச மட்டையைப் பெற்று அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின்மீதும் ஒன்றை ஊன்றினார்கள். அது பற்றி மக்கள், “ஏன் இவ்வாறு செய்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி : 218

இறையில்லங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

“எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!” என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல் குர்ஆன் : 22:26

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசரில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் “நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகிய வற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்” என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் (480)

பாதையில் உள்ள தொல்லை தரும் பொருட்களை அகற்றுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி ; 2989

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

நூல் : புகாரி ; 652

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

மக்கள், “சாலையின் உரிமை என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமரிருப்பதும், முகமனுக்கு (சலாம்) பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிரிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்” என்று பதிலளித் தார்கள்.

நூல் : புகாரி 2465

செருப்பை பயன்படுத்துதல்

நாம் வெளியே செல்லும் போது பல அசுத்தங்களை காலில் மிதிக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது . மேலும் நம்முடைய வீட்டிலேயே கழிவறை, சமையல் அறைகளுக்கு அதற்கென்றே தனி செருப்புகளை பயன்படுத்துவதின் மூலம் கிருமிகளிலிருந்து காலை பாதுகாக்கலாம். நபி (ஸல்) அவர்கள் காலணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

முடிகளையப்பட்ட செருப்புகளைப் பொறுத்த வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத செருப்புகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 166

உள்ளத்தை தூய்மைப் படுத்துதல்

ஒருவரை பார்க்கும் பொழுதே பல கெட்ட எண்ணங்களுடன் அவர்களுடன் பழகுபவர்களையும் உதட்டில் தேனும் உள் நாக்கில் விஷமும் வைத்து வாழ்பவர்களும் இரட்டை வேடம் போடுபவர்களும் மக்களில் ஏராளம் உள்ளனர். மனிதர்களிடத்தில் நற்பேறு வாங்குவதற்காக நல்லவர்களாக நடிப்பவர்களோ இறைவனிடத்தில் உண்மையாளர்களாக இருப்பதில்லை. மனிதர்களால் வெளிப்படையானதை மட்டும் தான் பார்க்க இயலும். ஏனெனில் கெட்டதை செய்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் பார்வையில் நல்லவர்களாகவும் நல்லதை செய்ய நினைத்து முடிவு கெட்டதாக அமைந்து மனிதர்களின் பார்வையில் கெட்டவர்களாகவும் காட்சி கொடுக்கலாம். இறைவனோ அவனுடைய வெளித்தோற்றத்தை பார்க்காமல் உள்மனதை பார்க்கின்றான்.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார்.

அல்குர்ஆன் 91 :7_10

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக,உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் :முஸ்லிம் (5012)

அஹ்னஃப் பின் கைஸ் அவர்கள் கூறியதாவது: (ஜமல் போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ(ரழி)அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரழிரி) அவர்கள் என்னைச் சந்தித்து “எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவிசெய்திடச் செல்கிறேன்” என்றேன். அதற்கு அபூபக்ரா (ரழி) அவர்கள் “நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிரிம் மக்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக்கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்” என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசைகொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள்” என்றார்கள்.

நூல் : புகாரி : 31

அனைத்து சூழ்நிலைகளிலும் தூய்மையை மேற்கொள்ளுதல் :

ஒரு மனிதன் அவனுடைய எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையான அந்தரங்கமான வாழ்க்கையிலும் படைத்த இறைவன் முதல் தன் குழந்தைகள் வரை உண்மையானவனாக வாழ்வதும் தூய்மையாகும். இதைத் தான் மக்களுக்கு மத்தியில் இறைவனிடத்தில் தூய்மையானவனாக நடந்து கொள்பவர்களுக்கு இறையச்சவாதி என்றும், வியாபாரத்தில் நேர்மையாக நடப்பவர்களுக்கு கை சுத்தம் என்றும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவர்களுக்கு வாய் சுத்தம் என்றும், கற்பொழுக்கத்துடன் நடப்பவர்களுக்கு கற்புக்கரசி என்றும் மக்களுக்கு மத்தியில் கூறுகின்றனர்.

இறைவனிடத்தில் தூய்மையாக

இறைவன் கொடுத்த அருட்கொடைகளை அனுபவிக்கும் மனிதன் அதை அனுபவித்துக்கொண்டே புறக்கணிக்கின்றான். இறைவன் தனக்கு மட்டும் தான் சோதனையை கொடுத்தது போலவும் தன்னை விட இவ்வுலகில் துர்பாக்கியசாலி இல்லை எனவும் நினைக்கின்றனர். இவ்வுலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாலோ பொருளாதாரத்தாலோ என ஏதோ ஒரு வகையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இது தான் எதார்த்த நிலையாகும். மனிதன் இத்துன்பத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றான். இறைவனை சபிக்கின்றானா? அல்லது பொறுமையாக இருக்கின்றானா? என்பதை இறைவன் சோதிக்கின்றான். இதை புரிந்துகொள்ளாத மனிதன் அந்த சோதனையில் தோல்வியை தழுவுகின்றான்.

இறைவன் நல்லதை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்பவன், சோதனை தரும் போது கோபித்துக் கொண்டால் அவன் இறைவனிடம் தூய்மையாக நடக்கவில்லை என்று பொருள்.

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 16 :53 _55

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடைவீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக்குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 25:20

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்”எனக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 89 :15 ,16

இறைவன் துன்பத்தை கொடுக்கும் போது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்பதற்கு நபித்தோழர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மேலும் அத்துன்பத்தின் போது இறைவனை நினைவுகூராமல் அவனை பிராத்திக்காமல் இஸ்லாம் அனுமதிக்காத ஒப்பாரி, தர்ஹாவிற்குச் சென்று பிரார்த்தித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆறுதல் தேடி எத்தனையோ நபர்களிடம் கஷ்டங்களை சொல்லி அழும் பெண்கள் இறைவனிடத்தில் சொல்லி அழுவதில்லை. இறைவனால் நீக்க முடியாததை இவர்கள் நீக்கிவிடுவார்களா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நான் இறைவனிடம் பிரார்த்தித்தும் எனக்கு இறைவன் தரவில்லை என்று இறைவனின் வல்லமையை ஆற்றலை இவர்கள் இழிவுபடுத்துகின்றார்கள்.

மேலும் அவனுக்கு செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளிலும் தூய்மையற்ற முறையில் அவனை நெருங்குகின்றனர். தர்மம், நோன்பு, தொழுகை, ஹஜ், குர்பானி கொடுத்தல் மற்றும் இன்னபிற விஷயங்களில் பிறர் மெச்சுவதற்காக இந்த காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுவும் முற்றிலும் தவறான செயலாகும்.

மஹ்மூது இப்னு லபீது (ரலி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் அதிகம் அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைத்தல் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முகஸ்துதி (பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்தல்) என்று கூறினார்கள்.

அஹ்மத் :22528

ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர்(உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.யார்முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்”என்று கூறியதைக் கேட்டேன்.

நூல் : புகாரி 6499

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தமக்கு அல்லாஹ் வழங்கியதை (நல் வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும்? அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:38,39)

அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

நூல் : புகாரி 4919

நாம் எந்த ஒரு காரியம் செய்வதாக இருந்தாலும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற தூய்மையான எண்ணப்போக்குடன் செய்யவேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.

அடுத்து அவர், “இஸ்லாம் என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலை நிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்துவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும்” என்றார்கள்.

அடுத்து “இஹ்ஸான் என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்)” என்றார்கள். நூல் : புகாரி : 50வெளிப்படையான அந்தரங்கமான வாழ்க்கையில் தூய்மை

நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை (“அல்பிர்ரு’) மற்றும் தீமை (“அல்இஸ்மு’) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள்.

முஸ்லிம் 4992

இப்படி வாழ்வில் அனைத்திலும் தூய்மையை கடைபிடித்து வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *