நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது

உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது குணநலன்கள் என்ன? பழக்கவழக்கங்கள் என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது சாத்தியமாகும்.

ஆனால் இந்தப் பொதுவிதியிலிருந்து அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் விலக்கு பெறுகிறார்கள்.

ஆம்! நபிகள் நாயகத்திற்கு மட்டும் அவர்களது வாழ்வுதனை முழுமையாக அறிந்து கொள்ள நம் முன் இரண்டு வழிமுறைகள் உள்ளன.

ஒன்று, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வது. இது எல்லாருக்குமான பொது வழிமுறையாகும்.

மற்றொன்று நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பானது. அது தான் இப்புனித ரமலானில் அருளப்பட்ட திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன் வாயிலாகவும் நபிகள் நாயகம் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதைத் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆன் என்பது மக்களைப் பண்படுத்த, நேர்வழிப்படுத்த, நல்வழிப்படுத்த அருளப்பட்ட பொது வேதமாயிற்றே! இதில் மனிதர்களுக்கான அறிவுரைகளும் ஆர்வமூட்டல்களும் தானே இருக்கும்? இத்தகு குர்ஆன் மூலமாக எப்படி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும்? என்று சற்றே நெருடலாகத் தோன்றலாம்.

முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்ட அருளப்பட்ட வான்மறை வேதமாகத் திருக்குர்ஆன் திகழ்ந்தாலும் குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் பிரித்து பார்ப்பது பகலையும், சூரியனையும் பிரித்துப் பார்ப்பதற்குச் சமமானதாகும்.

திருக்குர்ஆன் வேறு, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் குர்ஆனோடு பிணைந்ததாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது.

நபிகள் நாயகம் நபித்துவத்தை அடைந்து திருக்குர்ஆன் அருளப்பெற்றதிலிருந்து அன்னாரது வாழ்க்கை திருக்குர்ஆனின் ஒவ்வொரு சொல்லையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

குர்ஆன் பாய்ச்சிய ஒளியினாலேயே நபிகள் நாயகம் தம் வாழ்க்கைப் பாதையை வெளிச்சமுள்ளதாக ஆக்கியிருந்தார்கள்.

இதை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஃத் பின் ஹிஷாம்; நூல்: அஹ்மத் 24139

நபிகள் நாயகத்தின் குணநலண்கள் என்னென்ன என்பதை அறிய எங்கும் அலைய வேண்டியதில்லை. திருக்குர்ஆனை வாசித்தாலே போதுமானது.

திருக்குர்ஆன் எதைப் போதிக்கின்றதோ அது தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்று இரத்தினச் சுருக்கமாக நபியின் வாழ்க்கையை அன்னையவர்கள் விளக்கி விட்டார்கள்.

குர்ஆனின் கட்டளைகளையும், அதற்கேற்ற வகையில் நபிகள் நாயகம் நடந்து கொண்டதையும் அறிந்து கொண்டால் அன்னை ஆயிஷா (ரலி) சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையென்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் அதிக வலுப்பெறும்.

அதற்கான தரவுகளைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறிப்பாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்ற தொடர் பிரச்சாரத்தை தவ்ஹீத் ஜமாஅத் கையிலெடுத்திருக்கும் இந்நேரத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி இத்தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் ஏகத்துவம் இதழ் மகிழ்ச்சி அடைகிறது.

இதோ குர்ஆனைப் பிரதிபலித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அலசுவோம்.

நல்லதைக் கொண்டு தீயதைத் தடுப்பீராக!

நன்மையும்தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும்உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41: 34,35

நமக்குத் தீங்கிழைக்க முற்படுவோருக்கும், தீங்கிழைத் தவர்களுக்கும் நன்மை செய்து அவர்களை நண்பர்களாக்க முயற்சிக்க வேண்டும் என்று குர்ஆன் அறிவுறுத்துகிறது.

அதாவது எதிரிகள் நமக்குச் செய்த தீங்கை மறந்து மன்னித்து விட வேண்டும். அப்படிச் செய்யும் போது தீங்கிழைத்தவன் கூனிக்குறுகி மனந்திருந்திட வாய்ப்புண்டு.

அதே நேரம் இந்தக் குணம் எல்லாருக்கும் வாய்த்து விடாதென்றும், இதைக் கடைபிடிப்பவரை மகத்தான பாக்கியம் உடையவர் என்றும் குர்ஆன் புகழாரம் சூட்டுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இறைவசனத்தை அப்படியே உள்வாங்கி தமது வாழ்க்கையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

ஓரிரு முறை அல்ல, பல முறை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மேற்கண்ட வசனத்தின் படி நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பதாகவே இருந்தது.

தமக்குத் தீங்கிழைத்த பலரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்முகத்துடன் மன்னித்திருக்கிறார்கள்.

ஒருமுறை நபியவர்களிடம் யாசகம் கேட்க வந்த ஒருவர் சற்றே கடுமையாக நடந்து கொள்கிறார். உச்சகட்டமாக நபிகள் நாயகத்திடம் வன்முறையைப் பிரயோகிக்கிறார். அதனால் நபிகள் நாயகமும் பாதிப்படைகிறார்கள். இருந்தபோதிலும் சிரித்துக் கொண்டே அந்த யாசகருக்குத் தேவையானவற்றை வழங்கும் படி உத்தரவிடுகிறார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார்.

எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின்  ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன்.

பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனேநபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டுபிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி); நூல் : புகாரி 3149

தன்னைக் கொல்ல முன்வந்தவனைக் கூட நபியவர்கள் தண்டிக்காது மன்னித்து விட்டார்கள் என்றால் குர்ஆன் வசனங்களைப் பின்பற்றுவதிலும், பிரதிபலிப்பதிலும் நபிகள் நாயகத்தை நம்மால் ஒரு போதும் மிஞ்ச முடியாது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது

உடனேஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார். நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், “என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான்அல்லாஹ்‘ என்று (மூன்று முறை) கூறினேன்” என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூடஅவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி); நூல் : புகாரி 2910

தமக்குத் தீங்கிழைத் தவர்களைத் தண்டிக்காது மன்னித்து விடுவார் என்று நபிகள் நாயகம் பற்றி தவ்ராத்திலும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) நாம் உங்களை சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்” எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே “தவ்ராத்‘ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

“நபியே! நிச்சயமாக நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கின்றோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (“முத்தவக்கில்‘) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்க மாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை‘ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.

நூல்: புகாரி 4838

பிறரை மன்னிக்க வேண்டும் என்ற வசனம் நபிகள் நாயகத்தை எந்தளவு பாதித்திருந்தது என்றால் தனக்காக யாரையும் நபிகள் நாயகம் பழிக்குப்பழி வாங்கியதில்லை. தனிப்பட்ட முறையில் தனக்குத் துன்பம் தந்த அனைவரையும் மன்னித்தே விட்டிருக்கிறார்கள்.

இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவ்விரண்டில் இலேசானதையே எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லைஅல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 6786

சமூகத்தைப் பாதிக்காத வகையிலும், மார்க்கத்தின் புனிதம் கெடாத வகையிலும் தனக்கு இழைக்கப்படும் துன்பங்கள் யாவற்றையும் நபிகள் நாயகம் மன்னித்து உள்ளார்கள் என்றால் குர்ஆனின் வசனங்களை, கட்டளைகளைப் பிரதிபலிப்பதில் நபியவர்களுக்கிருந்த குன்றா ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் போதனையை வாழ்க்கையாகக் கொண்டு நடந்த மேலும் சில செய்திகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

One thought on “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed