ஒரு நாள் மதீனா நகர்தனிலே… என்று துவங்கும் ஒரு பாடல். அந்தப் பாடலின் கருத்து இது தான்.

ஒரு நாள் மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, இறுதி நாள் வரப் போகின்றது? அதனால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுங்கள். என் மீது ஏதும் குறை இருந்தாலும் அதைச் சொல்லுங்கள். அதை நான் நீக்கிக் கொள்கிறேன் என்று கூறினார்கள். அப்போது உக்காஷா என்ற நபித் தோழர் எழுந்து, தங்கள் மீது எனக்கு ஒரு குறை உள்ளது என்று கூறினார். உடனே நபித் தோழர்கள் அவர் மீது ஆவேசப் பட்டனர். நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களை அமைதிப் படுத்தி விட்டு, அந்தக் குறையைச் சொல்லுங்கள் என்று உக்காஷாவிடம் கூறுகின்றார்கள்.

பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் போது, நான் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தேன். நீங்கள் சாட்டையால் ஒட்டகத்தை அடிக்கும் போது சட்டென்று ஓர் அடி என் மீது விழுந்து விட்டது. அதற்குப் பதிலாக தங்களை நான் அடித்திட அனுமதி வேண்டும் என்று உக்காஷா கூறினார். எதிலும் நீதி தவறாத நபி (ஸல்) அவர்கள் அவரது கோரிக்கையை ஏற்றார்கள். அப்போது உக்காஷா, என்னை அடித்த சாட்டை இங்கு இல்லை. அது தங்களின் வீட்டில் உள்ளது. எனது எண்ணம் நிறைவேற அதை எடுத்து வரச் சொல்லுங்கள் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், பிலாலை அனுப்பி அதை எடுத்து வருமாறு கூறினார்கள்.

பிலால் (ரலி) அழுது கொண்டே நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த ஃபாத்திமா (ரலி)யிடம் சபையில் நடந்ததைக் கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அழுது, உடல் நலம் சரியில்லாத என் தந்தையார் இந்தத் தண்டனையை எப்படித் தாங்குவார்கள்? அதற்குப் பதிலாக எங்களை அடிக்கச் சொல்லுங்கள் என்றார். பெருமை நிறைந்த பாட்டனாருக்குப் பதிலாக எங்களை அடிக்கட்டும் என்று ஹஸனும், ஹுசைனும் கூறி விட்டு சாட்டையை எடுத்துக் கொண்டு சபைக்கு வந்தார்கள். சாட்டையை வாங்கி நபி (ஸல்) அவர்கள் உக்காஷாவிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய உக்காஷா, என்னை நீங்கள் அடிக்கும் போது நான் சட்டையில்லாமல் இருந்தேன். எனவே நீங்களும் சட்டையைக் கழற்றுங்கள் என்று கூறினார். அப்போதும் நபித்தோழர்கள் ஆவேசப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் அமைதிப்படுத்தி விட்டு, தமது சட்டையைக் கழற்றினார்கள். அப்போது உக்காஷா சாட்டையைத் தூக்கி எறிந்து விட்டு ஓடி வந்து, ஆவலுடன் நபி (ஸல்) அவர்களைத் தாவி அணைத்துக் கொண்டார். நுபுவ்வத் ஒளிரும் நபி (ஸல்) அவர்களின் முதுகில் தான் நினைத்தது போல் முத்தமிட்டார். உணர்ச்சி பொங்க மீண்டும் முத்தமிட்டார். நபி (ஸல்) அவர்கள், உக்காஷாவின் மனம் மகிழ, உமக்கு சொர்க்கம் உண்டு என்று கூறி துஆச் செய்தார்கள். சுற்றி நின்ற நபித் தோழர்கள் வாழ்த்து தெரிவிக்க, மஸ்ஜிதுந் நபவீ மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

இவ்வாறாக ஒரு நீண்ட சம்பவத்தைத் தன்னுடைய கம்பீரமான குரலில் ஏற்ற, இறக்கத்துடன் நாகூர் ஹனீபா பாடுவதைக் கேட்கும் யாரும் அதில் லயித்து விடுவார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் அந்த நிகழ்ச்சியை எண்ணி, புல்லரித்து விடுவார்கள். இந்தச் சம்பவம் உண்மையானதா என்பதைப் பார்ப்போம்.

ஏறக்குறைய இது போன்ற ஒரு செய்தி தப்ரானியின் முஃஜமுல் கபீர் என்ற நூலில் 2676வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் முன்இம் பின் இத்ரீஸ் பின் ஸினான் என்பவரைப் பொய்யர் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

பொய்யர், ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடியவர் என்று மஜ்மஉஸ் ஸவாயிதில் ஹைஸமீ கூறுகின்றார்.

வஹப் என்பவர் மீது இவர் பொய் சொல்பவர் என்று அஹ்மத் இப்னு ஹம்பல் கூறுகின்றார். இப்னுல் மதீனி, அபூதாவூத், நஸயீ ஆகியோர் இவர் நம்பகமானவர் இல்லை என்று கூறுகின்றார்கள். இவர் ஹதீஸ்களில் மோசமானவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார். இவரை ஆதாரம் கொள்வது ஹலால் இல்லை என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். இவரும் இவரது தந்தையும் விடப்பட்டவர்கள் என்று தாரகுத்னீ கூறுகின்றார். (நூல்: இப்னுல் ஜவ்ஸீயின் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே இந்தச் செய்தி பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும். இந்தச் செய்தியின் அடிப்படையில் இயற்றப்பட்ட நாகூர் ஹனீபா பாடலும் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டப்பட்ட ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை.

எந்தத் தலைவர் மீதும் யாரும் எந்தச் சம்பவத்தையும் சொல்லி விட்டுப் போகலாம். அதைச் சொல்பவருக்கு அதனால் பெரிய அளவுக்குப் பாதிப்பு வந்து விடாது. ஆனால் அதே சமயம் நபி (ஸல்) அவர்கள் மீது, அவர்கள் சொல்லாததை, செய்யாததை, அங்கீகரிக்காததைச் சொன்னால் அவர் போய் சேருமிடம் நரகம் ஆகும். இதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

“என் மீது பொய் சொல்வ தென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி)

நூல் : முஸ்லிம் 6

நபி (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்பவருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.

இந்த எச்சரிக்கையைத் தாங்கி நிற்கும் அறிவிப்புத் தொடர்கள் கிட்டத்தட்ட 72 வழிகளில் இடம்பெறுகின்றன. இந்த அடிப்படையில் இந்தச் செய்தி முதவாத்திர் என்ற தகுதியைப் பெற்று விடுகின்றது. முதவாதிர் என்றால் ஏராளமானவர்களால் ஒருமித்து அறிவிக்கப்படும் ஹதீஸ்களாகும்.

கேட்பதற்கு இனிய சம்பவமாக இருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக் கட்டி கூறினால் அவ்வாறு கூறுபவர் செல்லுமிடம் நரகம் தான்.

இந்த நாகூர் ஹனீபா மற்றும் இது போன்ற இஸ்லாமிய (?) பாடகர்களால் பாடப்படும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாடல்களையும், நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைக்கும் பாடல்களையும் இஸ்லாத்தின் ஓர் அங்கமாக எண்ணி, கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed