இறந்தவரைக் குளிப்பாட்டுதல்

ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது ‎உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.‎

இறந்தவுடன் கசப் மாற்றுவது  என்ற பெயரில் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎

பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை ‎குளிப்பாட்டுகின்றனர்.‎

சில ஊர்களில் இதை விட அதிக எண்ணிக்கையிலும் ‎குளிப்பாட்டுகின்றனர்.‎

இப்படிப் பல தடவை அல்லது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட ‎வேண்டும் என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ‎கூறப்படவில்லை. பொதுவாகக் குளிப்பாட்டுமாறு தான் ‎சொல்லப்பட்டுள்ளது.‎

எனவே அடக்கம் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு நேரத்தில் ‎ஒரு தடவை குளிப்பாட்டுவது தான் அவசியம்.‎

சுன்னத் என்றோ, கடமை என்றோ கருதாமல் உடலிலிருந்து ‎துர்வாடை வரக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட ‎தடவை குளிப்பாட்டினால் அது குற்றமாகாது.‎

மார்க்கத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற தவறான ‎எண்ணத்தை ஊட்டும் வகையில் இருந்தால் அது தவறாகும்.‎

ஆடைகளைக் களைதல்

உடலைக் குளிப்பாட்டும் போது அவர் அணிந்திருந்த ‎ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டினால் அதில் ‎தவறில்லை. அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டினால் ‎அதுவும் தவறல்ல.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் ‎குளிப்பாட்ட முடிவு செய்தனர்.  மற்றவர்களின் ஆடைகளைக் ‎களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ‎ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை  என்று ‎பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட ‎போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே ‎குளிப்பாட்டுங்கள்  என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் ‎கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி ‎அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி ‎அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள். அந்த நாள் இப்போது ‎திரும்பி வந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் ‎மனைவியர் தான் குளிப்பாட்டி இருப்பார்கள்.‎

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)‎; நூல்கள்: அபூ தாவூத் 3141

மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்று ‎என்ற வாசகம் அணிந்திருந்த ஆடையைக் களைந்து விட்டு ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் ‎என்பதை அறிவிக்கின்றது.‎

இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் ‎போதே அதை மாற்றியமைத்திருப்பார்கள்.‎

எனவே சட்டை, பேன்ட், பனியன் போன்ற ஆடைகளைக் களைந்து ‎அவரது மறைவிடம் தெரியாத வகையில் மேலே ஒரு ‎துணியைப் போட்டுக் கொண்டு கழுவலாம்.‎

குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும்

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் ‎இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை ‎அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.‎

உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ‎ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை ‎வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.‎

ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை ‎மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் ‎என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி)‎; நூல்: ஹாகிம் 1307

வலப்புறத்திலிருந்து கழுவ வேண்டும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளுடைய உடலைக் ‎குளிப்பாட்டிய பெண்களிடம்  இவரது வலப்புறத்திலும், உளுச் ‎செய்யும் உறுப்புகளில் இருந்தும் ஆரம்பியுங்கள்  என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி); நூல்: புகாரி 167, 1255, 1256‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed