*அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?*
*அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா ?*
ரபியுள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
1. *நபி (ஸல்) அவர்களின் பிறப்பு*.
2. *வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணம்*.
3. *நபியவர்களின் மரணம்*
இவற்றில் ஏனைய இரு நிகழ்வுகளையும் விட்டுவிட்டு முதல் நிகழ்வாகிய நபியவர்களின் பிறந்த தின நிகழ்வை மாத்திரம் உலகளாவிய மட்டத்தில் விமர்சையாக் கொண்டாடப்படுவதை கவனிக்கலாம்.
கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்ற பெயரில் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போல் *முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பிறந்த தினத்தை மீலாத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்களோ* என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
நபியவர்களோ, நபித்தோழர்களோ நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடியதற்கான எவ்விதமான சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில், ஒரு சிலர் நபியவர்கள் பிறந்ததையொட்டி *அவர்களது பெரிய தந்தை அபூலஹப் மகிழ்ந்ததாகவும், அதன் பலனாக அவருக்குக்குத் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் புஹாரியில் இடம்பெற்றுள்ள* ஒரு செய்தியில் பார்க்கலாம்.
*இச்செய்தி நபியவர்களின் கூற்றா*?
*இது வருடாவருடம் மீலாத் விழா கொண்டாட ஆதாரமாகுமா*? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் அபூலஹப், நபியவர்கள் பிறந்த செய்தி கேட்டவுடனே செய்த ஒரு செயலை, வருடாவருடம் மேடை போட்டு மீலாத்விழா கொண்டாட ஆதாரமாகக் கொள்ளலாமா ?
*அபூலஹப் அதன் நினைவாக வருடாவருடம் நபியவர்கள் பிறந்த தினத்தன்று ஒவ்வோர் அடிமையை விடுவித்திருந்தால் அதனை ஆதாரமாக எடுக்கலாமா? கூடாதா?* என்று ஓரளவுக்கு சிந்திக்கலாம்.
அதுவும் அவர் *இறை மறுப்பாளராக* வாழ்ந்து, சபிக்கப்பட்டு, *இறை மறுப்பாளராகவே மரணித்தவர்* எனும் போது அதுவும் தவிடுபொடியாகின்றது.
பொதுவாக எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் தனது உடன்பிறப்பில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததென்றால் மகிழ்வது இயற்கைதான்.
அதற்காக அவர் செய்த ஒரு நற்பணியை இஸ்லாத்தில் *நன்மை ஈட்டித்தரும் செயலென்று ஒன்றை நிருவ ஆதாரமாகக் கொள்ள முடியாது.*
*இறை மறுப்பாளர்களுக்கு தண்டனை குறைக்கப்படுமா?*
*பொதுவாக மறுப்பாளர்களுக்கு ஒரு போதும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது* என பல அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன.அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்*“. (2: 162),
“(*நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்பட மாட்டாது. (அப்படியாயின்) அவர்கள் மரணித்து விடுவார்கள். அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது“*. (35: 36).
அவர்கள் செய்த *நற்செயல்களுக்கும் அல்லாஹ்விடம் எவ்வித மதிப்புமில்லை* என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறியலாம்
“*அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்*“. (25: 23).
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான், “*அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?”* என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், *அவருக்குப் பயனளிக்காது; அவர் ஒரு நாள் கூட “இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!’ என்று கேட்டதேயில்லை*” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 214)
*அபூலஹபின் தண்டனைக் குறைப்பு நபியின் கூற்றா?*
அபூலஹபுக்கு தண்டனை குறைக்கப்படுகின்றது என்ற செய்தி புஹாரியில் (5101) பதிவாகியுள்ளது.
அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:
ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார்.
*அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார்*.
அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், ‘(*மரணத்திற்குப் பிறகு) நி எதிர்கொண்டது என்ன*?’ என்று அவர் கேட்டார்.
உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. *ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது*” என்று கூறினார்.
மேற்கண்ட செய்தி *உர்வா அவர்களின் கூற்றுதான். நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல.
இந்தச் செய்தி பல காரணங்களால் ஏற்கத்தக்கதல்ல.*
*கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.*
அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.
*இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.*
கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.*
• *திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம் அவனது கைகளும் அவனும் நாசமாகட்டும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும்*.
•
• *காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்து சலுகையோ, அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது”* என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
•
(*ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.* ( 2:161,162)
*அபுல் காஸிம் அஸ்ஸுஹைலி* என்பவர் தனது “அர்ரௌழுல் உனுப்” எனும் நூலில் 5/122 அறிவிப்பாளர் வரிசையின்றி :
கனவு கண்டவர் அப்பாஸ் (ரலி) என்பதாகவும், அபூ லஹப் மரணித்து ஒரு வருடத்திற்குப் பின் இக்கனவு கண்டதாகவும், ஒவ்வொரு *திங்கட்கிழமையும் நபியவர்கள் பிறந்ததையொட்டி ஸுவைபாவை விடுவித்ததால் தனது விரலிடையால் நீர் புகட்டப்படுவதாகவும் இடம்பெற்றுள்ளது*.
இச்சம்பவம் நாம் மேற்கூறிய காஃபிர்களின் நற்செயல்கள் பயனளிக்காது என்பது பற்றிய அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிக்கு முரணாக இருக்கின்றது. *அறிவிப்பாளர் வரிசையே இல்லாத, அல்லது ஒரு தாபஈயின் முர்ஸல் வகைச் செய்திக்காக இறைவசனங்களையும், ஸஹீஹான நபிமொழிகளையும் புறக்கணிக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டும்*
ஆக, இச்சம்பவத்தில் மீலாத்விழாவுக்கு ஆதாரமில்லை. *அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைபெறச் செய்வானாக*.