மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்?

Ihraam Limits

 

ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் இவர் தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

நூல் : புகாரி 1529

ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது.

மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது) எனது தலைமுடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்யீம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

நூல் : புகாரி 319

வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1788

நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *