ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

செய்யலாம்.

ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர்.

ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதி காலத்தில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தார்கள். அந்த ஹஜ்ஜுக்கு முன்னால் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள்

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்து விட்ட போது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள்; பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் ஹுனைன் போரில் கிடைத்த படைக்கலன்களைப் பங்கிட்ட இடமான “ஜிஇர்ரானா’விலிருந்து உம்ராச் செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஒரு உம்ராச் செய்தார்கள்.

நூல்: புகாரி-1779

ஹஜ்ஜுக்கு முன் உம்ராச் செய்வது கூடாதென்றால் இந்த உம்ராக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜுக்கு முன் செய்திருக்க மாட்டார்கள்.

மக்கா எதிரிகளின் கைவசம் இருந்த ஆரம்ப நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் முதன் முதலில் உம்ராச் செய்வதற்காகவே மக்காவிற்குப் புறப்பட்டு வந்தார்கள். நபியவர்களுடன் வந்த நபித்தோழர்கள் யாரும் இதற்கு முன் ஹஜ் செய்திருக்கவில்லை

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உம்ராச் செய்வதற்காகப் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்; ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து) விட்டுத் தம் தலையை மழித்துக் கொண்டார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!)

நூல் : புகாரி-1812

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் ஹஜ் செய்யப் புறப்பட்டார்கள். நபித்தோழர்கள் ஹஜ்ஜை நாடியே இஹ்ராம் அணிந்து புறப்பட்டனர். அவர்கள் ஹஜ்ஜுக்கு அணிந்த இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள். ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்யக் கூடாது என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று’ என (அறியாமைக்கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போர் செய்வது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பிரயாணத்தில்) ஒட்டகங்கüன் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து) விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ராச் செய்ய அனுமதியுண்டு” என்று கூறி வந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு, “(இஹ்ராம் அணிந்தவருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி-3832

கடமையை நிறைவேற்றுவதற்கு முன் உபரியான வணக்கத்தில் ஈடுபடக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. ஒரு வணக்கத்தைக் காட்டி இன்னொரு வணக்கத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது தான் இஸ்லாத்தில் கூடாது. ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்

உம்ராச் செய்தால் அவசியம் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கூற்று குர்ஆனுக்கு எதிராக உள்ளது. சக்தியுள்ளவர்கள் மீது தான் ஹஜ் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது

ஒருவர் உம்ராச் செய்யும் போது செல்வந்தராக இருக்கின்றார். இதன் பிறகு அவர் ஏழையாக மாறினால் இவர் ஹஜ் செய்ய வேண்டுமா? இவருக்கு ஹஜ் கடமையில்லை என்றே குர்ஆன் கூறுகின்றது.

அல்லது ஒருவர் தனது பொருளாதாரத்தில் ஏழை ஒருவரை உம்ராவுக்கு அழைத்துச் செல்கிறார். உம்ரா செய்து விட்ட இந்த ஏழை அடுத்து ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும் என்றால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. மனிதனின் சக்திக்கு மீறிய சட்டமாகும். எனவே தான் குர்ஆன் இப்படிப்பட்ட சட்டத்தைக் கூறவில்லை. ஆகையால் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed