ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

3440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்களின் தோள்கள் மீது தமது இரு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் ஈசா அவர்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரு கைகளையும் வைத்திருந்தான். நான், யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதை அறிவிக்கிறார்கள்.

கியாமத் நாள் ஏற்படுவதற்கு முன்பு ஈசா (அலை) அவர்கள் இந்த உலகத்திற்கு மீண்டும் இறைவனால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்போது ஹஜ் அல்லது உம்ரா அல்லது அவ்விரண்டையும் செய்வார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈசா) அவர்கள் (மக்கா – மதீனா இடையே உள்ள) “ஃபஜ்ஜுர் ரவ்ஹா’ எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.; நூல் : முஸ்லிம் 2403

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed