யூனுஸ் (அலை)
யூனுஸ் (அலை) அவர்கள் ஈமான் கொள்ளாத தம் சமூகம் அழிக்கப்பட வேண்டுமென விரும்பினார்கள். அதை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அந்த மக்கள் கடைசி நேரத்தில் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி தங்கள் எஜமானனிடம் மன்னிப்புக் கேட்டபோது அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களை அல்லாஹ் காப்பாற்றுகிறான்.
(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.
(அல்குர்ஆன் 10:98)
ஒரு நபியின் விருப்பத்துக்கு மாறாக சாதாரண மக்களின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். தமது விருப்பத்துக்கு மாறாக சாதாரண மக்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றதற்காக இறைவனிடமே யூனுஸ் (அலை) கோபித்துக் கொண்டு போகிறார்கள். இதன் காரணமாக மீன் வயிற்றில் சிறை வைக்கப்படுகின்றார்கள்.
மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன் என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.
(அல்குர்ஆன் 21:87)
தமது விருப்பப்படி தான் அல்லாஹ் நடக்க வேண்டும்; தாம் கேட்டதை எல்லாம் அல்லாஹ் தந்தாக வேண்டும் என்றெல்லாம் நபிமார்களும் கூட அல்லாஹ்வை வற்புறுத்த முடியாது என்பதை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகின்றது.
தாம் செய்த இந்தத் தவறுக்காக அல்லாஹ்வைத் துதித்து அவனிடம் மன்னிப்புக் கேட்கத் தவறி இருந்தால் யூனுஸ் கியாம நாள் வரை மீன் வயிற்றிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
(அல்குர்ஆன் 37:144)
தன் விருப்பத்தை அல்லாஹ் நிறைவேற்றவில்லை என்று யூனுஸ்(அலை) கோபித்துச் சென்றதற்காக இறைவனது எஜமான் தனத்தில் குறை கண்டதற்காக எவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்கின்றான் தெரியுமா?
அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.
(அல்குர்ஆன் 68:49)
ஒவ்வொரு நபிமார்களையும் பின்பற்றி நடக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட அல்லாஹ் யூனுஸைப் போல் நீர் ஆகக் கூடாது என்கிறான். (அல்குர்ஆன் 68:48)
எந்த நபியாக இருந்தாலும் அவன் தீர்ப்பில் குறை காணக் கூடாது. அவனது அடிமை என்பதை மறந்து விடலாகாது என்பதால் தான் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகம் செய்கிறான்.