நபிகள் நாயகம் (ஸல்)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அகில உலகுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூட தனது அடிமை என்ற நிலையிலிருந்து விடுவிக்க அல்லாஹ் தயாராக இல்லை.

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:15)

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 6:50)

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:162, 163)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 7:188)

என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றும் கூறுவீராக! என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(அல்குர்ஆன் 23:97, 98)

என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக!

(அல்குர்ஆன் 23:118)

(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 114:1 – 4)

அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 113:1 – 5)

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 46:9)

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 72:22)

என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள் என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 67:28)

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 6:17)

இந்த வசனங்களை ஒன்றுக்குப் பல முறை வாசியுங்கள்! நபிமார்களிலேயே தலை சிறந்த – அல்லாஹ்வால் அதிகம் விரும்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளே இவை! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டது மட்டுமின்றி இதை மக்களிடம் போய்ச் சொல்லுமாறும் ஆணையிடப்படுகின்றது.

உமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறாமல் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உமது வாயாலேயே மக்களிடம் கூறுவீராக என்ற கட்டளை அழுத்தமானதாகும்.

மகான்கள், பெரியார்கள் என்றெல்லாம் சிலரைப் பற்றி நாமாக முடிவு செய்து கொண்டு, அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் என்று நம்பிக்கை வைத்து மன்றாடுவதும், பிரார்த்தனை செய்வதும், நேர்ச்சை செய்வதும் எவ்வளவு தவறானவை என்பதை இந்த இடத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களுக்கும் கூட இத்தகைய அதிகாரத்தை அல்லாஹ் வழங்காத போது நாம் மகான்கள் என்று கற்பனை செய்து கொண்டவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்குவானா என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அகிலத்துக்கும் அவன் எஜமான் (ரப்புல் ஆலமீன்) என்பதில் நபிமார்களே அடங்கும் போது மகான்கள் அடங்க மாட்டார்களா என்பதையும் உணர வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அன்றைய காபிர்கள் பல்வேறு அற்புதங்களைக் குறிப்பிட்டு அவற்றில் ஒன்றே ஒன்றை நிகழ்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறு நிகழ்த்திக் காட்டினால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகவும் கூறினார்கள். இந்த அற்புதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நிகழ்த்த முடிந்ததா? அல்லது அல்லாஹ் தான் அனுமதித்தானா?

அவர்கள் கேட்ட அற்புதங்கள் அனைத்தையுமோ, அவற்றில் ஒன்றையோ செய்வது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமா? இதற்கு முன்னர் நபிமார்கள் மூலம் எத்தனையோ அற்புதங்களை அவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறானே?

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 17:90-93)

அவன் நாடும் போது நிகழ்த்திக் காட்டுவான். நாடினால் அதை மறுப்பான். இதைத் தேர்வு செய்யும் அதிகாரம் எந்த நபிமார்களுக்கும் கிடையாது. இதனால் தான் நான் கடவுள் இல்லை. நான் மனிதனாகவும் கடவுளின் தூதராகவும் தான் இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் செய்கிறான்.

இங்கேயும் நான் எஜமான் நீர் அடிமை என்பதைப் பிரகடனம் செய்கிறான்.

(அற்புதங்கள் – கராமத் குறித்து இய்யாக நஃபுது வசனத்தை விளக்கும் போது விரிவாக ஆய்வு செய்வோம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் தான் வளர்த்தார். அவர்களுக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்து, திருமணம் செய்து வைத்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது அவர்களுக்குக் கடுமையான எதிர்ப்பு வந்த போதெல்லாம் அதைத் தடுக்கும் அரணாக இருந்தார்.

அவர் இருந்த வரை நபிகள் நாயகத்தின் மீது யாரும் கை வைக்கத் துணியவில்லை. அவர்களின் தோழர்களைத் தான் துன்புறுத்தி வந்தனர். அபூதாலிப் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்ததால் அவரது சகோதரர் மகனாகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்பு பெற்றிருந்தனர்.

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அல்லாஹ் நாடினால் இதைச் செய்து காட்டுவது பெரிய காரியமல்ல.

தனது நேசர் புன்படலாமா? அவர்களைக் கவலையில் ஆழ்த்தலாமா? என்றெல்லாம் அல்லாஹ் நினைக்கவில்லை. தான் விரும்பியதைத் தான் அவன் முடிவு செய்தான். யார் கவலைப்பட்டாலும் அது பற்றி அவன் கவலைப்படவே இல்லை.

அபூதாலிப் மரண வேளையை நெருங்கிய போது அவரைச் சந்திக்கச் சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! ஒரு கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கிறேன் என்று எவ்வளவோ மன்றாடிக் கேட்டனர். நான் என் அப்பன் வழியிலேயே மரணிக்கிறேன் என்று கூறி காஃபிராகவே (இஸ்லாத்தை ஏற்காதவர்) அபூதாலிப் மரணித்து விட்டார்.

தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்காது மரணித்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடுமையான வேதனையை அளித்தது. இதற்காகப் பெரிதும் கவலை கொண்டார்கள். இடிந்து போனார்கள். அப்போது தான் பின் வரும் வசனம் அருளப்பட்டது. நிச்சயமாக நீர் விரும்பியவரை நேர்வழியில் செலுத்த முடியாது.  (அல்குர்ஆன் 28:56)

அறிவிப்பவர்: முஸய்யப் (ரலி); நூல்: புகாரி 3884, 4772

இந்த ஒரு நிகழ்ச்சியே ரப்புல் ஆலமீன் என்பதைப் புரிந்து கொள்ள போதுமானதாகும்.

உஹதுப் போர் முனையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்பட்டு முகம் சேதப்படுத்தப்பட்ட போது நபியின் திருமுகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்று அவர்கள் கூறினார்கள். அதிகாரத்தில் உமக்கு எதுவுமில்லை (அல்குர்ஆன் 3:128) என்ற வசனத்தை அப்போது அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி): நூல்: முஸ்லிம் 3346

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட காயம் காரணமாக மூர்ச்சையாகி மரணித்து விட்டார்களோ என்ற வதந்தி கிளம்பியது. காயம் அவ்வளவு கடுமையானதாக இருந்தது. அந்த வேதனை தாளாமல் தான் என் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? எனக் கேட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிமை எனும் நிலையிலிருந்து விடுபட்டு இருந்தால் அல்லாஹ்வும் இதை ஆமோதித்திருப்பான். உன் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறலாம் எனக் கூறியிருப்பான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட துன்பத்தைப் பார்க்காத அல்லாஹ் அவர்கள் பயன்படுத்திய வார்த்தையைத் தான் பார்க்கிறான். இவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? என்று நீர் எப்படிக் கூறலாம்? ஒருவரை வெற்றி பெற வைப்பதும், தோற்க வைப்பதும் எனது அதிகாரமல்லவா? அதில் எப்படி நீர் தலையிடலாம் என்று உணர்த்திடவே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை எனக் கூறுகிறான்.

வேண்டியவராயிற்றே! உயிர் போகும் அளவுக்கு வேதனைப்படுகிறாரே! அந்த நேரத்தில் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றெல்லாம் அல்லாஹ் பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் அடிமைகள் அவர்கள் நிலைக்கு ஏற்ற வார்த்தைகளைத் தான் பேச வேண்டுமே தவிர எனக்கே உரித்தான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்று கற்றுத் தருகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதவர்களின் சமாதிகளில் மண்டியிடுவோர் ரப்புல் ஆலமீன் என்ற அல்லாஹ்வின் பண்பையும், அதற்கு விளக்கமாக அமைந்த இந்த நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்துத் திருந்தட்டும்! ரப்புல் ஆலமீன் என்பதற்கு அனைவரும் அவனது அடிமைகளே என்பது மட்டும் தான் பொருள் என்று கருதக் கூடாது. ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடர் மற்றொரு கருத்தையும் உள்ளடக்கி இருக்கின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed