ஸக்கரியா (அலை)

யஹ்யா (அலை) அவர்களின் தந்தையாகவும், மர்யம் (அலை) அவர்களை எடுத்து வளர்த்த காப்பாளராகவும், ஈஸா நபியின் வளர்ப்புத் தந்தையாகவும் ஸக்கரியா (அலை) திகழ்ந்தார்கள். மற்றவர்களைப் போல் தமக்கொரு சந்ததி வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கும் இருந்தது. ஆனால் இவர்களால் தமக்கொரு சந்ததியை உருவாக்கிக் கொள்ள இயலவில்லை.

அவர்கள் ஆசைப்பட்ட பருவத்தில் அல்லாஹ்வும் அவர்களுக்கு சந்ததிகளை வழங்கவுமில்லை. பலமுறை அழுதழுது பிரார்த்தித்த பின்னால் அவர்களும் அவர்களது மனைவியும் தள்ளாத வயதை அடைந்த நிலையில் அவர்களுக்கு அல்லாஹ் ஓர் ஆண் மகனை வழங்கினான்.

அப்போது தான் ஸக்கரிய்யா இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்? என்று அவர் கேட்டார். தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான் என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 3:38,39,40)

அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! என்றார்.

ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை (என இறைவன் கூறினான்) என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன் என்று அவர் கூறினார். அப்படித் தான். அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவன் கூறுகிறான் என்றார். (அல்குர்ஆன் 19:3-9)

என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன் என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர். (அல்குர்ஆன் 21:89,90)

ஸக்கரிய்யா அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் செய்தியை அல்லாஹ் கூறிய போது அவர்களால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு தள்ளாத வயதை அடைந்திருந்தார்கள். இதனால் தம் மனைவி கர்ப்பமடைந்ததற்கு ஒரு அடையாளத்தை அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

எவ்வளவு தான் நல்லடியாராக இருந்தாலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் எவருக்கும் பங்கில்லை என்பதை இந்த நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

என்றோ மரணித்து விட்டவர்களின் மண்ணறைகளில் போய் சந்ததிகளைக் கேட்கும் சமுதாயமே! இவர்களெல்லாம் இப்ராஹீம் (அலை), ஸக்கரியா (அலை) அவர்களின் தூசுக்கும் கூட சமமாக மாட்டார்கள். அந்த நபிமார்களுக்கே தமக்கொரு சந்ததியை தாம் விரும்பும் நேரத்தில் உருவாக்கிக் கொள்ள முடியாத போது என்றோ மரணித்தவர்கள் எப்படி நமக்கு குழந்தைகளைத் தருவார்கள் என்று சிந்திக்க வேண்டாமா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்பதையும் மற்றவர்கள் உங்களைப் போலவே எந்த அதிகாரமும் வழங்கப்படாத அடிமைகள் என்பதையும் உணர மாட்டீர்களா?

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed