கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு
மனிதர்களில் குற்றம்புரிந்தவர்கள் மறுமையில் தண்டிக்கப்படுவதை போல் ஜின்களில் கெட்டவர்களும் தண்டிக்கப்படுவார்கள். உலகில் செய்த பாவங்களுக்காக நரக வேதனையை சுவைப்பார்கள்.
“உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று (அவன்) கூறுவான்.
அல்குர்ஆன் (7 : 38)
ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.
அல்குர்ஆன் (7 : 179)
மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.
அல்குர்ஆன் (11 : 119)
நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவருக்கான நேர் வழியைக் கொடுத்திருப்போம். மாறாக “அனைத்து மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.
அல்குர்ஆன் (32 : 13)
மனித ஜின் கூட்டங்களைப் பார்த்து நரகத்தை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகின்றீர்கள்?
குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே. அதற்கும், கொதி நீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
அல்குர்ஆன் (55 : 41.42.43.44.45)
நெருப்பால் படைக்கப்பட்டவர்களை நெருப்பால் தண்டிக்க முடியுமா? என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம்.
மண்ணால் படைக்கப்பட்ட மனிதன் மண் கற்களால் அடிக்கப்படும் போது மனிதன் வேதனைக்குள்ளாகிறான். இது போன்று மறுமையில் கெட்ட ஜின்களும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவது பாரதூரமான விஷயமில்லை.
வானுலக விஷயங்களை ஒட்டுக்கேட்பதற்காக ஜின்கள் முயற்சிக்கும் போது தீப்பந்தங்கள் அவர்களை விரட்டிச் சென்று கரித்துவிடும் என்ற தகவலை முன்பே பார்த்தோம். நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்களுக்கு நெருப்பு வேதனையை தரும் என்பதை இதன் மூலம் அறியலாம்.