நல்ல ஜின்களும் கெட்ட ஜின்களும்
மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பதைப் போன்று ஜின்களிலும் நல்வர்கள் தீயவர்கள் உண்டு. இதை பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
நம்மில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு இல்லாதோரும் உள்ளனர். பல வழிகளில் சிதறிக் கிடந்தோம் (என்று ஜின்கள் கூறின).
அல்குர்ஆன் (72 : 11)
எங்களில் மூடன் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுபவனாக இருந்தான். “மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று எண்ணிக் கொண்டிருந்தோம். (என்று ஜின்கள் கூறியது)
அல்குர்ஆன் (72 : 4)
இவர்களுக்குத் தோழர்களை நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நஷ்டமடைந்தோராகி விட்டனர்.
அல்குர்ஆன் (41 : 25)
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.
என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை. (சுருக்கம்)
அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம்-5033