தொழுகையில் ருகூவிலிருந்து எழும் போது

ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்தி, பின்னர் கைகளைக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா லக்கல் ஹம்து’ என்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 789

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: புகாரி 735

நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போதும், ருகூவு செய்யும் போதும், தம் இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 589

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.

ரப்பனா (க்)கல் ஹம்து.

நூல்: புகாரி 789

ரப்பனா வல(க்)கல் ஹம்து.

நூல்: புகாரி 732*

அல்லாஹும்ம ரப்பனா (க்)கல் ஹம்து.

நூல்: புகாரி 796

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து.

பொருள்:
எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!

நூல்: புகாரி 7346

ரப்பனா (க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ (இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே உரியது!)

நூல்: புகாரி 799

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று இமாம் கூறும் போது பின்பற்றித் தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறத் தேவையில்லை. மேற்கூறப்பட்ட வாசகங்களில் ஏதாவது ஒன்றைக் கூறினால் போதுமானது.

ஏனெனில் இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும் போது நீங்கள் ரப்பனா (க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 722

\ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?\

சிலர் ருகூவிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். சவூதி அரேபியாவில் இருந்த அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள், ருகூவிலிருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டும்; இது விடுபட்ட நபி வழி’ என்று கூறினார். இதன் அடிப்படையில் சிலர் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டி வருகின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும்.

நபி (ஸல்) அவர்களின் கூற்றைக் கவனித்தால் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டக் கூடாது, கீழே விட வேண்டும் என்பதை அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள்.

நூல்: புகாரி 828

நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்து எப்படி நிற்பார்கள் என்பதை விளக்கும் நபித் தோழர்கள் ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரவேண்டுமானால் கைகளைக் கீழே விட்டால் தான் சாத்தியம். கைளைக் கட்டினால் மூட்டுக்கள் அதனதன் இடத்துக்கு வராது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கீழே விடுவது தான் நபிவழி என்பதை அறியலாம்.
—————————
தொழுகை சட்டங்கள்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *