தொழுகையில் ருகூவு செய்தல்

நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.

ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ இருக்கக் கூடாது.

‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: புகாரி 735

நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போதும், ருகூவு செய்யும் போதும், தம் இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 589

அபூஹுமைத் (ரலி), அபூஉஸைத் (ரலி), ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) ஆகியோர் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அபூஹுமைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட நான் நன்கு அறிந்தவன். நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தமது இரு கைகளாலும் இரண்டு மூட்டுக் கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள்.

மேலும் தமது இரு கைகளையும் (வளைவு இன்றி) நேராக ஆக்கினார்கள். மேலும் இரு கைகளையும் விலாப்புறத்தை விட்டும் விலக்கி வைத்தார்கள்‘ என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் ஸஹ்ல்,
நூல்கள்: திர்மிதீ 241, அபூதாவூத் 628

நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தலையை உயர்த்தவும் மாட்டார்கள்; ஒரேயடியாகத் தாழ்த்தவும் மாட்டார்கள்; இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வைப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 768

‘ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி),
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017, அபூதாவூத் 729, இப்னுமாஜா 860, தாரமீ 1293

‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?என நபித்தோழர்கள் கேட்டனர்.

தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: அஹ்மத் 11106

\ருகூவில் ஓத வேண்டியவை\

பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.

சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.

நூல்: நஸயீ 1121

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்) அல்லாஹும்மக்ஃபிர்லி

(இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)

நூல்கள்: புகாரி 794, முஸ்லிம் 746

ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)(த்)தி வர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)

நூல்: முஸ்லிம் 752

ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: முஸ்லிம் 740

ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான(க்) கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்) அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 817, முஸ்லிம் 746
————————
தொழுகை சட்டங்கள்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed