தொழுகையில் துணை சூராக்கள் ஓதுதல்
சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.
முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள்.
பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள்.
ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும், சுப்ஹிலும் செய்வார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்கள்: புகாரி 776, முஸ்லிம் 686
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முப்பது வசனங்கள் அளவு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: நஸயீ 472
\ஒரு அத்தியாயத்தை எல்லா ரக்அத்களிலும் ஓதுதல்\
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் இதா ஸுல்ஸிலத்தில் அர்லு என்று தொடங்கும் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்களிலும் ஓதினார்கள்.
நூல்: அபூதாவூத் 693
\வரிசை மாற்றி ஓதுதல்\
துணை அத்தியாயங்களை ஓதும் போது குர்ஆனில் உள்ள வரிசைப்படி ஓத வேண்டும் என்பது அவசியமில்லை. வரிசை மாற்றியும் ஓதலாம். உதாரணமாக 114 வது அத்தியாயமாக உள்ள நாஸ் அத்தியாயத்தை ஓதிவிட்டு 113 வது அத்தியாயமாக உள்ள ஃபலக் என்ற அத்தியாயத்தை ஓதலாம்.
ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது முதலில் (இரண்டாவது அத்தியாயமான) ஸூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள். பின்னர் (நான்காவது அத்தியாயமான) ஸூரத்துந் நிஸாவை ஓத ஆரம்பித்தார்கள்.
பின்னர் (மூன்றாவது அத்தியாயமான) ஸூரத்து ஆலஇம்ரானை ஓத ஆரம்பித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: முஸ்லிம் 1291
\ஒரு அத்தியாயத்தைப் பிரித்து ஓதுதல்\
துணை சூரா ஓதும் போது ஒரு அத்தியாயத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஓதுவதும் கூடும்.
நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் ஸூரத்துல் அஃராஃப் அத்தியாயத்தை இரண்டு ரக்அத்துகளில் பிரித்து ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ 981
———————
தொழுகை சட்டங்கள்