நல்ல நண்பனின் அடையாளம் நான்கு.?

நல்ல நண்பனின் அடையாளம் நான்கு

  • அவனைப் பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வரும்
  • அவனுடன் உட்கார்ந்தால் அறிவு வளரும்
  • அவனுடைய செயல்கள் மறுமை நாளை நினைவுப்படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறான செய்தி திர்மிதி 2144ல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் நட்பின் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ் பரப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாறு நண்பனின் அடையாளம் நான்கு என்று எந்த செய்தியும் ஜாமிவுத் திர்மிதியில் இல்லை. எந்த கிதாபிலும் இல்லை.

அதே சமயம், மூன்று தன்மைகளை உள்ளடக்கிய ஒரு செய்தி முஸ்னத் அபீ யஃலா என்ற ஹதீஸ் கிரந்தத்தில் 2437வது இலக்கத்திலும் முஸ்னத் அப்து பின் ஹுமைத் என்ற கிரந்தத்தின் 631வது இலக்கத்திலும் இன்னும் சில இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அருகில் அமர்பவர்களில் சிறந்தவர் யார்? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, யாரை பார்ப்பது அல்லாஹ்வை உங்களுக்கு நினைவுப்படுத்துமோ, யாரிடம் பேசுவது உங்களது கல்வியை அதிகப்படுத்துமோ, யாருடைய செயல் உங்களுக்கு மறுமையை நினைவூட்டுமோ அவரே ஆவார் என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும்.

 

இந்த செய்தியில் இடம்பெறும் முபாரக் பின் ஹஸ்ஸான் என்பவரை அறிஞர்கள் குறைக்கூறியுள்ளனர். குறைக்கூறியுள்ளனர்.

இவர் ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் அபூதாவூத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் பலமானவர் இல்லை என்றும் இவரது ஹதீஸில் ஆட்சேபனை உள்ளது என்றும் இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் என்றும் பொய்யர் என்றும் இமாம் அஸ்தீ கூறியதாக இமாம் ஹஜர் கூறியுள்ளார்.

தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 10 பக்கம் 25

இவ்வாறான பல விமர்சனங்கள் இவர் மீது கூறப்படுவதால் இவரது அறிவுப்புகள் ஏற்கத்தகுந்தது இல்லை என ஆகிறது. எனவே இந்த செய்தி பலவீனமானதாகும்.

மேலும், இதே செய்தி இப்னு ஷாஹீன் என்பவருக்குரிய அத்தர்கீப் என்ற நூல் வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் உமர் பின் ஸாலிம் அல்அஃப்தஸ் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
இவரை இப்னு ஹிப்பான் மாத்திரம் சரியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஹிப்பான் மாத்திரம் ஒருவரை சரியானவர் என்று குறிப்பிட்டால் அதை ஏற்க இயலாது. ஏனெனில், இவர் யாரென்று அறியப்படாதவர்களையும் கூட சரியானவர் என்று சான்றளிக்கும் அலட்சியப்போக்குள்ளவர். இதுதவிர இவர் மீது எந்த நிறையும் குறையும் காணப்படாததால் இவர் நிலை அறியப்படாத மஜ்ஹூலுல் ஹால் எனும் அந்தஸ்த்தில் உள்ளவர்.

இந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களின் அறிவிப்பு ஏற்கப்படாது. இவ்வாறு இந்த செய்தியின் எல்லா அறிவிப்புகளும் இருக்க இந்த செய்தியை பரப்புவதோடு மட்டுமல்லாமல் இந்த செய்தியில் இல்லாத மற்றுமொரு நான்காவது தன்மையையும் சேர்த்து பரப்பிக் கொண்டிருக்கிறோம்.
இது எவ்வளவு குற்றம் என்பதை கற்பனைச் செய்துப்பாருங்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]