லா இலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்

ஒரு நாளைக்கு மூன்று தடவை ஓதுங்கள். அவ்வாறு ஓதினால்..

1. வறுமை வராது,
2. கப்ரின் கேள்வி கணக்கு எளிதாக இருக்கும்,
3. குடும்பத்தில் பிரச்சனை வராது,
4. சொர்க்கம் கடமையாகிறது.

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இச்செய்தியை பரப்பி வருகிறார்கள். இந்தச் செய்தி மேற்குறிப்பிடப்பட்டதைப் போன்று எங்கும் கிடைக்கப் பெறவில்லை. அதே சமயம், மூன்று முறை மேற்படி துஆவை ஓத வேண்டும் என்பதற்குப் பதிலாக நூறு முறை ஓத வேண்டும் என்றும், குடும்பத்தில் பிரச்சனைகள் வராது என்பதற்குப் பதிலாக செல்வம் வழங்கப்படும் என்றும் சில மாற்றத்துடன் ஒரு சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன் என்று ஒவ்வொரு நாளும் நூறு முறை கூறுபவருக்கு,

1. வறுமையிலிருந்து பாதுகாப்பும்,
2. மண்ணறையின் அச்சத்திலிருந்து பாதுகாப்பு வழங்கப்படும்,
3. செல்வது அவரிடம் இழுத்துக் கொண்டு வரப்படும்,
4. சுவனத்தின் வாசல் அவருக்கு சீட்டு குலுக்கிப் போடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூ நுஐமுடைய ஸிஃபத்துல் ஜன்னா என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாக அறிவிப்பாளர் தொடர் இடம்பெற்றுள்ளது.
அலீ (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியைக் கேட்டதாக இடம்பெறும் அறிவிப்பாளர் அலீ பின் ஹுசைன்ன்பவர் ஆவார். இவர் அலீ (ரலி) அவர்களின் பேரன் ஆவார். அலீ (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 40ல் மரணித்தார்கள்.
அவர்களது பேரனான அலீ பின் ஹுசைன் அவர்கள் ஹிஜ்ரி 38ல்தான் பிறக்கிறார்.

அலீ பின் ஹுசைன் அவர்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கருத்துக்களை தனது தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் பதிவு செய்த இப்னு ஹஜர் அவர்கள் அது பற்றிய தெளிவை இறுதியில் விளக்கும்போது, அலீ பின் ஹுசைனிற்கு 23 வயது இருக்கும்போது அவரது தந்தை ஹுசைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஹுசைன்(ரலி) அவர்கள் மரணித்த ஆண்டு ஹிஜ்ரீ 61 ஆகும் என்று கூறுகிறார்.

தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 7, பக்கம் 270)

ஹிஜ்ரி 61ஆம் ஆண்டில் இவருக்கு 23 வயது என்றால் இரண்டு எண்ணிக்கையையும் கழிக்கும்போது இவரது பிறப்பு ஆண்டான ஹிஜ்ரி 38 நமக்குக் கிடைக்கிறது. இதன் அடிப்படையில் ஹிஜ்ரி 40ல் மரணித்த அலீ (ரலி) அவர்களிடத்தில் ஹிஜ்ரி 38ல் பிறந்தவர் எவ்வாறு கேட்டிருக்க முடியும்?

அலீ (ரலி) மரணிக்கும் போது இவருக்கு வெறும் 2 வயது தான் இருந்திருக்கும். 2 வயதுக் குழந்தை ஒரு செய்தியை எவ்வாறு கேட்டு உள்வாங்கியிருக்க முடியும்? அப்படியென்றால் இந்தச் செய்தியில் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் பேரன் அலீ பின் ஹுசைன் அவர்களுக்கும் மத்தியில் யாரோ ஒரு அறிவிப்பாளர் இருந்திருந்தால் மாத்திரம்தான் அலீ பின் ஹுசைன் அவர்களுக்கு இந்தச் செய்தி அறியக் கிடைத்திருக்கும்.

ஆனால், அப்படியொரு அறிவிப்பாளர் அவ்விருவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் தொடரில் இல்லை என்பதால் இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தியாக இருக்கிறது.
அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த செய்தி ஏற்கத்தக்கச் செய்தியாக ஆகாது. அந்த வகையில் இந்தச் செய்தி பலவீனமடைகிறது. மேலும், இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஃபழ்ள் பின் கானிம் என்பவர் இடம்பெறுகிறார்.

இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

ஃபழ்ள் பின் கானிம் என்பார் ஒரு பொருட்டாக இல்லை என்று இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவர் பலமானவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் கதீப் கூறியுள்ளார்.

லிஸானுல் மீஸான், பாகம் 6, பக்கம் 347

எனவே, மேற்படி குறைகள் இச்செய்தியின் அறிவிப்பாளர் விஷயத்தில் இருப்பதால் இந்தச் செய்தி இதன் காரணமாகவும் பலவீனமானதாகும். மேலும், இதே செய்தி ஹில்யத்துல் அவ்லியா எனும் புத்தகத்தின் 8ஆம் பாகம், 280ஆம் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில், ஏற்கனவே கூறப்பட்டதைப் போன்று வறுமையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற கூலி கூறப்படாமல் மற்ற மூன்று கூலிகள் மாத்திரம் கூறப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமானதாகும்.
இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக அலீ பின் ஹுசைன் என்பவர் கூறுகிறார்.

இதற்கு முந்தைய அறிவிப்பிலாவது அலீ பின் ஹுசைன் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் அலீ (ரலி) அவர்கள் நபித்தோழரின் இடத்தில் இருந்தார். அலீ (ரலி) அவர்களிடமிருந்து அலீ பின் ஹுசைன் எந்த செய்தியையும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே அது பலவீனமானது.

ஆனால் இந்தச் செய்தியில் அலீ பின் ஹுசைன் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக வருகிறது. இவர் நபித்தோழர் அல்ல. இவர் தாபீஃ ஆவார். தாபீஃ என்ற அந்தஸ்தில் உள்ளவர்கள் நபி காலத்திற்குப் பின்னால் வந்தவர்கள் ஆவர். எனவே, ஒரு தாபீஃ நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருக்க வாய்பில்லை அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த நபித்தோழரும் இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறவில்லை என்பதால் இது “முர்ஸல்” என்ற வகையைச் சார்ந்த, அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.

மேலும், இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஸாலிம் அல்கவ்வாஸ் என்பார் இடம்பெறுகிறார்.
இவர் பலவீனமானவர் ஆவார்.

ஸாலிம் அல்கவ்வாஸ் என்பவர் தனது புத்தகங்களைப் புதைத்து விட்டு, தனது மனனத் தன்மையிலிருந்து தவறாக அறிவிப்பார் என்று முஹம்மது பின் அவ்ஃப் கூறியுள்ளார். இவர் வழியாக நான் எதையும் பதிவு செய்ய மாட்டேன் என்றும் இவர் இட்டுகட்டப்பட்ட செய்திக்கு ஒப்பான, மறுக்கப்பட வேண்டியவைகளையே அறிவிப்பார் என்றும் இமாம் அபூ ஹாதம் கூறியுள்ளார்.

அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 4, பக்கம் 267

இவர் துணைச் சான்றாக கூட எடுத்துக் கொள்ள இயலாத, மறுக்கபட வேண்டியவைகளையே அறிவிப்பார் என்று இமாம் உகைலீ கூறியுள்ளார்.

அல்லுஅஃபா, பாகம் 2, பக்கம் 165

இத்தகைய பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றதாலும் இந்தச் செய்தி மேலும் பலவீனமடைகிறது.
மேலும், இந்தச் செய்தி வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் ஒரு அறிவிப்பாளர் தொடரை தனது இலல் (பாகம் 3, பக்கம் 107) என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இந்தச் செய்தியிலும் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் பேரன் அலீ பின் ஹுசைன் அவர்களுக்கும் மத்தியில் வேறொரு அறிவிப்பாளர் இடம்பெறாமல் இவரே அலீ (ரலி) அவர்களிடமிருந்து கேட்டதைப் போன்று உள்ளது. (இவர் அலீயிடமிருந்து கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை முன்னரே விளக்கிவிட்டோம்)
மேலும், இந்தச் செய்தியில் அபூஹனீஃபா ஸல்ம் பின் முகீரா என்பவர் இடம்பெறுகிறார்.

அபூஹனீஃபா ஸல்ம் பின் முகீரா என்பவர் பலமானவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.

தாரீகு பக்தாத், பாகம் 9, பக்கம் 147

இதைத் தாண்டி இவர் மீது எந்தக் குறையும், எந்த நிறையும் சொல்லப்படாததால் இந்த அறிவிப்பும் பலவீனமாகிறது. ஆக, இந்தச் செய்தியின் ஒட்டுமொத்த அறிவிப்பும் பலவீனமாகவுள்ளதால் இது ஏற்கத்தக்க செய்தி கிடையாது. மேலும், இந்த பலவீனமான செய்தியின் எந்த அறிவிப்பிலும் இடம்பெறாத வார்த்தைகளை அதில் சேர்த்தும் இருக்கிறார்கள்.

இவ்வளவு பலவீனமான செய்தியை நாம் பரப்பலாமா?  இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதை விட்டும் தவிர்ந்து கொள்வோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed