இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!
பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறான். அவற்றுள் ஒரு வசனத்தைப் பாருங்கள்.
‘உங்கள் இறைவனை நம்புங்கள்!’ என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை ‘‘எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!’’ (என்றும் முஃமின்கள் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 3:191,192
தினமும் பல்வேறு தேவைகள், தீர்வுகளைக் கேட்டு, படைத்தவனிடம் நாம் மன்றாடுகிறோம். அவ்வாறு கையேந்தும் போதெல்லாம், ‘இறைவா! நல்லோருடன் என்னைச் சேர்ப்பாயாக!’ என்றும் அதிகம் அதிகமாகக் கேட்க வேண்டும்.
நல்லோர் என்றால் நம்முடைய பார்வையில் நல்லவர்கள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஈருலகிலும் வெற்றி பெறும் வகையில் வாழ்பவர்களைக் குறிக்கும். அதாவது, அவர்கள் படைத்தவனைச் சரியாக நம்பி, அவன் சொன்னபடி முறையாக வாழ்பவர்கள்.
இத்தகைய மக்களுடன் இருக்கும் வாய்ப்பை ஈருலகிலும் வழங்குமாறு வல்ல ரஹ்மானிடம் நாம் முறையிட வேண்டும். இவ்வாறு கேட்பதை வழமையாக்கிக் கொள்வது நல்லது. இன்னும் சொல்வதாயின் பல நபிமார்கள் இந்த துஆவைச் செய்திருக்கிறார்கள்.
தனி மனிதராக இருந்து ஒரு பெரும் சமுதாயம் செய்வது போன்று வீரியமாகவும் விவேகமாகவும் ஏகத்துவத்தை எடுத்துரைத்த இப்ராஹீம் நபி அவர்கள் இந்த துஆவைக் கோரியிருக்கிறார்கள்.
என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!
திருக்குர்ஆன் 26:83-85
ஒவ்வொரு நாளும் படிப்பு, வியாபாரம், தொழில், வேலை என்று பல காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். பல வகையான மனிதர்களைச் சந்திக்கிறோம்.
இவ்வேளையில் நம்முடன் இருப்பவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டியவாறு வாழ்வதோடு, நம்மையும் அவ்வாறு வாழத் தூண்டுபவர்களாக, உதவி செய்பவர்களாக இருப்பது மிகப்பெரும் பாக்கியம் ஆகும்.
இவ்வகையில் பார்க்கும் போது, இந்த துஆ எந்தளவு முக்கியம் என்பதை விளங்க முடிகிறது. ஆகவே தான் பெரும் அந்தஸ்திலும், அதிகாரத்திலும் இருந்த நபிமார்களும் கூட அல்லாஹ்விடம் இந்த வேண்டுதலை முன்வைத்து இருக்கிறார்கள்.
“என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிலவற்றை) வழங்கியிருக்கிறாய். (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!’’ (என்று யூசுப் நபி கூறினார்.)
திருக்குர்ஆன் 12:101
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர். அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’’ என்று ஓர் எறும்பு கூறியது.
அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’’ என்றார்.
திருக்குர்ஆன் 27:17-19
சமூகத்தின் எந்தப் படித்தரத்தில் நாம் இருந்தாலும் இந்த துஆவைக் கேட்க மறந்துவிடக் கூடாது. ‘நல்லவர்களை என்னுடன் சேர்த்து வை’
என்பதைக் காட்டிலும் ‘நல்லோருடன் என்னைச் சேர்ப்பாயாக’ என்று பணிவோடும் அடக்கத்தோடும் கேட்க வேண்டும். இந்தப் பாடம் நபிகளாரின் வாழ்விலும் நமக்கு இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கிய மானவர்களாக இருந்தபோது, ‘‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படாத வரையில்’ அல்லது ‘(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை’’ என்று சொல்லி வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்டபோது அவர்கள் மூர்ச்சை அடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், “இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், “இனி நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள்’’ என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற) செய்தி இதுதான் என்று (இப்போது) நான் அறிந்து கொண்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4437
சமூக சூழலைக் கவனித்தால் இந்தப் பிரார்த்தனையின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம். ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்பார்கள். யாருடன் இருக்கிறோமோ அவர்களைப் பொறுத்து நமது நடவடிக்கைகள் மாறும். உலக விஷயங்களுக்கு மட்டுமல்ல! மார்க்கக் காரியங்களுக்கும் இது பொருந்தும்.
நல்ல சிந்தனைகளும் செயல்களும் கொண்ட மக்களோடு இருக்கும் போது பல நன்மைகள் கிடைக்கும். அவர்களைப் போன்று சிறிதளவேனும் நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். அவர்களிடம் இருக்கும் நற்குணங்களும், பண்புகளும் நம்மிடம் தோன்றக் கூடும்.
அதேசமயம், கெட்ட மக்களோடு இருக்கும் போது அறிந்தோ அறியாமலோ நாமும் வழிகெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை அழகான முறையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கி இருக்கிறார்கள்.
நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி 2101
இறையச்சம் கொண்ட மக்களோடு இருப்பதன் மூலம் பாவங்களை விட்டுப் பலரும் மீண்டு வருவதைப் பார்க்கிறோம். அதே போன்று சேர்க்கை சரியில்லாத காரணத்தினால், செய்யக்கூடாத காரியங்களிலே சிக்கிக் கொள்வோர் ஏராளம்.
இன்னும் ஏன்? இணைவைப்பு, பித்அத், மூடநம்பிக்கை சார்ந்த செயல்களில் பலர் விழுவதற்கு உடனிருப்பவர்கள் காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம்.
இப்படி, நம்முடன் இருப்பவர்கள் நமது இம்மை வாழ்வை மட்டுமல்ல; மறுமை வாழ்வையும் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’’ என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’’ எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை’’ (எனவும் கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 74:40-47
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
….(மறுமையில் முஃமின்கள் நரகத்தின் மீதிருக்கும் பாலத்தைக் கடந்தே சொர்க்கம் செல்வார்கள்.) இறை நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தைக் கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பி விடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார்.
பின்னர், தாம் தப்பித்து விட்டோம் என்பதை நம்பிக்கை கொண்ட மக்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள்.
அப்போது அவர்கள், “எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)’’ என்று வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’’ என்று கூறுவான்.
அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.
பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். “எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறை நம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்’’ என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’’ என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7439
வெளிப்படையில் இவர் நல்லவராக இருக்கிறார்; ஆனால் நம் கண் முன் இல்லாத நேரத்தில் இவர் எப்படி இருப்பாரோ? ஒருவேளை கெட்டவராக இருப்பாரோ? என்று எல்லோரையும் சந்தேகிக்க ஆரம்பித்தால் எவரிடமும் பழக இயலாது. ஆகவே அனைவரின் மனதையும் திரைமறை வாழ்வையும் அறிந்த அல்லாஹ்விடம் இதற்காக உதவி தேடுவதே பொருத்தமானது.
இதன்படி இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தரத்தில் இருப்போருடன் இணைந்திருக்க விரும்புபவர்கள், இத்துஆவை அன்றாடமும் ஓதவேண்டும். அத்துடன் நிற்காமல், அதற்கேற்ப தமது வாழ்வை அமைத்துக் கொள்வதும் அவசியம்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை நல்லோருடன் சேர்ப்போம்.
திருக்குர்ஆன் 29:9
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
திருக்குர்ஆன் 4:69
நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், “அல்லாஹ்வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே’’ என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே’’ என்று கூறுவதற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் “திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே’’ என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!
திருக்குர்ஆன் 39:55-58
ஏக இறைவனை சரியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அதன் அடையாளமாக நல்லறங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய செயல்களை எதற்காகவும் விட்டு விடக் கூடாது. அவ்விருவரும் தடுத்த காரியங்களை எவருக்காகவும் செய்துவிடக் கூடாது.
இவ்வாறு ஏகத்துவக் கொள்கையில் உறுதியோடு வாழ்ந்தால் ஈருலகிலும் வெற்றியாளர்களுடன் இருக்க இயலும். இத்தகைய ஈடேற்றத்தை நம் அனைவருக்கும் தந்து அல்லாஹ் அருள்புரிவானாக!