பெண் குழந்தை ஒரு நற்செய்தி!

1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண் குழந்தை பிறப்பைப் பெரும் துக்க நிகழ்வாகக் கருதி வந்த மக்களிடையே பெண் குழந்தை ஒரு நற்செய்தி என்று திருக்குர்ஆன் எடுத்துரைத்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றிய நற்செய்தி கூறப்பட்டால் அவன் துக்கமடைந்து, அவனது முகம் கருத்துப் போய் விடுகிறது. அவனுக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் மூலம் ஏற்பட்ட கவலையால், அதை இழிவுடன் வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் புதைத்துவிடுவதா என (எண்ணி) மக்களை விட்டும் ஒளிந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் தீர்மானிப்பது மிகக் கெட்டது.

அல்குர்ஆன்  16:58, 59

பெண் குழந்தை பிறப்பை துக்கமாகக் கருதுவதும், அவளை உயிருடன் புதைப்பதும் மிகவும் கெட்டது என்று கண்டிப்பதுடன் அவள் ஒரு நற்செய்தி என்று திருக்குர்ஆன் பகிரங்கப்படுத்துகின்றது.

ஆண் குழந்தை – பெண் குழந்தை இரண்டுமே இறைவனின் நாட்டப்படியே பிறக்கின்றது. இதில் ஆண் குழந்தை பிறந்தால் உயர்வு என்றோ, பெண் குழந்தை பிறந்தால் தாழ்வு என்றோ அல்லாஹ் வகைப்படுத்தவில்லை. இரண்டுமே இறைவனின் அருளின் வெளிப்பாடுகளே!

பெண் குழந்தை பிறப்பை தாழ்வாகக் கருதும் சமூகம் பின்வரும் வசனத்தைச் சிந்திக்க வேண்டும்.

வானங்கள்  மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49,50

நபியின் நெருக்கம்

ஓர் ஆண் தவறிழைப்பதையும் ஒரு பெண் தவறிழைப்பதையும் இந்தச் சமுதாயம் சமமாகக் கருதுவதில்லை. இதுபோன்ற பாரபட்சத்தை இஸ்லாமிய மார்க்கம் காட்டவில்லை. எனினும் சமுதாயத்தின் நிலை அவ்வாறுதான் உள்ளது.

ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகள் வளர்ப்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டியவர்கள்.

அதனால்தான் கண்ணும் கருத்துமாக இரு பெண் குழந்தைகளை வளர்ப்பவர்களுக்கு மறுமையில் நபியின் நெருக்கம் எனும் பாக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் கூறுகிறார்கள்.

யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்  என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள்.

(நூல்: முஸ்லிம் 5127)

இந்த வகையில் நபிகளாரின் நெருக்கம் எனும் பாக்கியத்தைப் பெற்றுத்தர பெண் பிள்ளைகள் உதவுகிறார்கள். அவர்களை நாம் சரியாக வளர்த்தால் அந்தச் சிறப்பு நிலையை அடையலாம்.

நரகைத் தடுக்கும் திரை

பெண் குழந்தைகள் என்றாலே பெரும் சோதனைகள் தாம் என்று சிலர் சலித்துக் கொள்கின்றனர்.

எந்தக் குழந்தையாக இருப்பினும் அதை வளர்த்து ஆளாக்குவதில் சில சிரமங்கள் இருக்கவே செய்யும்.

ஆனாலும் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிரமத்தைத் தாங்கிக் கொள்கின்ற போது அது மறுமையில் மிகப் பெரிய சேமிப்பாக மாறுகிறது.

பெண் குழந்தைகளால் சோதனைக்கு உள்ளாக்கப்படுவோருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள் என்று நபிகளார் நவின்றுள்ளார்கள்.

ஒரு பெண்மணி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 1418

ஒரு பெண் குழந்தையை வளர்க்கப் பொறுப்பேற்று சிரமத்தைச் சந்தித்தால் அவருக்கும் இத்தகைய சிறப்பு உண்டு.

என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு என்னிடம் கிடைக்கவில்லை. எனவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 5995

இதன் மூலம் பெண் குழந்தை என்பவள் வெறுக்கப்பட வேண்டியவள் அல்ல! விரும்பப்பட வேண்டியவள் என்பதை அறியலாம். ஏனெனில் அவள் ஒரு நற்செய்தி!

–ஆர். அப்துல் கரீம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed