நினைப்பதற்கும் நன்மை
மார்க்க விசயத்திலோ, உலக விசயத்திலோ ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்ய வேண்டுமென நினைத்தால், அந்த நல்ல எண்ணத்தைப் பாராட்டும் வகையில் அதற்கும் அல்லாஹ் கூலியை வழங்குகிறான்.
“(எனது அடியான்) அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்” என்று அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (7501)
ஆகவே எந்தவொரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் கூலியைப் பெறுவதற்காக செய்கிறோம் என்ற மனத்தூய்மை அவசியம். அப்போது தான், ஒருவேளை அந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் கூட அதைச் செய்ய வேண்டுமென நினைத்ததற்கு அல்லாஹ்விடம் கூலியைப் பெற முடியும்.
பத்து முதல் எழு நூறு வரை நன்மைகள்
நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு அல்லாஹ் பத்து முதல் எழு நூறு வரை நன்மைகளைத் தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்குரிய ஆதாரத்தைப் பார்ப்போம்.
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (7501)
ஒரே காரியத்தை ஒரே நேரத்தில் பலர் செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் எந்தளவுக்கு சரியாகவும் ஆர்வமாகவும் செய்கிறார்களோ அதைப் பொறுத்து அவர்களுக்கு வழங்குப்படும் நன்மையில் வித்தியாசம் ஏற்படும்.
முயற்சி செய்வதற்கும் நன்மை
ஏதேனும் ஒரு நற்காரியத்தைச் செய்வதற்கு முனையும் போது போது அதைச் செய்ய முடியாமால் போனாலும் கூட அந்த முயற்சிக்கும் அல்லாஹ் கூலி தருகிறான். இதைப் பின்வரும் நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயை, பள்ளத்தாக்கைக் கடந்தாலும் அவர்களும் நம்முடன் இருக்கும் நிலையிலேயே அதை நாம் கடந்து வருகிறோம். (ஏற்கத்தகுந்த) சில காரணங்களே (புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்து விட்டன’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2839)
அல்லாஹ்வின் பாதையில் அவனது மார்க்கத்தைக் காப்பதற்காக போர்க்களத்தில் கலந்து கொள்வது சாதாரண விசயமல்ல. அது மிகச்சிறந்த அறச்செயல். அதில் கலந்து கொண்டு திரும்பி வருபவர்களுக்குக் கிடைக்கும் அதே நன்மை, மதீனாவிலுள்ள சில தோழர்களுக்கும் கிடைக்கும் என்கிறார்கள், நபியவர்கள்.
அவர்கள் விரும்பினாலும், முயற்சித்தாலும் நிர்ப்பந்தமான சூழலால் தான் அவர்கள் போருக்கு வரமுடியவில்லை. ஆகவே போரில் கலந்து கொண்டவர்களுக்குக் கிடைப்பது போன்ற கூலி அவர்களுக்கும் கிடைக்கும் என்று நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதை மனதில் கொண்டு நற்காரியங்களைச் செய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
இரு மடங்கு நன்மைகள்
பத்து முதல் எழுநூறு மடங்கு வரை தருகிற நன்மையை சிலருக்கு, சில காரியங்களுக்கு அல்லாஹ் இரண்டு மடங்கு பெருக்கித் தருகிறான். இதற்குப் பின்வரும் காரியத்தை உதாரணமாக கூறலாம்.
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி (4937)
திருக்குர்ஆனை ஓதும் போது ஒரு எழுத்துக்கு அல்லாஹ் பத்து நன்மைகளை வழங்குகிறான். இது பற்றி நபியவர்கள் நமக்கு தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஒருவர் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சிக்கிறார். சிரமாக இருந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து ஓதுகிறார்.
இவர் குர்ஆனில் ஒவ்வொரு எழுத்தை படிக்கும் போதும் இருபது நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.இவ்வாறு நன்மைகளை இரண்டு மடங்காகப் பெற்றுத் தரும் காரியங்கள் பற்றி மார்க்கத்தில் நிறைய கூறப்பட்டுள்ளன.
பத்து மடங்கு நன்மைகள்
சில காரியங்களுக்கு இரண்டு மடங்கு கூலி தருவது போன்று சில காரியங்களுக்கு அல்லாஹ் பத்து மடங்கு கூலியைத் தருகிறான். ஒரு முறை அந்தக் காரியத்தைச் செய்தாலும் பத்து முறை செய்த நன்மையை வழங்குகிறான். இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
(நபியவர்கள் மிஃராஜ் பயணம் சென்றார்கள். அப்போது அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது கடமையாக்கப்பட்டு உள்ளது’ என்பதும் அடங்கும்)
….. நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவன் ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அல்லாஹ், ‘சொல் என்னிடம் மாற்றப் படுவதில்லை; அதை (ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (7517)
முஹம்மது நபியின் சமூகத்தினராகிய நாம், ஒரு நாளைக்கு ஐம்பது நேரம் தொழ வேண்டுமென அல்லாஹ் முதலில் கட்டளையிட்டான். பிறகு, நபிகளாரின் கோரிக்கையை ஏற்று, நம் மீது இரக்கம் காட்டி அதை ஐந்து நேர தொழுகையாகக் குறைத்து விட்டான். ஐவேளை கடமையான தொழுகையை நிறைவேற்றினால் ஐம்பது வேளைகள் தொழுத நன்மையைத் தருவதாகவும் அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான். இவ்வாறு பத்து மடங்கு நன்மையைப் பெற்றுத் தரும் காரியங்கள் மார்க்கத்தில் நிறைய கூறப்பட்டுள்ளன.
அளவில்லா நன்மைகள்
பத்து முதல் நூறு வரை நன்மைகள் என்பதையும் கடந்து சில நற்செயல்களுக்கு அல்லாஹ் கணக்கற்ற கூலியைத் தருகிறான். அளவில்லா நன்மைகள் பெற்றுத் தரும் காரியங்கள் பற்றி குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்பட்டுள்ளன. இதற்குச் சான்றாக ஒரு செய்தியை மட்டும் காண்போம்.
‘நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1904)
நிரந்தரமான நன்மைகள்
பொதுவாக, ஒரு காரியத்திற்கு ஒரு முறை கூலி வழங்கப்படும். ஆனால், சில காரியங்களுக்கு தொடர்ந்து பல நாட்கள் நன்மைகள் தரப்படும். எந்தளவுக்கு என்றால், அந்தக் காரியத்தைச் செய்தவர் மரணித்து விட்டாலும் அவருக்கு நன்மைகள் பதிவாகிக் கொண்டே இருக்கும். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான தர்மம் 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (3358)
ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வனவிலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி (3161)
எல்லாச் செயலுக்கும் நன்மைகள்
வழிபாடுகள், கடமைகள் போன்றவற்றிற்கு மட்டுமல்ல, உலகத்தில் எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கும் அல்லாஹ்விடம் நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதோ அல்லாஹ்வின் தூதர் சொல்வதைக் கேளுங்கள்.
…இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! சொல்லுங்கள்! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்’’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1832)
பசி, தாகம், தூக்கம் போன்று பாலுணர்வு என்பதும் பருவம் அடைந்தவர்களுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவையை மார்க்க வரம்புக்குள் நின்று முறையாகத் தீர்த்துக் கொள்பவருக்கும் அல்லாஹ் நன்மையைத் தருவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாறு, அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுச் செய்கிற செயல்கள் அனைத்திற்கும் மறுமையில் நன்மைகள் கிடைக்கும். இதைப் பின்வரும் செய்தி மூலமும் புரிந்து கொள்ள முடிகிறது.
‘ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (55)
அனைத்துச் சூழலிலும் நன்மைகள்
எந்த மனிதருக்கும் வாழ்க்கை முழுவதும் ஒரே விதமான சூழல் இருக்காது. இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். எப்போதும் நமது மனநிலை மார்க்கம் சொன்ன அடிப்படையில் இருந்தால் அனைத்து சூழலிலும் நாம் நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய நற்செய்தியைப் பாருங்கள்.
இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
நூல்: முஸ்லிம் (5726)
பிறர் செய்தாலும் நமக்கு நன்மை
நேரத்தை ஒதுக்கி, உடல் உழைப்பைச் செலுத்தி நாம் செய்கிற காரியங்களுக்கு நன்மைகளைத் தருவதைப் போன்று, சில வேளை அடுத்தவர் செய்யும் காரியங்களுக்கும் கூட அல்லாஹ் நமக்கு நன்மைகளை, நற்கூலியை அளிக்கிறான்.
எப்போது இந்த மாதிரி நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். ஏதேனும் நற்காரியத்தைச் செய்யுமாறு பிறரிடம் பரிந்துரையோ, அறிவுரையோ சொல்லும் போது அதைச் செய்பவர்களுக்குக் கிடைப்பது போன்ற நன்மை நமக்கும் கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய நாவினால் நிறைவேற்றித் தருவான்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: புகாரி (1432)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை” என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (3846)
நாம் எவரிடமும் எந்தக் காரியத்தையும் செய்யும் படி கூறவில்லை. ஆனால், அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன காரியத்தைச் செய்யும் போது நம்மைப் பார்த்து மற்றவர்களும் அதைச் செய்தால், அவர்களுக்குக் கிடைப்பது போன்ற நன்மை நமக்கும் கிடைக்கும். இதைப் பின்வரும் செய்தி மூலம் அறியலாம்.
நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த ‘கம்பளி ஆடை’ அல்லது ‘நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு ஸாஉ கோதுமை, ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்“ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிலிருந்தும் ஒரு ஸாஉ பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1848)
நமது தீமைகளை விடவும் நன்மைகள் அதிகமாக இருக்கும் போது தான் மறுமையில் முழுமையான வெற்றியைப் பெற முடியும். ஆகவே, நாம் நரகிலிருந்து தப்பித்து, சொர்க்கம் செல்வதற்கு ஏற்ப மேற்கண்டவாறு அல்லாஹ் ஏராளமான வழிகளில் நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறான். அந்த வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!