ஆடம்பரத்தை விரும்பாத அரபுலக ஜனாதிபதி!

மக்களுக்கு நல்ல பல திட்டங்களை வகுத்து சேவையாற்றுதற்கான களம் தான் அரசியல் களம். ஆனால் தற்போது, குறுகிய கால முதலீட்டில் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி, பரம ஏழையாக இருந்தவன் கூட அரசியலில் குதித்து ஒரு சில ஆண்டுகளில் கோடிகளுக்கு அதிபதியாக்கும் வியாபாரக்களமாக இன்றைய அரசியல் மாறிவிட்டது.

நாளொன்றுக்கு மூன்று வேளை பசியாற வழியின்றி டீ விற்றவன் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகிறான். மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கிடந்தவன் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கோட் சூட் அணிகிறான். பலதரப்பட்ட உணவுகள், பல்வேறு நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா என மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாக இன்றைய அரசியல்வாதிகள் மிதந்து வருவதைக் காண்கிறோம். இந்நிலையை, பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் பட்டிதொட்டிகளில் இருக்கும் வார்டு உறுப்பினர்கள் வரைக்கும் காண முடிகிறது.

ஆனால் நபி (ஸல்) அவர்களோ இவர்களுக்கு நேர்மாற்றம். நபிகளாரும் சில ஆண்டுகள் மக்களுக்கு ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். ஆனால் தற்காலத்து அரசியல்வாதிகளைப் போல் வகைவகையாக உண்ணவில்லை! ஆடம்பர உடைகளை உடுத்தவில்லை! பல வகையான பொருட்களைப் பயன்படுத்தவில்லை! பஞ்சு மெத்தைகளில் உறங்கவில்லை! செல்வத்தைத் தன் பெயரிலோ பினாமிகளின் பெயரிலோ குவிக்கவில்லை! மாளிகைகள் பல கட்டவில்லை! தமது வாரிசுகளை, தமது சொத்துக்கோ பதவிக்கோ வாரிசாக்கவில்லை! அதற்கான வரலாற்று வரிகள் இதோ!

ஜனாதிபதி வீட்டில் அடுப்பெரியவில்லை

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது”  என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.  “என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?”  என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி)  “பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்” என விடையளித்தார்.

அறிவிப்பவர்: உர்வா

நூல்: புகாரி 2567, 6459

வயிரார உணடதில்லை

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை நபியவர்களின் குடும்பத்தினர் மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை  என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5374

ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபியவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.  “இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு, “குழம்புடன் கூடிய ரொட்டியை நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே”  என விளக்கமளித்தார்.

நூல்: புகாரி 5423

பொறித்த இறைச்சியைக் கண்ணிலும் கண்டதில்லை

நபி (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி ‘சாப்பிடுங்கள்’ என்று அனஸ் (ரலி) கூறி விட்டு, “நபி (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டை அவர்கள் தமது கண்களால் பார்த்ததில்லை”  எனக் கூறினார்.

அறிவிப்பவர்: கதாதா

நூல்: புகாரி 5385, 5421, 6457

வகைவகையான உடைகளை அணியவில்லை

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்  என்று குறிப்பிட்டார்.

நூல்: புகாரி 3108, 5818

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து “இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்” என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 1277, 2093, 5810

ஆடம்பர வாழ்வில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்த வில்லை. அலங்காரப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல்: புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 6456

பஞ்சு மெத்தைகளில் உறங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள்  “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்’’ எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  “எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது”  எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

பகலில் பாய்! இரவில் கதவு!

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்  என்று நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 730, 5862

நபி (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன்.  ஏன் அழுகிறீர்  என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?”  என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  “இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?”  எனக் கேட்டார்கள்.

இதை உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 4913

இருள் நிறைந்த ஜனாதிபயின் இல்லம்

நபி (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துகளை அங்கேயே விட்டு விட்டு, எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை மட்டும் எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும்  இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்  எனக் கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.

நூல்: புகாரி 3906

நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு தொழும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் தமது நெற்றியை நிலத்தில் வைப்பதற்குக் கூட எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் நபி (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது  என நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல்: புகாரி 382, 513, 1209

நபி (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபி (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.

நூல்: புகாரி 729

நபி (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.

செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபி (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.

நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விடக் கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் தலைமையைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைப்பிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.

நபி (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ? என யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

முப்பது படி கோதுமைக்காக நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபி (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துகளின் பட்டியலைப் பாருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபி (ஸல்) விட்டுச் சென்றார்கள்.

நூல்: புகாரி 2739, 2873, 2912, 3098, 4461

நபி (ஸல்) அவர்களது ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபியவர்களும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகளாரிடம் இருந்தது. அதுதான் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபி மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துகள் இவை தாம்.

அந்த அற்பச் சொத்துக்களும் எனது மரணத்துக்குப் பின் அரசைச் சேரவேண்டும் என்று அறிவித்து விட்டு மரணித்தார்கள்.

எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக் காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபியவர்கள் அறிவித்தார்கள்.)

நூல்: புகாரி 2776, 3096, 6729

நபிகளாரின் சொத்து மதிப்பு

பொதுவாக ஒரு அரசியல்வாதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அனைத்து மக்கள் மீது கடமையாகும். அவர் அரசியலுக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பு என்ன? வந்த பின்னர் என்ன சம்பாதித்தார்? எவ்வளவு சேமித்தார்? என மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசியல்வாதிக்கு உண்டு.

நபி (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.

அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது. ஏதாவது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.

தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.

மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையாஎன்றார்கள். அவர் கிடாய்  என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி  நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி)

நூல்: அஹ்மத் 17172

நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நபி (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.

புகழை விரும்பவில்லை

நபி(ஸல்) அவர்கள் ஆட்சித்தலைமை மூலம் செல்வம் சேர்க்காவிட்டாலும் புகழுக்காவது ஆசைப்பட்டார்களா? எனக் கேள்வி எழலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள்  இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2433, 2055, 2431

கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ  என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை  என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. அள்பா என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராமவாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராமவாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள்  இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2872, 6501

எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம்.

இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபியவர்களை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபி (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. ‘எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்’  என்று கூறினார்கள். “இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்”  எனவும் கூறினார்கள்.

நூல்: புகாரி 2821, 3148

இது நபி (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபியவர்களை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்குக் கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபியவர்கள் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடலின் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபி (ஸல்) அவர்களின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி  உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக  என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.

நூல்: புகாரி 3149, 5809, 6088

சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.

உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான முஹம்மது நபியை, முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராமவாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்தவனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது. உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்  என்று கோரிக்கை வைக்க முடிகின்றது.

இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபியவர்களால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

மக்களோடு மக்களாக…

நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம்  இந்த ஆட்டைச் சமையுங்கள்  என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்” என்று விடையளித்தார்கள்.

நூற்கள்: அபூதாவூத் 3773, பைஹகீ 14430

ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மணமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்கு வசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.

மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரியதாகக் கருதப்பட்டு வந்ததால் தான் கிராமவாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ, மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபி (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில் தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பண்பாளர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி மரியாதை பெற்றார் எனக் கூற முடியுமா?

ஏன் இந்த எளிய வாழ்க்கை?

நபி (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.

மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.

அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.

இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.  நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதாஎன்று பேரனிடம் கேட்டார்கள்.

நூல்: புகாரி 1485, 1491, 3072

நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அரசியல்வாதியும் வாழ்ந்து காட்டினால் நாடு செழிக்கும் என்பதிலை ஐயமில்லை.

— ஆர். ரஹ்மத்துல்லாஹ்

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed