நஷ்டத்திற்குரிய எண்ணம்
———————————————-
அல்லாஹ்விற்காகச் செய்கிறோம் என்றில்லாமல் பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தனக்குப் புகழாரம் சூட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு காரியத்தை ஒருவன் செய்கிறான் எனில் இது நஷ்டத்திற்குரிய எண்ணம்.
இந்த எண்ணத்துடன் செய்யப்படும் காரியங்களால் எந்த நன்மையும் கிடையாது. மாறாக, சிறிய இணைவைப்பு என்ற குற்றம் நம் கணக்கில் பதியப்படும். நமது எண்ணத்தை அனைவருக்கும் இறைவன் அம்பலப்படுத்துவான். இறைவனை பார்க்கின்ற மிகபெரும் பாக்கியத்தையும் இழக்க நேரிடும்.*
நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ரியா (முகஸ்துதி) என்று பதிலளித்தார்கள். நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள் என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி)
நூல்: அஹ்மத் 22528
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப் படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப் படுத்துவான் என்று கூறியதைக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6499
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத் தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கஜன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூசயீத் (ரலி)
நூல் புகாரி 4919
தூய எண்ணத்துடன் சிறிய காரியம் செய்தால் கூட அதற்கு இறைவனிடம் பெரிய கூலி எப்படி வழங்கப்படுகிறதோ அதே போல தூய எண்ணமின்றி முகஸ்துதிக்காக செய்தால் பெரிய காரியத்திற்கு கூட எந்த நன்மையும் கிடைக்கப்பெறாமல் நரகமே பரிசாக கிடைக்கும்.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன் என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும் என்பதற்காகவே போரிட்டாய்.
நீ வீரன் என்று (உலகிலேயே) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.
அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.
அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்? என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார்.
அதற்கு அல்லாஹ், நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3537
உயிர்த்தியாகி, கொடை வள்ளல், ஆலிம் என்று மூவரும் இஸ்லாத்தின் மிகபெரும் காரியங்களைச் செய்தவர்கள். ஆனால், அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தின் முடிவு?
என்ன காரியம் என்பது முக்கியமல்ல. எண்ணமே முக்கியம் என்பதை இந்தச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது.
எனவே, எந்தக் காரியம் செய்தாலும் எண்ணத்தின் முடிவை வைத்தே இறைவனிடம் கூலி வழங்கப்படுகிறது.
———————
ஏகத்துவம்