வெள்ளி அன்று பெருநாள் வந்தால்…?
ஜும்ஆ தினத்தில் பெருநாள் வருமானால் நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுகை தொழுது விட்டு ஜும்ஆத் தொழுகையை விட்டுவிடலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற அத்தியாயத்தையும், ஹல் அதாக ஹதீஸுல் காஷியா என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்து விட்டால் இரு தொழுகைகளிலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2065
இந்த ஹதீஸில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1073
பெருநாள் தொழுகை தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கி உள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.
மேற்கண்ட ஹதீஸில் பகிய்யா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவரை சில அறிஞர்கள் குறை கூறி உள்ள காரணத்தினால் இந்த ஹதீஸை சில அறிஞர்கள் நிராகரிக்கின்றனர். இதன் அடிப்படையில் செயல்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். பகிய்யா என்பவர் அறிஞர்களால் குறை கூறப்பட்டது உண்மை என்றாலும் அவரது நம்பகத்தன்மை குறித்தோ, நினைவாற்றல் குறித்தோ யாரும் குறை கூறவில்லை. மாறாக, அவர் நம்பகமானவர்கள் கூறுவதையும், நம்பகமற்றவர்கள் கூறுவதையும் அறிவித்து இருக்கிறார் என்பது தான் அவர் மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டு!
இது போன்ற தன்மையில் இருக்கின்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஹதீஸ் கலை வல்லுநர்களின் முடிவாகும். பகிய்யா என்ற இந்த அறிவிப்பாளர் குறித்து அறிஞர்கள் குறிப்பிடும் பொழுது, இவர் அறிமுகமற்றவர்கள் வழியாக ஒரு செய்தியை அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அறிமுகமானவர்கள் வழியாக இவர் அறிவித்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவரது கருத்தையே யஹ்யா பின் முயீன், அபூ சுர்ஆ, நஸயீ, யஃகூப், அஜலீ ஆகியோர் வழி மொழிகின்றனர். இவர் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸ் முஸ்மிலும் இடம் பெற்று இருக்கிறது.
ஏகத்துவம்