கணவனுக்கு மனைவி கட்டுப்பட மறுத்தால்
————————————————————-
கணவன் மனைவிக்குப் பொறுப்பாளன் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே மனைவியை நல்வழிப்படுத்துவதும் அவள் தவறு செய்தால் அவளைக் கண்டிப்பதும் கணவனின் கடமை. இதைப் பின்வரும் குர்ஆன் வசனம் ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
*சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்*.
அல்குர்ஆன் (*4 : 43)*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.*
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : *புகாரி (2554)*
பெண்கள் தங்களுடைய கணவன்மார்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது. மனைவி தவறு செய்யும் போது ஆண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தனது குடும்பத்தினர் தவறு செய்யும் போது அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடவில்லை. மாறாக தமது கோபத்தை வெளிப்படுத்தி அவர்களைக் கண்டித்துள்ளனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் உள்ள திரைச் சீலை ஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறம் மாறி விட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்து விட்டார்கள். மேலும் அவர்கள், *மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப் படங்களை வரைகின்றவர்களும் அடங்குவர்* என்று சொன்னார்கள்.
நூல் : *புகாரி (6109)*
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், *பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?* என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, “உம்மு யஅகூப்’ எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, *இப்படிப் பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே* என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?* என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெண், *(குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே!* என்று கேட்டார். அதற்கு அவர்கள், *நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்* எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லையா?” என்று கேட்டார்கள்.
அந்தப் பெண், *ஆம் (ஓதினேன்)* என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்* என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, *உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன்* என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், *சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!* என்று கூறினார்கள். ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், *என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழ மாட்டேன்* என்று கூறினார்கள்.
நூல் : *புகாரி (4886)*
தீமையைக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.
*உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்* என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)
நூல்: *முஸ்லிம் 70*
தீமையைக் கையால் தடுக்க சக்தி இல்லாதவர்கள் தான் அடுத்த கட்ட நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கு கையால் தடுக்க முடியும் என்றால் அவர் தீமையை இந்த வழியில் தான் தடுக்க வேண்டும்.
கணவனைப் பொறுத்தவரை மனைவி செய்யும் தவறை கையால் தடுக்க சக்தி உள்ளவன். உபதேசம் செய்தும் மனைவி கேட்காவிட்டால் அப்போது மனைவியை அடிப்பது தவறல்ல.
எனவே மனைவி செய்யும் தவறுகளைக் கணவன் கண்டிக்காமல் இருந்தால் தீமையை ஆதரித்த குற்றமும் கடமை தவறிய குற்றமும் அவர் மீது ஏற்படும்
____________
*ஏகத்துவம்*