விவாகரத்துக்குப் பின் கணவன் வீட்டில் மனைவி இத்தா இருக்கலாமா ?
விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும்.
இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருக்க வேண்டும். அவளை கணவன் வெளியேற்றக் கூடாது. அவளும் வெளியேறக் கூடாது.
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்
திருக்குர்ஆன் 65:1
திருமண பந்தம் இன்னும் முழுமையாக நீங்காததால் மனைவிக்கு கணவன் வீட்டில் இருக்க முழு உரிமை உண்டு. இதனால்தான் உங்கள் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றாதீர்கள் என்று சொல்லாமல் உங்கள் மனைவியரை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
திருமண பந்தம் முழுமையாக நீங்காததால் அவளுக்கும் அந்த வீட்டில் உரிமை உண்டு என்பதற்காகவே அவர்களின் வீடுகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
விவாகரத்து செய்த பின்னும் ஏன் கணவன் வீட்டில் இத்தா காலம் வரை மனைவி தங்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்கிறான். இதன் பின்னர் ஏதேனும் ஒரு (நல்ல) காரியத்தை அல்லாஹ் உண்டாக்குவான் என்பதுதான் அந்தக் காரணம்.
விவாகரத்துச் செய்த உடன் மனைவி தனது தாய் வீட்டுக்குப் போய்விட்டால் அந்தப் பிரிவு நிரந்தரமாகி விடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. கணவன் வீட்டிலேயே அவள் இருந்தால் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு முதல் விவாகரத்து முடிவுக்கு வந்து இருவரும் சேர்ந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
அல்லாஹ் இருவருக்கும் இடையே இணைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே வீட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்றும், பெண்கள் வெளியேறாதீர்கள் என்றும் கட்டளை பிறப்பிக்கிறான்.
மனைவி விபச்சாரம் செய்த காரணத்துக்காக விவாகரத்து நடந்தால் அப்போது மட்டும் விவாகரத்து நடந்தவுடன் அவர்களை வெளியேற்றலாம் என்பதும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
இத்தாவின் காலம் முடிந்தவுடன் மனைவியுடன் சேர்ந்து கொண்டால் பிரச்சனை இல்லை. சேராவிட்டால் அழகிய முறையில் பிரிந்துவிட வேண்டும் என்று அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் நிரந்தரமாகப் பிரிந்து விடுவதால் இதற்கு மேல் அவர்கள் கணவன் வீட்டில் இருக்க முடியாது.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]