மூஸா நபி வானவரைத் தாக்கினார்களா?


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார். இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இதை எடுத்துரைத்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டி யிருப்பேன் என்று கூறினார்கள்.

ஹம்மாம் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

-புகாரி : 3407

அல்லாஹ் ஒருவருக்கு மரணத்தைக் கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மலக்குல் மவுத்தை அல்லாஹ் அனுப்பினால் மூஸா அலை அவர்கள் தமது உயிரை எடுக்க ஒத்துழைத்து இருக்க வேண்டும். அல்லது வாழ்நாளை அதிகரிக்க கோரிக்கை வைத்திருக்க வேண்டும். உயிரை எடுக்கவே நியமிக்கப்பட்டு இருக்கும் மலக்குகள் அவரின் அனுமதியில்லாமல் அல்லாஹ் சொன்னதை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

“அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.”

-திருக்குர்ஆன் 6 : 61

“அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.”

-திருக்குர்ஆன் 21 : 27

“தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.”

-திருக்குர்ஆன் 16 : 50

“நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.”

-திருக்குர்ஆன் 66 : 6

இத்தகைய தன்மை பெற்ற வானவர்கள் அல்லாஹ் சொன்னதைத் தான் செய்வார்களே தவிர அடிவாங்கிக் கொண்டு திரும்ப மாட்டார்கள் என்ற சாதாரண அறிவு இருப்பவர் கூட இதை ஏற்க மாட்டார்.

அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது ஒரு முஃமினின் மீது கடமை. இறைவன் அளித்த தீர்பபை நிராகரித்ததோடு அத்தீர்ப்பைக் கொண்டு வந்த தூதரையும் தாக்குவது இறைத் தூதரின் பண்பாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும்.

வந்தவர் வானவர் என்று தெரிந்து கொண்டே அவரை அறைந்து விரட்டியது அல்லாஹ்வுக்கு எதிரான செயல் என்ற சாதாரண உண்மை தெரிந்தவர்கள் இதை நம்ப முடியுமா?

இதை நம்பினால் அல்லாஹ்வை எதிர்த்துப் பேசலாம் என்ற நிலை வருகின்றது.

அல்லாஹ்வை எதிர்த்த யூனுஸ் நபியின் வரலாற்றை அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டியிருக்கின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். “அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்” என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

-திருக்குர்ஆன் 21:87,88

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

-திருக்குர்ஆன் 68:48,49,50

யூனுஸ் நபியின் சம்பவத்தை அல்லாஹ் சொல்லிவிட்டு முஹம்மதே மீன் வயிற்றில் இருந்தாரே அவரைப் போன்று ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கின்றான்.

இப்படி ஒன்று நடந்திருந்தால் மூஸா நபியையும் கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கியிருப்பானே? எனவே இதுவும் கட்டுக்கதை என்று தான் மூஸா நபியை மதிப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed