வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்

மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும்.

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். ‘என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?’ என்று கேட்டார். நான் ஆம் என்றேன். ‘இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்’ என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர்: கப்ஷா

நூல்கள்: திர்மிதி 85, நஸயீ 67, அபூதாவூத் 68 பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிருந்து தெரிகின்றது. மேலும் ‘இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்’ என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது.

மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம்.

‘நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரீ 172

 

சூடாக்கப்பட்ட தண்ணீர்

சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

காத் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.

எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.

 

வீட்டில் உளூச் செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.

ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார்.

தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 477, முஸ்லிம் 1059

 

பள்ளிவாசல் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, பள்ளிவாசன் சார்பில் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.

தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர்.

நபி (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயவில்லை. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர்.

எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்’ என்று அனஸ் (ரலி) கூறினார்கள். ‘(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?’ என்று அவர்களிடம் நான் கேட்டேன். ‘எண்பது பேர்கள்’ என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுமைத்

நூல்: புகாரீ 3575

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *