தண்ணீர்

உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.

ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்; குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

கடல் நீர்

கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.

கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது’ என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது; அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 382

எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.

பயன்படுத்திய தண்ணீர்

சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடு’ம் என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹப்களிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள்.

தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள்.

பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர்.

பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.

பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.

பின்னர், ‘எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்

நூல்: புகாரீ 160

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

(புகாரீ 192)

நபி அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தூக்கத்திருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 162

படக் கூடாத இடத்தில் கை பட்டிருக்கும் என்பதற்காகவே கையை நபி (ஸல்) அவர்கள் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் ஏற்கத் தேவையில்லை.

மீதம் வைத்த தண்ணீர்

பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.

‘கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரீ 263

கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க அடிப்படையிலான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்காது. தண்ணீரை எடுப்பதற்காகக் கையைக் கொண்டு செல்லும் போது கையிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிருந்து விளங்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed