இறைத்தூதர்கள் துன்பப்பட்டது ஏன்?
நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர். சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர். அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2:214
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.
திருக்குர்ஆன் 12:110
‘அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.)
திருக்குர்ஆன் 14:12
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
திருக்குர்ஆன் 38:41,42
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
திருக்குர்ஆன் 6:33
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.
திருக்குர்ஆன் 6:34
அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப் பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்’ என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே’ என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)’ என்று அவர்கள் கூறினர். ‘எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்’ என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 12:83-86
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 6:17
‘அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188
நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.
எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.
நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.
இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றார்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்’ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். ‘அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது.
‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறியது. ‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள்.
அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.)
வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி. ‘நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்’ என்று அவர் கூறினார்.
‘எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!’ (என்றார்).
அல்குர்ஆன் 27:20-28
ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.
சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’ என்று ஓர் எறும்பு கூறியது.
அல்குர்ஆன் 27:18
அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.
பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.
ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் ‘இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்’ என்றான். ‘அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? ‘என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!’ என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்
அல்குர்ஆன் 20:88-90
மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! ‘இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று புரிந்து கொள்ள முடியாது. இது போலவே எதிர் காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
இறந்தவரை ஒரு தடவை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்தி விட்டனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 6599, 1749
ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.
அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
அற்புதங்கள் பல நிகழ்த்திய ஈஸா நபியை அழைக்கும் கிறித்தவர்களைக் காஃபிர்கள் என்று கூறும் இவர்களுக்கு, ஈஸா நபிக்குச் சமமாகாத மற்றவர்களை அழைப்பது ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.
பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.
ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.
மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3084
உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது; இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.
அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?
அற்புதங்கள் நடக்கட்டுமே! அதனால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்று ஆகிவிடுமா? ஸாமிரியும் தான் அற்புதம் நிகழ்த்தினான். அற்புதத்தைப் பார்த்துத் தான் மக்கள் ஈமானைப் பறிகொடுத்தார்கள்.
நாளை தஜ்ஜால் வந்து அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டும் போது அவனிடம் துஆச் செய்வார்களா? துஆச் செய்யலாம் எனக் கூறுவார்களா?
அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றன எனக் கூறுகிறார்களே அது கூட உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.
செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கை கூடாத 998 பேர் வாயைத் திறப்பதில்லை. ‘இவரெல்லாம் ஒரு மகானா’ என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.
இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதை நாம் பார்க்கிறோம்.
ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.
மாறாக
கோவில்களில் நடக்கின்றன.
சர்ச்சுகளில் நடக்கின்றன.
இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.
இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாக காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.
இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.
ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும் போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.
அந்த நேரம் வரும் போது தர்காவில் இருப்பவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும் போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.
அந்த நேரம் வரும் போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேயின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்பது குர்ஆனின் போதனை.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 7:34,
‘அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 10:49
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 16:61
எனவே அற்புதம் பற்றி தெளிவாக அறிந்து கொண்டால் இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட முடியும்.