நபியவர்களின் பார்வையில் சமாதிகள்

கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை,ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப் படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (1430)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி); நூல்: முஸ்லிம் (1768, 1769)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறை யையும் குளியலறையையும் தவிர

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி); நூல்: அஹ்மத் (11801)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: அபூ தாவூத் (1746)

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே சமாதிகளை நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed