இஷ்ராக் தொழுகை லுஹா தொழுகை அவ்வாபீன் தொழுகை இந்த மூன்று தொழுகையும் தொழலாமா❓
முந்நூறு தஸ்பீஹ்களை நான்கு ரக்அத்தில் குறிப்பிட்ட முறையில் செய்வதுதான் தஸ்பீஹ் தொழுகையாகும்.
முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லி–ல்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் கிராஅத் ஓதிய பிறகு ருகூவுக்கு முன்னர், நிலையில் 10 தடை மேற்சொன்ன தஸ்பீஹை ஓதவேண்டும்.
பின்னர் ருகூவில் எப்போதும் ஓதும் தஸ்பீஹுக்குப் பின் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை ஓதவேண்டும். பின்னர் ருகூவிலிருந்து எழுந்து 10 தடவையும், ஸஜ்தாவில் 10 தடவையும் இரண்டு இருப்பிற்கு இடையில் 10 தடவையும், இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும் மொத்தம் ஒரு ரக்அத்தில் 75 தடவை ஓத வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் போது மொத்தம் நான்கு ரக்அத்தில் 300 தடவை ஏற்படும்.
இத்தொழுகை தொடர்பாக அபூராஃபிவு (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அலீ (ரலி), இப்னு உமர் (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி), உம்முஸலமா (ரலி), அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி)யை நோக்கி, “என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பாஸ் (ரலி), “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்! ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவை கூறுவீராக!
பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவை கூறுவீராக.
பின்னர் ஸஜ்தா செய்து அதிலும் 10 தடவை அதனை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை கூறுவீராக! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள், நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! ஒரு வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக!” இவ்வாறு சொல்-லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி),
நூல் திர்மிதீ (444)
அபூராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி திர்மிதீ, இப்னுமாஜா, இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனுஸ் ஸுக்ரா, இமாம் தப்ரானீ
அவர்களின் அல்முஃஜமுல் கபீர் ஆகிய நான்கு நூற்களில் இடம்பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெறுகிறார்.
மூஸா பின் உபைதா அர்ரபதீ என்பார் அபூ அப்துல் அஜீஸ் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டவர். இவரின் நினைவாற்றல் காரணமாக யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் மற்றும் இவரல்லாதவர்களும் விமர்சித்துள்ளனர். மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கப்பட்டவர். யஹ்யா பின் ஸயீத் மற்றும் இவரல்லாதவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
நூல்: திர்மிதீ 3262
இவரைப்பற்றி இமாம் புகாரியிடம் இமாம் திர்மிதீ அவர்கள் கேட்டபோது… முஜாலித், மூஸா பின் உபைதா ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதிக் கொள்ள மாட்டேன் என இமாம் புகாரீ குறிப்பிட்டார்கள்.
நூல்: இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம் 1, பக்கம் 309
இதைப் போன்று அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானதவே உள்ளது.
அவ்வாபீன் தொழுகை என்பது நபிமொழிகளில் லுஹாத் தொழுகையே குறிப்பிடப்படுகிறது. அவ்வாபீன் தொழுகையும் லுஹாத் தொழுகையும் ஒன்றே. எனவே லுஹாத் தொழுகை தொடர்பாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம்.
இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.
முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி ஒரு ஹதீஸ் (1361) இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அல்காஸிம் அஷ் ஷைபானீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது. எனினும் லுஹா என்ற சொல்லின் பொருளிலிருந்து அதன் நேரத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
லுஹா என்பதற்கு முற்பகல் என்று பொருள். எனவே இத்தொழுகையை முற்பகலில் தொழ வேண்டும் என்று முடிவு செய்யலாம்.
இரண்டு ரக்அத்கள்
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகையைத் தொழுமாறும் ஆகிய இம்மூன்று விஷயங்களை என் தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 1981, முஸ்லிம் 1303
நான்கு ரக்அத்கள்
“ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்கள்
தொழு! பகலின் கடைசிக்கு நான் உனக்குப் பொறுப் பேற்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்கள்: திர்மிதீ 438, அஹ்மத் 26208
எட்டு ரக்அத்துகள்
“நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது எனது இல்லத்தில் குளித்து விட்டு எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதை விடச் சுருக்கமாக வேறு எந்தத் தொழுகையும் அவர்கள் தொழுததை நான் பார்த்ததில்லை. ஆயினும் ருகூவையும், ஸஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்” என்று உம்மு ஹானி குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா
நூல்கள்: புகாரீ 1103, முஸ்லிம் 562
இஷ்ராக் தொழுகை
சூரியன் உதித்த பின்னர் இரண்டு ரக்அத் தொழும் தொழுகையே இஷ்ராக் தொழுகை என்று கூறுகிறார்கள். ஆனால் இஷ்ராக் என்ற பெயரில் ஒரு தொழுகை உண்டு என்று நேரடியாக நபிமொழிகளில் இடம் பெறவில்லை.
மாலையிலும், காலையிலும் மலைகளும், ஒன்று திரட்டப்பட்ட பறவைகளும் அவருடன் இறைவனைத் துதிக்குமாறு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவனை நோக்கித் திரும்பக் கூடியவையாக இருந்தன.
(அல்குர்ஆன் 38:18,19)
இந்த வசனங்களில் காலை என்று மொழிபெயர்த்த இடத்தில் அரபியில் இஷ்ராக் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதை அடிப்படையாக வைத்துதான் இஷ்ராக் தொழுகை ஒன்று உண்டு என்று கூறுகின்றனர்.
பெரும்பாலான அறிஞர்கள் இது லுஹாத் தொழுகையே குறிக்கிறது என்றும். இஷ்ராக் தொழுகை என்பது லுஹாத் தொழுகையும் ஒன்றே என்று கூறியுள்ளார்கள்.
ஏகத்துவம்