வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?
கொலையைப் பெரும் பாவம் என்றும், நிரந்தர நரகத்திற்குரிய செயல் என்றும் அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இருப்பினும், நூறு கொலைகளைச் செய்த ஒருவனுக்கு இறைவன் மன்னிப்பளித்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
குறித்த செய்தி திருமறைக் குர்ஆனின் வசனங்களுக்கு நேரடியாக மோதக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. எனவே இது பற்றிய முழுமையான விபரங்களை இங்கு ஆராய்வோம். நூறு கொலை செய்தவனுக்கு மன்னிப்பளித்தமை பற்றிய செய்தி இதுதான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, “(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார்.
அந்தப் பாதிரியார், “கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்று விட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், “(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.
அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, “நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, “நீ தூரப் போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான்.
பிறகு, “அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
நூல் : புகாரி : 3470
மேலுள்ள செய்தியை விரிவாகப் பார்ப்போம்.
பனூ இஸ்ரவேல் சமுதாயத்தைச் சேர்ந்த மனிதன் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொலை செய்கின்றார். தான் செய்த கொலைக்கு மன்னிப்புண்டா என்று பாதிரியாரிடம் கேட்ட நேரம் அவர் இல்லை என்று மறுக்கின்றார். அவரையும் குறித்த மனிதன் கொலை செய்கின்றான். மொத்தம் நூறு கொலைகளைச் செய்தவன் மீண்டும் தனக்கு மன்னிப்புண்டா என்று விசாரிக்கின்றான்.
நல்லோர் வாழும் ஊருக்குச் சென்றால் மன்னிப்புண்டு என்று அவனுக்குச் சொல்லப்படுகின்றது. செல்லும் வழியில் அவர் மரணிக்கின்றார். மரணிக்கும் போது தான் சென்ற நல்லோர் வாழும் ஊர் பக்கம் சாய்ந்து இறந்து விடுகின்றான். கருணைக்குரிய (சுவர்க்கத்திற்குரிய) மலக்குகளும், தண்டனை கொடுக்கும் (நரகத்திற்குரிய) மலக்குகளும் அவர் விஷயத்தில் சர்ச்சைப் பட்டார்கள்.
உடனே அல்லாஹ், அவர் வசித்து வந்த ஊரை தூரமாகவும், அவர் செல்ல வேண்டிய ஊரை அவருக்கு பக்கமாகவும் ஆக்கி அவரை மன்னித்து சர்சையை முடித்து வைத்தான் என்று மேற்கண்ட செய்தி நமக்கு சொல்கின்றது. இப்போது மேற்கண்ட செய்தி குர்ஆனின் கருத்துக்கு எவ்வாறெல்லாம் முரண்பாடாக இருக்கின்றது என்பதைப் பார்ப்போம்.
வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா?
தொண்ணூற்றொன்பது கொலைகளைச் செய்து விட்டு எனக்கு மன்னிப்புண்டா என்று குறித்த கொலைகார மனிதன் ஒரு மதகுருவிடம் கேட்கின்றான். உனக்கு மன்னிப்பில்லை என்று மதகுரு மார்க்கத் தீர்ப்பு சொல்கின்றார். உனக்கு மன்னிப்பில்லை என்று சொன்னதற்காக அவரையும் குறித்த கொலைகார மனிதன் கொன்று விடுகின்றான். ‘உனக்கு மன்னிப்பில்லை” என்ற மதகுருவின் மார்க்கத் தீர்ப்பு சரியானதே.
வேண்டுமென்றே கொலை செய்தவனுக்கு மன்னிப்பில்லை, அவன் நரகத்தில் நிரந்தரமாக இருப்பான். என்பது மார்க்க நிலைபாடு. அதனால் தான் அவர் அத்தகைய பத்வாவை வழங்கினார்.
நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன்:04:93.)
ஒரு வாதத்திற்கு தொண்ணூற்றொன்பது கொலைகளைக் கூட அவன் தெரியாமல் செய்திருந்தான் என்று வைத்துக் கொண்டாலும், நூறாவது நபராக மதகுருவைக் கொலை செய்யும் போது தெரிந்து கொண்டு வேண்டுமென்றே தான் கொலை செய்கின்றான் என்பது மிகத் தெளிவானதாகும்.
நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன்:04:93.)
ஆகவே மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனப் பிரகாரம் நரகத்தில் நிரந்தரமாக தங்க வைக்கும் பெரும் பாவமான கொலையைத் தான் இவன் செய்துள்ளான் என்பது தெளிவானது. இவன் மன்னிப்புக்குத் தகுதியற்றவன் என்ற நிலையை தனது 100 வது கொலையின் மூலம் உறுதிப்படுத்தி விட்டான்.
ஒரு வாதத்திற்கு குறித்த கொலைகாரன் செய்த கொலைகளின் 99 கொலைகளை அவன் அறியாமல் செய்திருந்தாலும் 100வது கொலையை அறிந்தே செய்கின்றான் என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெளிவாக நாம் அறிந்து கொள்ளும் விஷயமாகும். இப்படி வேண்டுமென்றே கொலை செய்தவனுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இது குர்ஆன் கூறும் கருத்துக்கு மாற்றமானதாகும்.
ஓர் ஊரில் செய்த தவறுக்கு
இன்னொரு ஊரில் தான் மன்னிப்பா?
100 கொலைகளைச் செய்தவன் மீண்டும் பாவ மன்னிப்புக் கேட்க விரும்பிய நேரம் வாழும் ஊரை விட்டு இன்னொரு ஊருக்குச் சென்று பாவ மன்னிப்புக் கேட்குமாறு ஒருவர் கூறினாராம்…
(மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், “(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது…
ஒரு ஊரில் பாவம் செய்தவர் இன்னொரு ஊரில் சென்று தான் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நபியின் காலத்தில் – விபச்சாரம் செய்தவர்கள், பொய் சொன்னவர்கள், திருடியவர்கள் என எத்தனையோ தவறுகள் செய்தவர்கள் இருந்தும் அவர்களில் யாரையும் வேறு ஒரு ஊருக்குச் சென்று பாவமன்னிப்புக் கோருமாறு நபியவர்கள் கட்டளையிடவில்லை.
அப்படியொரு சட்டத்தை மார்க்கம் எங்கும் சொல்லவேயில்லையே? ஆனால் மேற்கண்ட ஹதீஸில் 100 கொலை செய்தவர் பாவமன்னிப்பு கோருவதற்காக வேறு ஒரு ஊருக்கு அனுப்பப்படுகின்றார். இதுவும் குறித்த செய்தி தவறானது என்பதை நமக்கு விளக்குகின்றது.
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன்:04:100.)
இறைவனுக்காக யாராவது ஹிஜ்ரத் செய்தால் அவர்கள் புறப்பட்டதுமே அவர்களுக்குரிய நன்மை கிடைத்துவிடும் என்று மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது. ஒரு நல்ல காரியத்திற்காக புறப்பட்டவுடன் அவருக்குரிய நன்மை கிடைத்துவிடும் என்பது தான் இதன் விளக்கமாகும்.
ஆனால் மேற்கண்ட செய்தியில் மன்னிப்புக் கோருவதற்காக சென்ற ஊரையும், வாழ்ந்த ஊரையும் அளந்து பார்த்ததாகப் பதியப்பட்டுள்ளது. அப்படியானால் ஒருவர் ஹிஜ்ரத் செய்தால் அவருக்கு நன்மை வழங்கும் முன் அவர் வாழ்ந்த ஊரையும், போய்ச் சேர்ந்த ஊரின் தூரத்தையும் அளந்து பார்த்துத் தானே இறைவன் நன்மை கொடுக்க வேண்டும்.
ஆனால் மேற்கண்ட 04:100 வது வசனமோ ஹிஜ்ரத்திற்காக புறப்பட்டவுடன் நன்மை கிடைத்துவிடும் என்றல்லவா கூறுகின்றது?
சர்சையில் ஈடுபட்ட வானவர்கள்?
….மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்) டார். அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, “நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான்.
இதை நோக்கி, “நீ தூரப் போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, “அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது…
நூல் : புகாரி : 3470
குறித்த கொலைகார மனிதன் பாவமன்னிப்பு வேண்டுவதற்காக அடுத்த ஊருக்குச் செல்லும் வழியில் இறந்தவுடன் அவரை சுவர்க்கத்திற்கு அழைத்து செல்வதா? அல்லது நரகத்திற்கு அழைத்து செல்வதா? என்பதில் மலக்குமார்களின் இரு குழுவினர் சர்ச்சையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் இறைவன் ஒரு தந்திரத்தை கையாண்டு இரு தரப்பாருக்கும் இடையில் சமரசம் செய்து வைத்ததாகவும் மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பு வானவர்கள் இவர் விஷயத்தில் சர்ச்சைப்பட்டுக் கொண்டதாக மேற்கண்ட செய்தி சொல்கின்றது. இது திருமறைக் குர்ஆனில் வானவர்களின் இலக்கணம் தொடர்பாக இறைவன் கூறும் செய்திகளுக்கு நேர்மாற்றமாக உள்ளது. வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
(திருக்குர்ஆன்:16:49, 50.)
அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
(திருக்குர்ஆன்:21:26,27.)
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
(திருக்குர்ஆன்:66:6.)
இறைவன் கட்டளையிட்டவற்றுக்கு மாறு செய்யாமல் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு செயல்படுவதுதான் மலக்குமார்களின் பண்பாகும். ஆனால் மேற்கண்ட ஹதீஸ் மலக்குமார்களின் இந்த பண்பை தெளிவாக மறுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இறைவனின் கட்டளைக்கு மலக்குமார்கள் மாறு செய்யமாட்டார்கள் அவன் ஏவியதைத் தான் செய்வார்கள் என்றால், மேற்கண்ட ஹதீஸில் குறித்த மனிதனை இறைவன் சுவர்க்கத்திற்கு அழைத்து வர கட்டளையிட்டிருந்தால் வேறு வேலையில்லாமல் இட்ட கட்டளைப்படி உடனடியான அவனுடைய பாவத்தை மன்னித்து அவனுக்கு ஈடேற்றம் கொடுப்பதே அவர்களின் பணியாக இருந்திருக்க வேண்டும்.
இல்லை, பாவமன்னிப்பு வழங்காமல் அவனை நரகத்திற்கு அழைத்து செல்வதுதான் மலக்குமார்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தால் அவர்கள் அதற்குரிய காரியங்களைத் தான் பார்த்திருக்க வேண்டும். மாறாக, இரு தரப்பு மலக்குமார்களும் அவனுடைய விஷயத்தில் தலையிடுகின்றார்கள்.
இரு தரப்பினரும் குறித்த மனிதனை நாங்கள் தான் அழைத்து செல்வோம் என்று சர்ச்சையில் ஈடுபடுகின்றார்கள். மலக்குமார்கள் இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்ற திருக்குர்ஆன் வசனங்களுக்கு அமைவாக, அவர்கள் செயல்படாது சர்ச்சையில் ஈடுபட்டமை குர்ஆனின் கட்டளைகளுக்கும் மலக்குமார்களின் பண்புகளுக்கும் மாற்றமானதாகும். அத்துடன் இவ்விடத்தில் இன்னொரு சந்தேகமும் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
- அதாவது குறித்த கொலைகார மனிதன் விஷயத்தில் முடிவெடுப்பதற்கு இறைவன் இரு தரப்பு மலக்குமார்களுக்கும் கட்டளையிட்டானா?
- மலக்குமார்கள் சர்ச்சைப்பட்டுக் கொள்வார்களா?
- சர்ச்சைப்பட்டுக் கொள்ளும் அளவுக்குள்ள பிரச்சினையா இது?
- தங்கள் பணியில் குழப்பம் அடையும் அளவுக்குத் தான் மலக்குமார்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் தருவது?
சர்ச்சைக்கு இறைவன் முற்றுப் புள்ளி வைத்தானாம்
மேற்படி குறித்த கொலைகார மனிதனின் விஷயத்தில் அவன் நல்லவனா? கெட்டவனா? பாவமன்னிப்பு வழங்கலாமா? கூடாதா? என்ற சர்ச்சையில் மலக்குமார்கள் ஈடுபட்ட வேலையில் அவர்களின் சர்ச்சைக்கு இறைவன் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு தந்திரத்தைச் செய்தானாம்.
…உடனே அல்லாஹ் அதை நோக்கி, “நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, “நீ தூரப் போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, “அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான்.
(அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது…
நூல் : புகாரி : 3470
அவன் வசித்த ஊரைப் பின்னோக்கி நகர்த்தியும், அவன் சென்று கொண்டிருந்த ஊரை முன்னோக்கி வர வைத்தும், பின்னர் மலக்குமார்களை அளந்து பார்க்க வைத்து பிரச்சினைக்கு இறைவன் முற்றுப் புள்ளி வைத்ததாக குறித்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
வேண்டுமென்று ஒரு கொலை செய்தவனுக்கு மன்னிப்பில்லை, அவன் நிரந்தர நரகத்திற்குரியவன் என்று இறைவன் சொன்னதற்குப் பின் (அல்குர்ஆன் 04:93) 100 கொலை செய்தவனுக்கு இறைவனே தந்திரம் செய்து மன்னிப்பளித்தான் என்பது இறைவனின் கண்ணியத்தையும், மகத்துவத்தையும் இழிவுபடுத்தும் கருத்தாகும்.
நபிமார்கள் தனது கட்டளைக்கு மாறு செய்தாலே கடுமையாக தண்டிப்பேன் என்று கூறும் இறைவன் 100 கொலை செய்த எவனோ ஒருவனைக் காப்பாற்றுவதற்காக தந்திரம் செய்தான் என்பது கேலிக் கூத்தான சிந்தனையாக இருக்கின்றது. இறைவனின் மகத்துவத்தை கெடுக்கும் செயல்பாடாக இருக்கின்றது.
எதிர்வாதங்களும் நமது பதில்களும்
எதிர்வாதம் :
மேற்கண்ட 100 கொலை தொடர்பான செய்தியை உண்மை என்று வாதிடுபவர்கள் மலக்குமார்கள் இவ்வாறு போட்டியிடுவார்களா? என்று நாம் கேட்கும் கேள்விக்கு கீழ்க்காணும் ஹதீஸை ஆதாரம் காட்டுகின்றார்கள். மலக்குமார்கள் போட்டியிடுவார்கள் என்பதற்குரிய ஆதாரமாகவே கீழ்க்காணும் செய்தியை இவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள்.
كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِِّ صَلَّى الَّلُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ قَالَ سَِعَ الَّلُ لَِنْ حَِدَهُ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الَْمْدُ حَْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنْ الُْتَكَلِّمُ قَالَ أَنَا قَالَ رَأَيْتُ بِضْعَةً وَثَلَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا (أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ)خ: 997
ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸ_ரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “சமி அல்லாஹுலிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள்.
அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள்.
அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார் என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி – 799
நமது பதில்
மேலே எதிர்த்தரப்பினர் எடுத்துக் காட்டும் புகாரி 799 வது ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் குறித்த செய்தி எதிர்தரப்பினரின் வாதத்திற்குரிய ஆதாரமாக ஆகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரின் நன்மையை எழுதும் விஷயத்தில் மலக்குமார்கள் போட்டியிட்டார்கள் என்பதற்கும் ஒருவர் சுவர்க்கத்திற்குரியவரா? நரகத்திற்குரியவரா? என்று சர்ச்சையிட்டுக் கொண்டதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படுகின்றது.
நாம் ஆய்வுக்குற்படுத்தியுள்ள 100 கொலை செய்தவன் பற்றிய செய்தியில் குறித்த கொலைகாரன் சுவர்க்கத்திற்குரியவன் என்று ஒரு தரப்பாரும், அவன் நரகத்திற்குரியவன் என்று இன்னொரு தரப்பாரும் சர்ச்சைப்பட்டுக் கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இது மலக்குமார்களின் தன்மைக்கு மாற்றமானது. இறைவனின் கட்டளைக்கு மாறு செய்யாமல் அவன் இட்ட கட்டளையை அப்படியே ஏற்று நடக்கும் மலக்குமார்கள் இப்படி சர்சைப்பட மாட்டார்கள். இறைவனும் இரு தரப்பு மலக்குமார்களுக்கும் கட்டளையிட மாட்டான். என்பதே நமது வாதமாகும்.
இதே நேரத்தில் புகாரி – 799வது செய்தியில் நன்மையை பதிவதற்காக மலக்குமார்கள் போட்டியிட்டுக் கொண்டதாக இடம் பெற்றுள்ளது. இது அல்குர்ஆன் கூறும் மலக்குமார்களின் இலக்கணத்திற்கு மாற்றமானது அல்ல. காரணம் அவர்கள் அனைவரும் குறித்த விஷயம் நல்லது என்பதினால் அதனைப் பதிவு செய்வதற்கு போட்டியிட்டார்கள்.
ஆனால் 100 கொலை செய்தவன் பற்றிய செய்தியில் இரு தரப்பு மலக்குமார்கள் குறித்த மனிதன் சுவர்க்கமா? நரகமா? என்பதில் சர்சைப்பட்டுக் கொண்டார்கள். போட்டியிடுவது என்பது வேறு சர்ச்சைப்படுவது என்பது வேறு என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர் வாதம் :
“இஸ்ரவேல் சமுதாயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். கொலை செய்தவனுக்கு மன்னிப்பில்லை, அவன் நிரந்தரமாக நரகத்தில் இருப்பான் என்பது நமக்குரிய சட்டமாகவே அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். ஆகவே இது முன்னைய சமுதாயத்திற்குரிய சட்டம் என்றே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தச் செய்தியை உண்மை என்போர் வாதிக்கின்றார்கள்.
நமது பதில் :
இஸ்ரவேல் சமுதாயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத் தான் நபி (ஸல்) கூறுவதாக குறித்த செய்தி குறிப்பிடுகின்றது என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இஸ்ரவேல் சமுதாயத்திற்கும் கொலை மன்னிப்பில்லாத குற்றம் என்பதே சட்டமாக இருந்தது என்று குர்ஆன் நமக்கு கற்றுத் தருகின்றனது.
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்’ என்றும், “ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.
(அல்குர்ஆன்:05:32.)
கொலை செய்வது நமக்கு மாத்திரமன்றி இஸ்ரவேல் சமுதாயத்திற்கும் தடை செய்யப்பட்ட பெரும் பாவம் என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு விபரிக்கும் போது இஸ்ரவேல் சமுதாயத்திற்கு கொலை செய்தவனுக்கு மன்னிப்பு கொடுப்பதாக சட்டம் இருந்தது என்று கற்பனையாக கருத்து சொல்வோர் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 100 கொலை செய்தவன் பற்றிய செய்தி அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் சரியாக இருந்தாலும் புனிதக் குர்ஆனின் கட்டளைகளுக்கும், வசனங்களுக்கும் நேர் மாற்றமாக இருப்பதினால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே தெளிவான நிலைபாடாகும்.