மீஸான் தராசை நிரப்புவோம்!
சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். மறுமை நாளில் நாம் ஒவ்வொரு நம் நன்மை தீமையின் எடைகளுக்கு தகுந்தவாறு தான் சுவனமோ, நரகமோ செல்லமுடியும். இதனை திருமறைக் குர்ஆன் தெள்ளத் தெளிவாக நமக்கு சொல்லித் தருகிறது.
எடை போடப்படும்
அன்றைய தினம் நன்மை தீமைகளை எடைபோடுவது சத்தியம் ஆகவே எவருடைய எடை(நன்மையால்) கனமானதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.
(அல்குர்ஆன் : 7-8)
அந்த நாளில் வெற்றி பெறுவதற்கு தொழுகை, நோன்பு, தான தர்மம் போன்ற நற்காரியங்களை அதிகமதிகம் செய்யவேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும், பல நேரங்களில், சோர்வின் காரணமாக, பொருளாதாரத்தின் காரணமாக பல அமல்களை நாம் செய்யத் தவறி விடுகிறோம். இதனால் மறுமையில் மனிதன் நன்மைகளை குறைவாகப் பெற்று, தீமை அதிகரித்து நரகில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக இறைவன் ஒரு அற்புதமான ஏற்பாட்டை நமக்கு செய்து தருகிறான். அது தான் இறைவனை திக்ர் செய்தல், தஸ்பீஹ் செய்தல், தக்பீர் கூறுதல் போன்றவை. இதற்கு ஒரு மனிதன் எடுக்க வேண்டிய முயற்சி என்ன? ஒரு சில நிமிடங்கள் தான். ஏன் சில நொடிகளில் கூட மீஸானை நிரப்புகிற நன்மைகளை எளிதாக செய்து விட முடியும்.
வானம், பூமி நிறைகின்ற தஸ்பீஹ்
தூய்மை ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று சொல்வது) எடையை நிறைக்கின்றது. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் (என்று சொல்வது) வானம், பூமிக்கு இடையில் உள்ளவற்றை நிறைக்கின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறிமை பிரகாசமாகும்.
குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகும். மக்கள் அனைவரும் முயற்சி செய்கின்றனர். தமது ஆத்மாவை (சுவனத்திற்காக) விற்று அதை விடுதலை செய்து விடுகின்றனர். அல்லது அதை (நரகத்திற்காக விற்று) நாசப்படுத்தி விடுகின்றார்.
அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரி,
நூல் : முஸ்லிம் 328
கடல் நுரை அளவும் கரைந்து போகும் பாவங்கள்
”சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6405
பாவங்கள் மன்னிக்கப்படுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால்,
“உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களது இறைவன், “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான்.
அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான். “அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கின்றார்களா?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை. உன் மீது ஆணையாக அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?” என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள். இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் என்னிடம் என்ன வேண்டுகின்றார்கள்” என்று கேட்பான். “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கின்றனர்” என்று வானவர்கள் கூறுவார்கள்.
“அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?” என்று இறைவன் கேட்பான். “இல்லை. உன் மீது ஆணையாக அதிபதியே, அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன் “அவ்வாறாயின் அதைப் பார்த்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்” என்று கேட்பான். “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.
”அவர்கள் எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்?” என்று இறைவன் வினவுவான். “நரகத்திலிருந்து” என்று வானவர்கள் பதிலளிப்பர். “அதனை அவர்கள் பார்த்திருக்கின்றார்களா?” என்று இறைவன் கேட்பான்.
வானவர்கள், “இல்லை, உன் மீது ஆணையாக அதை அவர்கள் பார்த்ததில்லை” என்று கூறுவர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்?” என்று கேட்பான்.
”நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்று வானவர்கள் கூறுவர். அப்போது இறைவன், “ஆகவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன்” என்று கூறுவான்.
அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “இன்ன மனிதன் உன்னைப் போற்றுகின்ற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ ஒரு தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்று கூறுவார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் பாக்கியமற்றவனாக ஆக மாட்டான்” என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6408
எனவே, இனிவரும் காலங்களில் இந்த அமலின் நன்மைகளை விளங்கி, அதிகமதிகம் தஸ்பீஹ் செய்யும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!