சத்தியத்தை உரக்கச் சொல்வோம்!

இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வருபவர்களுடன் போர் புரிவது மட்டுமே ஜிஹாத் என்று பெரும்பாலான மக்கள் விளங்கி இருப்பதனால் தான் ஆளாளுக்கு வாள் ஏந்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் வாள் ஏந்துவதை ஜிஹாத் என்று குறிப்பிடுவதைப் போல நியாயத்திற்காக நாவினால் குரல் கொடுத்தலும் ஜிஹாத் என்றே கூறுகிறது.

ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்  : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),

நூல் : நஸயீ 4138

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்  : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),

நூல் : அஹ்மத் 18074

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,”அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்  : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),

நூல் : அஹ்மத் 18074

“ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : அபூதாவூத் 3781

மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் ஆட்சியாளர்களின் தவறுகளையும், அவர்களின் நியாயமற்ற போக்குகளையும் சுட்டிக்காட்டி நாவினாலும், எழுத்திக்களினாலும் தைரியமாக எதிர்ப்பதும் ஜிஹாத் தான் என்பதையும், மேலும் அது தான் சிறந்த ஜிஹாத் என்பதையும் விளங்க முடியும்.

மூன்று வழிகளில் தீமையை தடு.

எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள். அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். தாம் செய்யாதவற்றை அவர்கள் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப் படாதவற்றைச் செய்வார்கள். ஆகவே யார் இவர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறை நம்பிக்கையாளர் தாம். இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.

அறிவிப்பவர்  : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : முஸ்லிம் 71

மேற்கண்ட ஹதீஸ் முஃமின்களின் பண்பைப் பற்றிக் கூறும்போது கை, நாவு, உள்ளம் ஆகிய மூன்று வழிகளிலும் தீமைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை ஜிஹாத் என்று குறிப்பிடுகின்றது.

உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அனஸ் (ரலி),

நூல் : நஸயீ 3141

மேற்கண்ட ஹதீஸ் கை, நாவு, பொருளாதார உதவி ஆகிய மூன்று வழிகளில் தீமைக்கெதிராக போர் புரிவதையும் ஜிஹாத் என்று தான் சொல்கிறது.

இதன்மூலம் அநீதி, அக்கிரமம் போன்ற எத்தகைய தீமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் ஜிஹாத் தான் என்பதைத் தெளிவாக விளங்க முடிகிறது.

மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் தீமைக்கு எதிராக போராடி, சத்தியத்தை எடுத்துச் சொல்லி ஜிஹாத் செய்து நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed