மவ்லித் நபியவர்களுக்குத் தேவையில்லை!
”இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை”
(அல்குர்ஆன் 36:69)
என்ற திருமறை வசனத்தின் பிரகாரம், நல்ல கவிதையாக இருந்தால் அதை ஒரு பொழுது போக்கிற்காக ரசிக்கலாமே தவிர அது ஒரு போதும் மார்க்கமாகாது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மவ்லித் வழிபாடல்ல! வழிகேடே!
நபி (ஸல்) அவர்கள் சொல்லாத, செய்யாத, பிறர் செய்து அதை அங்கீகரிக்காத எந்தக் காரியத்தை வணக்கம் என்ற பெயரில் யார் செய்தாலும் அது வழிபாடு கிடையாது. வணக்கம் கிடையாது. அது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
இந்த ஹதீஸின் அடிப்படையில் மவ்லிது என்ற போலி வணக்கம் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் வணக்கமாகும். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவாக விளக்கி விடுகின்றது.
நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் 3243
மவ்லித் ஓதுபவர்கள் வழிகேடர்கள்!
நபி (ஸல்) அவர்களை இறைவனுடைய அந்தஸ்திற்கு உயர்த்தி அவர்களின் மீது புனையப்பட்ட ஒரு புராணம் தான் இந்த மவ்லிது.
கவிஞர்களை வழிகேடர்கள் தான் பின்பற்றுவார்கள்
(அல்குர்ஆன் 26:224)
என்ற இறைவனின் கூற்றுக்கேற்ப இந்தக் கவிதை வரிகளின் மூலம் மௌத் ஓதும் சமுதாயம் வழிகேட்டில் வீழ்ந்து விட்டது.
மவ்லித் ஓதுபவனின் மறுமை நிலை!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ”இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் ”உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று சொல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6585
மவ்லிது ஓதுபவர்கள் தங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்கும், ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தான் ஓதுகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸின்படி இவர்கள் தடாகத்தை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
”செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும்.
நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும்.
காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.
புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும்.
ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
இதன்படி நரகம் தான். அல்லாஹ் நம்மைக் காப்பானாக! ஆக, மார்க்கத்தில் மீலாது, மவ்து போன்ற புது வணக்கங்களைச் செய்வோருக்கு நரகமே தண்டனையாகக் கிடைக்கிறது.