மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்
இனி மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.
குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு
மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும் நிலை ஏற்பட்டதாகும்.
அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் வீடுகள் தோறும் இவ்வளவு முக்கியத்துவத்துடன் ஓதப்படுவதில்லை.
மங்கலமான நிகழ்ச்சிகளுக்கு மவ்லிது என்றும் அமங்கலமான நிகழ்ச்சிகளுக்கு குர்ஆன் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பொருள் தெரியாமல் ஓதினாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கிடைக்கும் என்ற குர்ஆனுக்குரிய தனித்தகுதி முகவரியற்ற யாரோ ஒரு கவிஞனால் இயற்றப்பட்ட பாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
குர்ஆன் எப்படி நோய் நிவாரணம் நாடி ஓதப்படுகிறதோ அவ்வாறே மார்க்க அறிவற்ற மனிதனால் இயற்றப்பட்ட அரபி பாடலைப் பாடி நோய் நிவாரணம் வேண்டப்படுகின்றது.
அல்லாஹ்வின் வார்த்தைக்குச் சமமாகவும், அதற்கு மேலாகவும் மனிதனின் வார்த்தைகள் மதிக்கப்படுவது மவ்லிதினால் ஏற்பட்ட மிக மோசமான விளைவாகும்.
தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.
இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை தொழுகை. மவ்லிதுக்காக இந்தத் தொழுகை இழிவுபடுத்தப்படுவதும் மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகளில் ஒன்றாகும்.
பள்ளிவாசலில் இமாமாகப் பணிபுரியும் சிலர் தொழுகைகளுக்குக் கூட சரியாக வருகை தர மாட்டார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளிவாசல் நிர்வாகிகள் மவ்லிது சபைக்கு வரவில்லையானால் நடவடிக்கை எடுப்பதைக் காண்கிறோம்.
பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது அதன் அருகில் உள்ள வீட்டில் மவ்லிது ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மவ்லிது நிறுத்தப்பட மாட்டாது. அதன் பின்னர் பள்ளியில் தொழுகை நடைபெறும். அந்த நேரத்திலும் மவ்லிதுக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும். மவ்லிது எனும் மிகச் சிறந்த வணக்கத்தை (? நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது தொழுகை எல்லாம் பெரிய விஷயமா என்ன?
இப்படி தொழுகையை அலட்சியம் செய்யுமளவுக்கு மவ்லிது வெறி வேரூன்றியுள்ளது.
பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன் 72:18) என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
இந்தக் கட்டளைக்கு மாற்றமாக பள்ளிவாயிலில் நபியே! ரஸுலே! முஹ்யித்தீனே! நாகூராரே! என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களிடம் பிரார்த்திக்கின்றனர். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடுவதற்காகக் கட்டப்பட்ட அவனுக்குச் சொந்தமான ஆலயத்தில் அவனது கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இதனால் பள்ளிவாயிலின் புனிதம் கெடுகின்றது.
பிறமதக் கலாச்சார ஊடுருவல்
பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரணப் பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும் என்பது பிற சமயத்து நம்பிக்கை!
பூஜை நடத்தப்படுவதற்கு முன் சாதாரண சர்க்கரையாக இருந்தது பூஜைக்குப் பின் பிரசாதமாக மாறி விடுகிறது. துளியளவாவது கிடைக்காதா என்று பெரும் செல்வந்தர்களும் போட்டியிடும் அளவுக்கு அதில் ‘என்னவோ’ இறங்கி விட்டதாக நம்புவது பிற சமயத்து நம்பிக்கை.
மவ்லிது ஓதப்படுவதற்கு முன் சாதாரண பேரீச்சம் பழம் மவ்லிது முடிந்தவுடன் தபர்ருக் (பிரசாதம் என்னும் நிலைக்கு உயர்கிறது. ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைப் பெறுவதற்காக கோடீஸ்வரர்களும் கியூவில் நிற்கும் நிலை! சாதாரண ஒரு மனிதனின் கவிதையைப் படித்தவுடன் சாதாரணப் பொருளும் பிரசாதமாக மாறிவிடும் என்று நம்புவது ஏகத்துவத்துக்கு எதிரானது அல்லவா? பிறமதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டது அல்லவா?
பிறருக்கு இடையூறு செய்தல்
இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அமைதியாகவும், அடுத்தவருக்கு இடையூறு இராத வகையிலும் நிறைவேற்றப்பட்ட வேண்டியவை. இதை மற்றவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.
மவ்லிது சீசனில் வீடுகளில் ஒலிபெருக்கியை அலறவிட்டு இந்த மவ்லிதுக் கச்சேரியை நடத்துகின்றனர். நபியைப் புகழ்கிறோம் என்ற பெயரில் பரீட்சைக்குப் படிக்கும் மாணவன், அமைதியைத் தேடும் இதய நோயாளி, உழைத்துக் களைத்து உறங்கும் சராசரி மனிதன் இன்னும் அமைதியை விரும்பும் மக்கள் ஆகியோரின் உறக்கத்தையும், அமைதியையும் கெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.
பிறர் நலம் பற்றி அக்கறைப்படாத மதத்தவர்கள் சில மாதங்களில் இவ்வாறு நடக்கிறார்கள் என்றால் தனது நாவாலும் கையாலும் பிறருக்கு இடையூறு அளிக்காதவனே முஸ்லிம்’
புகாரி 10,11,6448 முஸ்லிம் 57,58,59
என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றைப் பேண வேண்டியவர்கள் இப்படி நடக்கலாமா? இவ்வாறு நடக்கச் செய்தது இந்த மவ்லிதுகள் தாம்.
ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது
பெண்கள் மாத்திரம் இருக்கும் இடங்களுக்கு அன்னிய ஆண்கள் செல்லக்கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. எந்த ஒரு ஆணும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3006, 5233.
மவ்லிதைக் காரணம் காட்டி பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு ஆண்கள் செல்ல முடிகிறது. இப்படிச் செல்வதால் எழுதக் கூசும் சமாச்சாரங்கள்’ நடப்பதை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இதற்காகவே அடித்து உதைத்து ஊரை விட்டு விரட்டப்பட்ட பேஷ் இமாம்களையும் நாம் அறிவோம்.
ஒழுக்கக் கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த வாசலைத் திறந்து வைத்தால் கெடாதவனும் கெட்டுவிடத் தான் செய்வான்.
பெருமையும், ஆடம்பரமும்
உன் வீட்டு மவ்லிதை விட என் வீட்டு மவ்லிது பெரியது என்று பெருமையடிக்கும் வகையில் அலங்காரங்கள், மேற்கட்டுகள், மலர் ஜோடனைகள், வண்ண வண்ண விளக்குகள், காகித வேலைப்பாடுகள் ஆகியவற்றை நாம் காண்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இந்த ஆடம்பரங்களையும் வீண் விரயங்களையும் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறார்கள் என்பது அறிவுக்குச் சிறிதளவாவது பொருந்துகிறதா? சிந்தியுங்கள்!
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 6:141, 7:31.
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17:27
அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.
அல்குர்ஆன் 25:67
இவ்வளவு மோசமான விளைவுகளை இந்த மவ்லிதுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தி இருப்பதுடன் திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதக் கூடியதாகவும் அமைந்துள்ளன. ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில வரிகளை நாம் ஆராய்ந்தால் இதை உணரலாம்
பாவங்களை நபிகள் நாயகம் மன்னிக்க முடியுமா
كَفِّرُوْا عَنِّيْ ذُنُوْبِيْ
وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
“யா நபி (நபியே! ) ” என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை.
يَا مَنْ تَمَادَى وَاجْتَرَمْ
تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ
குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக் கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும் ஹரமில் (மதீனாவில் தங்கியுள்ளவர்களிடம் கேள்! ‘
சல்லூ அலாகைரில் இபாத்’ என்ற பாடலின் சில வரிகள் இல்லை.
وَاعْطِفْ عَلَيَّ بِعَفْوٍ مِنْكَ يَشْمَلُنِيْ
உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
யாஸையிதீ’ என்ற பாடலின் வரி இது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமா? பாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக!
(அல்குர்ஆன் 39:53)
தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கிறான்.
இதனால் தான் எத்தனையோ நபிமார்கள் சில நேரங்களில் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த போது, சிறிய தவறுகள் அவர்களிடம் நிகழ்ந்து விட்ட போது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர். அல்லாஹ் தங்களை மன்னிக்காவிட்டால் தாங்கள் பெரு நஷ்டம் அடைய நேரும் எனவும் கூறியுள்ளனர்.
ஆதம் (அலை அவர்களும் அவர்களின் மனைவியும் இறைக்கட்டளைக்கு மாறு செய்த பின்
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர்.
(அல்குர்ஆன் 7:23)
இறைவன் தம்மை மன்னிக்காவிட்டால் தாம் பெரு நஷ்டம் அடைய நேரும் என்று இருவருமே ஒரே குரலில் கூறியுள்ளனர்.
நூஹ் (அலை அவர்கள் தமக்கு ஞானமில்லாத விஷயம் பற்றிப் பிரார்த்தனை செய்த போது இறைவன் அவர்களைக் கடிந்து கொள்கிறான். அவர்களும் கூட ஆதம் (அலை அவர்களைப் போலவே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடியுள்ளனர்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 11:45, 46, 47)
மூஸா (அலை அவர்கள் ஒருவரைக் கொலை செய்து விட்டு வருந்தும் போது அதற்காகவும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புத் தேடினார்கள்.
அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடி னார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்
(அல்குர்ஆன் 28:15, 16, 17.
மூஸா (அலை அவர்களின் சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துப் பின்னர் தங்கள் தவறை உணர்ந்த போது மூஸா (அலை அவர்களிடம் பாவ மன்னிப்புக் கோராமல் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கேட்டுள்ளனர். தாங்கள் வழி தவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்கா விட்டால் நஷ்ட மடைந்தோராவோம் என்றனர்.
(அல்குர்ஆன் 7:149)
நபிமார்களில் எவருக்கும் வழங்கப்படாத ஆற்றலும் அதிகாரமும் வழங்கப்பட்ட சுலைமான் (அலை அவர்களும் கூட தமது தவறுக்காக அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோரியுள்ளனர். ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல் எனக் கூறினார்.
(அல்குர்ஆன் 38:34, 35)
திருக்குர்ஆனில் மிகவும் உயர்வாக இறைவனால் பாராட்டப்பட்ட இப்ராஹீம் (அலை அவர்களும் அல்லாஹ் தான் தமது தவறுகளை மன்னிக்க முடியும் என்று கூறியுள்ளனர். அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர் பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான். தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
(அல்குர்ஆன் 26:78, 79, 80, 81, 82)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரண மின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர் களின் குற்றத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவில்லை. இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் விலக்கி வைத்தனர். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 9:118 (புகாரி 4418, 4677 ஆகிய ஹதீஸ்களில் முழு விபரம் காணலாம்.)
மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்ப தால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களைத் தான் மன்னித்து விட்டதாக (அல்குர்ஆன் 48:2 இறைவன் கூறுவதும்,
‘இறைவா! என்னை மன்னித்து அருள்புரி’ என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 23:118)
என்று இறைவன் கட்டளையிடுவதும் மன்னிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இல்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி விளக்குகின்றன.
‘அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்கிறேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி&ள்ளனர்
அறிவிப்பவர்: அல் அகர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4870
பாவமன்னிப்பு வழங்குவது அல்லாஹ்வின் தனி அதிகாரம் என்பதற்கு இவை உறுதியான சான்றுகள்! இத்தனை சான்றுகளுடனும் மேற்கண்ட மவ்லிது வரிகள் நேரடியாக மோதுவதால் மவ்லிது ஓதுவது பாவம் என்பதை அறியலாம்.