மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை
மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துதல் மனித உயிர்களை பறித்தல் வறுமையை ஏற்படுத்துதல் போன்ற எந்த தீங்கும் ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படாது. மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகேட்டிற்கு அழைப்பு விடுவது மட்டுமே கெட்ட ஜின்களால் ஏற்படும் தீங்காகும்.
கெட்ட ஜின்கள் ஏற்படுத்தும் தவறான எண்ணங்களுக்கு நாம் அடிமையாகினால் நரகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதைத் தவிர வேறு எந்த தீங்கும் ஜின்களால் ஏற்படாது.
ஜின்களால் வழிகெடுக்கப்பட்டவர்கள் மறுமையில் புலம்புவதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேருக்கும் நாளில் “ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழி கெடுத்து விட்டீர்கள்” (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் “எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர” (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (6 : 128)
எங்கள் இறைவா! ஜின்களிலும் மனிதர்களிலும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டு! அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம் என்று (ஏக இறைவனை) மறுத்தோர் கூறுவார்கள்.
அல்குர்ஆன் (41 : 29)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
அல்குர்ஆன் (114 : 4)