பொறாமை நன்மையைத் அழித்து விடுமா?
பொறமை கொள்வது கூடாது என்பதை வலியுறுத்தும் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் இருப்பதைப் போன்று சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4257
இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் (பாகம் 9 பக்கம் 10) முஸ்னது பஸ்ஸார் (8412) உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இப்றாஹீம் பின் அபீ அசீத் என்பாரின் பாட்டனார் இடம் பெற்றுள்ளார். இவரது பெயர் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. இவர் யாரென்று அறியப்படாத நபர் ஆவார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாததால் இது பலவீனமான செய்தியாகிறது.
கசப்புக்காய் தேனைப் பாழாக்கி விடுவதைப் போன்று பொறாமை இறைநம்பிக்கையைப் பாழாக்கி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹீதா
இந்தச் செய்தி அபூமன்சூர் அவர்களின் முஸ்னது தைலமீ எனும் நூலில் (பாகம் 2 பக்கம் 100) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் மகீஸ் பின் தமீம் என்பார் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இதை அபூஹாதம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
(இலலுல் ஹதீஸ் பாகம் 1 பக்கம் 442)
எனவே இந்த செய்தியும் பலவீனமானதாகும்.