பெண்கள் விருந்து பரிமாறலாமா?

திருமணம் முடிக்கும் போது கணவர் பணக்காரராக இருப்பார். பிறகு வறுமையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

சில வீடுகளில் வேலை குறைவாக இருக்கும். சில வீடுகளில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனைவி தன்னை மாற்றிக் கொண்டால்தான் தம்பதிகள் இருவரும் உளப்பூர்வமாக இருப்பதாக அர்த்தம் கொள்ளமுடியும்.

அதேபோன்று திருமணம் முடிக்கும் போது ஏழ்மையாக இருந்து, பின்னர் செல்வந்தராக கணவர் மாறினாலும் நமக்குத்தானே அவைகளும் கிடைக்கும் என்று பெண்கள் நினைத்து செயலாற்ற வேண்டும். அதேநேரம் ஏழ்மையாக இருக்கும் போதும் அதிலும் நாம்தான் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துப் பெண்கள் கணவன்மார்கள் வீட்டில் பணியாற்ற வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு சுமையாகவே கருதக் கூடாது.

இப்படித்தான் அல்லாஹ் நம் வாழ்க்கைத் தீர்ப்பை அமைத்துள்ளான் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது தந்தையர் வீட்டில் இருக்கும் போது, ஏழ்மையைப் போக்குவதற்காக, அல்லது நம் தாய் தந்தையர் கஷ்டப்படும் போது நாமும் சேர்ந்து உதவியாக இருந்து ஒத்துழைப்போம். வறுமைக்காக வேண்டி சிலர், வீட்டிற்குள்ளேயே பெண்கள் அப்பளம் தயாரித்தல், தீக்குச்சி அடுக்குவது, துணிகளில் பிசிறு வெட்டுவது, தையல் தைப்பது போன்ற சிறு குறு குடிசைத் தொழில்களை பெற்றோர்களோடு பெண் பிள்ளைகளும் ஈடுபடத்தான் செய்வார்கள்.

அதுபோன்று கணவர் வீட்டிலும் இருந்து கொள்வதுதான் ஏற்றது. இப்படியெல்லாம் கணவர் வீட்டில் பெண்கள் தாராளத் தன்மையோடு நடந்து கொண்டால் அது அழகான குடும்பமாக மாறிவிடும். கணவர் வீட்டில் இருக்கும் போது வெளியாட்களோ, விருந்தாளிகளோ வந்தால், அவர்களைப் பெண்கள் விருந்துக்காக உபசரிப்பது தவறொன்றுமில்லை. ஆனால் இந்தச் சட்டத்தை சமூக மக்கள் தவறாக விளங்கியுள்ளனர்.

முஸ்லிம் குடும்பங்களில் விருந்தாளிகள் வந்தாலும் அந்த வீட்டிலுள்ள முஸ்லிம் பெண்களில் பெரும்பாலும் உணவுப் பொருட்களைப் பரிமாறவே மாட்டார்கள். எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு அப்புறமாக விருந்தாளிகளை உண்பதற்காக அழைப்பார்கள். வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் அவர்களாகவே உணவை எடுத்து வைத்துக் கொள்வார்கள். அல்லது வீட்டிலுள்ள ஆண்கள் எடுத்து வைப்பார்கள்.

விருந்தாளிகளுக்குப் பெண்கள் பரிமாறுவதையோ அல்லது ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே சபையில் அமர்ந்து உண்ணுவதைக் கூட நம் சமூகம் தவறாக நினைக்கிறது. அப்படிச் செய்வது கூடாது என பலர் நினைக்கின்றனர். கணவன் மனைவி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கூட நம் சமூகம் இன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிக்குடும்பமாக இருந்தால் இது சாத்தியமாக இருக்கலாம். கூட்டுக் குடும்பமாக இருந்தால் இந்தச் செயல் மாமியார் மூலமாகக் கண்டிக்கப்படும் அவலங்களையும் சமூகத்தில் பார்க்கிறோம்.

இப்படியெல்லாம் இஸ்லாத்தில் எந்தத் தடையும் கிடையாது. தேவைப்பட்டால் கணவனுடன் சேர்ந்து சாப்பிடலாம். குடும்பத்தார் எல்லாரும் சாப்பிடும் போது ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். எனினும் ஒரே குடும்பத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சாப்பிடும் போது, மஹ்ரமான ஆண்கள் இருந்தால் பெண்கள் தங்களது பர்தா முறையான முகம், முன் கைகள் தவிர அனைத்தையும் மறைத்துக் கொண்டு சாப்பிடலாம். இதுபோன்று குடும்பத்துடன் சாப்பிடுவதற்கும் மார்க்கம் அனுமதிக்கிறது.

அதேபோன்று அந்நிய ஆண்கள் விருந்தில் கலந்து கொண்டாலும் பர்தாவுடன் ஒரு பெண் விருந்தாளிகளை உபசரித்து பரிமாறிக் கொள்ளவும் செய்யலாம். பெண்கள்தான் பரிமாற வேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றுமில்லை. அதே நேரத்தில் பெண்கள் பரிமாறிக் கொள்ள ஆசைப்பட்டால் பரிமாறலாம். தவறொன்றுமில்லை. இப்படிப் பெண்கள் பரிமாறுவதை சமூகம் தவறாகவும் நினைக்கக் கூடாது. சபையில் பெண்கள் பரிமாறவும் செய்யலாம். பரிமாறாமலும் இருக்கலாம். இரண்டுமே ஆகுமான காரியம் தான்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?’’… அல்லது “இவருக்கு விருந்தளிப்பவர் யார்?’’… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கிறேன்)’’ என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.

(மனைவியிடம்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’’ என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்துவிடு’’ என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார்.

பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்… அல்லது வியப்படைந்தான்’’ என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்’’ என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-3798

இந்தச் செய்தியில் விருந்தாளியாக வந்தவர் ஓர் அந்நிய மனிதர்தான். அவருடன் அந்தப் பெண்மணியும் அவரது கணவரும் விருந்துண்பதைப் போன்று பாவனை செய்து கொண்டனர். இதில் பர்தாவைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றாலும் பர்தா முறையைப் பேணித்தான் ஸஹாபியப் பெண்மணிகள் இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு நபருக்குப் பரிமாறவும் கணவரின் பாதுகாப்புடன் ஒரு பெண் பிறருடன் ஒன்றாக ஒரே சபையில் உட்கார்ந்து சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை.

அதே போன்று அபூ உஸைத் என்ற நபித்தோழர் திருமணம் முடிக்கிறார். அவரது மண விருந்துக்காக நபியவர்களையும், நபித்தோழர்களையும் அழைக்கிறார். ஆனால் இவர்களது வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாது. இவரும் இவரது மனைவி புதுப் பெண்ணும்தான் உணவு, பானங்களை விருந்தாளிகளுக்குப் பரிமாறினார்கள். கல்யாணப் பெண் வேலையே செய்யக் கூடாது என்பதெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப்பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தமது கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

நூல்: புகாரி-5182

இது நபியவர்கள் முன்னிலையில் நடந்த சம்பவம். இப்படியெல்லாம் சபையோர் விருந்தில் பெண்கள் பரிமாறுவது தவறு என்றிருக்குமானால் நபியவர்கள் அதைக் கண்டித்து இருப்பார்கள். ஒரு தனியான அந்நிய ஆணுக்கு, தனியாக ஒரு பெண் மட்டும் இருந்துகொண்டு பரிமாறினால் தான் மார்க்கம் தடை செய்த காரியம் என்றாகும். இந்தச் சம்பவத்தில் கணவன் மனைவி சேர்ந்து இருக்கும் சபை.

இதுபோன்று கணவன் இல்லாமல், பெண் மட்டும் இருக்கிற, பல ஆண்கள் கலந்து கொள்ளும் சபையோருக்கும் பெண்கள் விருந்து பரிமாறுவது தவறாகாது. அதாவது தனிமை என்ற நிலையில்லாமல் இருந்தால் பெண்கள் விருந்துணவை பரிமாறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியமாக உள்ளது.

ஒரு பெண் தனியாக இன்னொரு ஆணுக்கு விருந்து கொடுப்பது கூடாது. அதே நேரத்தில் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை விருந்துக்கு அழைத்தால் அதில் தவறொன்றும் கூறமுடியாது. இந்தச் சம்பவத்தில் ஒரு அன்சாரிப் பெண் நபித்தோழியர்தான் ஆண்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள்.

நபியவர்களுடன் நாங்களும் ஒரு அன்சாரித் தோழியரின் விருந்துக்காகச் சென்றோம். அப்போது அவர்கள் விரிப்பை விரித்து, அதைச் சுற்றி தண்ணீர் தெளித்தார்கள். எங்களுக்காக உணவு தயாரித்திருந்தார்கள். நபியவர்களுடன் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதோம். அப்போது அந்தப் பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காக அறுத்த ஆட்டின் இறைச்சி அதிகமாக இன்னும் மீதம் இருக்கிறது. தாங்கள் மாலை உணவுக்கும் வருவீர்களா?’’ என்று கேட்டதற்கு, நபியவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களுடன் நாங்களும் சாப்பிட்டோம். பிறகு உளூவுச் செய்யாமலே அஸர் தொழுகையைத் தொழுதோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்னத் அபீ யஃலா-2160

இந்தச் செய்தியில் அன்சாரிப் பெண்ணுக்கு சபையில் கணவர் இருப்பதாகவோ அல்லது மஹ்ரமானவர்கள் இருப்பதாகவோ எந்தத் தகவலும் இல்லை. ஒரு பெண் பல ஆண்களுக்கு விருந்துபசரிப்பைச் செய்வதற்கு மார்க்கம் அனுமதியளிக்கிறது. அதே நேரத்தில் ஒரு பெண் தனியாக ஒரு ஆணுக்கு விருந்து கொடுப்பதுதான் மார்க்கம் தடைசெய்த காரியமாகும்.

இன்னும் சொல்வதாக இருப்பின், திருமறைக்குர்ஆனிலேயே இதுபற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை.

ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக்கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன்:24:61.)

சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது குற்றமில்லை என்று இறைவன் சொல்வதிலிருந்து அனைத்து விதமான உறவுகளும் இணைந்து பெண்கள் ஹிஜாபைப் பேணி தாராளமாக உணவு அருந்தலாம் என்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது.

மேலும் 20 பேர் கொண்ட குடும்பத்திற்கு தனித்தனியாக பரிமாறுவது மிகப்பெரும் சிரமத்தைக் பெண்களுக்குக் கொடுப்பதாக அமைந்துவிடும். சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால்தான் கல்யாண வீடுகளில் நடக்கும் வலிமா விருந்து, சபை விருந்துகளெல்லாம் இந்த அடிப்படையிலேயே வைக்கிறோம்.

இன்னும் சிலர் சஹனில் சேர்ந்து சாப்பிடுவதுதான் சுன்னத் என்பார்கள். அப்படியொன்றும் இல்லை என்பதற்கும் இவ்வசனம்தான் சான்றாக இருக்கிறது.

அப்படி ஆணும் பெண்ணும் ஒரே சபையில் சாப்பிடும் போது, பெண்கள் முகம், கைகளை மறைத்தவர்களாக ஹிஜாப் அணிந்து இருப்பது, ஆணும் பெண்ணும் தொட்டுவிடாமல் நடந்து கொள்வது, மார்க்கம் தடைசெய்த பேச்சுக்களைப் பேசாமல் பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டு சாப்பிடுவது குற்றமில்லை. அதுபோன்ற சபைகளில் பெண்கள் பறிமாரிக் கொள்வதும் உபசரிப்பதும் தவறொன்றுமில்லை. இவைகளெல்லாம் குடும்பத்தில் பெண்கள் பேணிக் கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகள்.

அடுத்ததாக, இல்லற வாழ்க்கையில் இன்னும் சில முக்கியமான அம்சங்கள் கணவன்மார்களுக்கு இருக்கின்றன.

கணவன், மனைவிக்கு உணவு கொடுக்கிறான், ஆடை கொடுக்கிறான். இதுபோக பெண்களுக்கென தனியான சிறிய, பெரிய ஆசைகள் இருக்கும். மனவிருப்பங்கள் இருக்கும். அது மிகவும் அத்தியாவசியமானதாகக் கூட இருக்காது. சாப்பாட்டில், ஆடையில், மருத்துவம் போன்றவற்றில் ஏற்படும் விருப்பம் என்பது கூட அத்தியாவசியம் என்று கூறலாம். ஆனால் இவை அல்லாத உபரியான ஆசைகளும் பெண்களுக்கு இருக்கும்.

உதாரணத்திற்கு, சில பெண்கள் கணவனுடன் வெளியில் சென்று எதையாவது பார்த்து வருவதற்கு ஆசைப்படுவார்கள். அதிலும் சிலர் இருசக்கர வாகனத்தில் கணவனுடன் செல்வதை விரும்புவார்கள். அவற்றையெல்லாம் கணவன்மார்கள் நிறைவேற்றிக் கொடுப்பது குடும்ப உறவில் நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தும்.

கணவன்மார்கள் எத்தனை வேலைகள் இருந்தாலும் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைக்கிற போது கிளம்பி விடுகிறார்கள். ஆண்கள் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதைப் போன்று பெண்களின் சிற்சில ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பது முக்கியம்.

மார்க்கம் தடைசெய்த இடங்களுக்கோ சபைகளுக்கோ அழைத்துச் செல்லக் கூடாது. அதே நேரத்தில் மார்க்கம் அனுமதியளிக்கின்ற பொழுதுபோக்குகளில் ஆண்களைப் போன்று பெண்களும் கலந்து கொள்வதற்கு, பார்வையிடுவதற்கு ஆண்கள்தான் மனைவிமார்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *