பித்ராவை முஸ்லிம்களுக்கு மட்டும் தான் கொடுக்க வெண்டுமா?
இது குறித்து நேரடியான எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. பொதுவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்ட எல்லா தர்மங்களும் தேவையுடையவர்களைக் கருத்தில் கொண்டதாகும். எல்லா தர்மங்களையும் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுக்கலாம்.
ஆனால் பித்ரா தர்மத்துக்கு இது பொருந்தாது.
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1609
இதில் ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டு இந்த தர்மம் ஏற்படுத்தபட்டுள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸ்லிம் ஏழைகள் என்று பிரித்துக் கூறவில்லை என்பதால் இது அனைவரையும் குறிக்கும் என்று தான் மேலோட்டமாகப் பார்க்கும் போது தெரியவருகிறது.
ஆனால் இது பொதுவான தர்மம் பற்றிக் கூறவில்லை. பொதுவான ஏழைகளைப் பற்றியும் கூறவில்லை. நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் ஏழை முஸ்லிம்கள் பெருநாள் தினத்தில் பட்டிணி கிடக்கக் கூடாது என்பதையே குறிப்பிட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.
அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
இந்த தர்மத்தை பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நிபந்தனையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவான தர்மம் என்றால் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்குக் காரணம் முன்னர் கொடுத்தால் தான் பெருநாள் அன்று உணவாக பயன்படுத்த உதவும் என்பது தான்.
ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் பெருநாள் தொழுகைக்கு முன்பே கொடுப்பதையும், பின்னால் கொடுப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள்.
இதன் படி முஸ்லிம் எழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்காகவே இந்த தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
இந்தப் பண்டிகையை முஸ்லிம் அல்லாதவர்கள் கொண்டாட மாட்டார்கள். அவர்களுக்குச் சம்மந்தமில்லாத பண்டிகை என்பதால் முஸ்லிம்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
எழை முஸ்லிம்களுக்கு வழங்கியது போக மீதமாக இருக்கும் அளவுக்கு பித்ரா நிதி கைவசம் இருந்தால் அப்போது முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுத்தால் அது குற்றமாகாது