ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா?

ரமலான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு விடுகிறான்…

ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது வஸ்வாஸ் வருகிறது எப்படி?

ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899) 

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

இதன் கருத்து என்ன?

ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்தக் கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரீ-1903

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு மனைவியுடன் ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டார் என்று புகாரி 1936 வது ஹதீஸ் கூறுகிறது. நோன்பு வைத்திருக்கும் நபித்தோழரின் கட்டுப்பாட்டை ஷைத்தான் குலைத்து விட்டான் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed